ரவூப் ஹக்கீமின் சமயோசிதம்..!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றமை குறித்து முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் பெறும் நோக்குடன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஹசன் அலி ஆகியோருடன் எமது இணையம் தொடர்புகொள்ள முயன்றது. அம்முயற்சி பலன்தராத நிலையில் ரவூப் ஹக்கீமுடன் மிகவும் நெருக்கமான வட்டாரமொன்று மு.கா. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகிறோம்.
அரசின் கைப்பொம்மையாக செயற்பட சிலர் இருப்பதும் அவர்கள் அரசின் அஜண்டாவை கட்சிக்குள் திணிப்பதும் வழக்கம்தான். அந்த கைங்கர்யமும் இம்முறை இனிதே நடந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அனால் எந்த தில்லுமுல்லு செய்தாவது அரசு எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேதான் ஆகும். பெட்டியை மாற்றியோ புரட்டியோ அது நடக்கும். ஆயுதக் குழுக்கள் இன்னும் களையப்படாமல் உள்ளன. கடந்த தேர்தலில் திருகோணமலையை வென்று, மட்டக்கிளப்பில் எதிரபார்த்ததை விட முன்னேறியும் நமது கோட்டையை ஒரு ஆசனத்தால் பரிகொடுப்போம் என்று நினைத்தோமா..?
அதனால் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று அவர்கள் வென்றார்கள். அன்று நடந்தது இன்று வேறு கோணத்தில் நடக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியும் வலுவிழந்து போயுள்ள நிலையில் நாம் சமயோசிதமாக நடந்தாக வேண்டும். அரசுடன் நம்மை சேரச்சொன்னதில் கிழக்கு மக்களுக்கும் பங்குண்டு. இன்று விலகச்சொல்வது கட்ச்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தாதா ?
தமிழர்களின் உரிமைகளை நாம் மறுக்க முடியாது. ஆனால் இனவாத அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நாமும் இனவாதிகள்தான் என்று காட்டிக்கொடுத்து இன்னும் வாங்கிக்கட்டத்தான் வேண்டுமா ?
இந்த அரசுக்கு பாடம் புகட்ட இதுவல்ல தருணம். இப்போதும் அரசு பலமாகத்தான் இருக்கிறது . எதிரணிகள் ஒண்டு சேர்ந்து, மக்கள் ( சிங்கள ) அணி திரளும் நேரம் வரை கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
இது வரை எல்லாத் தேர்தல்களிலும் அரசை எதிர்த்த நாம் அவர்களிடமிருந்து சலுகைகளை பெறுவதும், உரிமை பற்றிப் பேசுவதும் பொருத்தமானதா..? இந்தத் தேர்தலிலாவது எமது பலத்தால் அவர்களை தலை நிமிர வைத்தோம் என்கிற உரிமையுடன் இதன் பிறகாவது நாம் எதையாவது நமது மக்களுக்காக செய்யமுடியும்.
ஒரு பலமில்லாத முதல் அமைச்சர் இருப்பதை விடவும் மத்தியில் நாம் சாதிக்கக்கூடியவர்களாக பலம் பெறுவது நல்லதல்லவா..?
எனவும் ரவூப் ஹக்கீமுடனும், முஸ்லிம் காங்கிரஸுடனும் நெருக்கமான அந்த வட்டாம் மேலும் தெரிவித்தது.
Post a Comment