Header Ads



நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் சுதந்திரமும் பொலிஸ் திணைக்களத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'தற்போது எவரும் பொலிஸார் மீது செல்வாக்கு செலுத்துவதில்லை. பொலிஸார் அமைச்சர்களிடமிருந்து கட்டளைகளை பெற்றுக்கொள்வதுமில்லை. நாட்டில் குற்றச்செயல்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்; குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கும் சட்டத்தை அமுலாக்குவதற்கும் போதுமானளவு சுதந்திரம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.

நாட்டில் குற்றச்செயல்கள் திடீரென்று அதிகரித்துள்ளதென்பதை  அவர் மறுத்துள்ளார். 'பொலிஸாரின் அல்லது எனது அல்லது அரசாங்கத்தின் தவறுகள் தற்போதைய குற்றச்செயல்களுக்கு காரணமல்ல. தந்தையொருவர் தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினாலோ அல்லது வளர்ப்புத் தந்தையொருவர் தனது வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினாலோ பொலிஸாரின் மீது மக்கள் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? ஆத்திரம் காரணமாக மக்கள் கொல்லப்பட்டால்  அதற்கு பொலிஸாரா பொறுப்பு? இக்குற்றச்செயல்களை பொலிஸாரினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மதத்தலைவர்கள், பெற்றோர்கள், ஊடகம் ஆகியன இதற்கு உதவ வேண்டும்' எனவும் அவர் கூறினார். 

'மறுபக்கத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாவிடிலோ அல்லது அணி சேர்ந்த குழுக்கள் கிராமங்களில் தவறாக நடந்தாலோ அல்லது அவர்கள் சமூகத்திலிருந்து நீக்கப்படாதுவிடினோ அதற்கு பொலிஸாரே பொறுப்பாவார். ஆகையினால் ஒருவரின்  அந்தஸ்து எப்படியிருப்பினும்  அவர் குற்றமிழைத்தால் அதற்கான தண்டனை வழங்குவதற்கான அதிகாரங்களையும் சுதந்திரத்தையும் நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்' எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.