ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தப் பார்க்கின்றது அரசு!
தேர்தலொன்று வரும் போது கட்சிகளுக்குள் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கி விடுகின்றன. அதுவும் மு.காங்கிரசுக்கு இது வாடிக்கையாகும்! தேர்தல் காலங்களில் மு.கா.வுக்குள் உடைவுகள் நிகழ்வதும், பிரிவுகள் ஏற்படுவதும் கால காலமாக நிகழ்ந்தே வருகின்றன. ஆனால், தமது கட்சிக்குள் காணப்படும் மிகப் பெரிய உள்ளக ஜனநாயகமே இவ்வாறான கலகங்கள் நிகழ்வதற்குக் காரணம் என – மு.கா. தலைவர்கள் இதனைப் பூசி மெழுக முயற்சிப்பதுதான் பெருத்த பகிடியாகும்!
'தலை'களும் - தலைவலிகளும்!
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்ட கையோடு மு.கா.வுக்குள் வழமைபோல் இந்தக் 'கூத்து'த் தொடங்கி விட்டது! எப்போதும், மு.கா.வின் சின்னத் தலைகளுக்கும் பெரிய தலைகளுக்கும் இடையில் ஏற்படும் கலவரங்கள், இம்முறை இரண்டு பெரிய 'தலை'களுக்கிடையில் ஏற்பட்டமைதான் ஆச்சரியமானது!
எத்தனைதான் மூடி மறைக்க முற்பட்ட போதும் - அந்த மோதலை மறைக்க மு.கா.வால் முடியவில்லை. மு.காங்கிரசின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் தலைவர் அழைத்துப் பேசிய கூட்டமொன்றின் போதுதான் அந்த 'மோதல்' வெடித்தது! ஆம், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் - தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையில்தான் அந்த 'உச்சகட்ட' போர் நிகழ்ந்தது!
மு.காங்கிரசுக்குள் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குச் சமாந்தரமாகப் பார்க்கப்படுகின்றவர் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்! ஹக்கீமுக்கும் - பஷீருக்கும் இடையில் நல்லதொரு நெருக்கம் இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் ரஊப் ஹக்கீமை மு.கா.வின் தலைவர் பதவியிலிருந்து கவிழ்த்து விடுவதற்கான சதித் திட்டமொன்று அந்தக் கட்சியின் - சில உயர் மட்டத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது, ரஊப் ஹக்கீம் நாட்டில் இருக்கவில்லை. ஆயினும், குறித்த கண்டத்திலிருந்து ஹக்கீமைக் காப்பாற்றியவர்களில் முதன்மையானவர் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் என்பதை பலரும் அறிவார்கள். அதுபோலவே, ஹக்கீமின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில நிகழ்வுகளை – அரசியலுக்காக சிலர் சந்திக்கிழுத்தபோதும், தவிசாளர் பஷீர் - ஒரு கவசமாக நின்று, ஹக்கீமைக் காப்பாற்றினார் என்பதும் - சிலர் அறிந்த உண்மையாகும்!
இப்படி, கட்சியையும் - தலைமையையும் இயலுமான வரை காப்பாற்றிக் கொண்டு வந்த மு.கா.வின் தவிசாளர் பஷீருக்கும், தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் மோதலொன்று வெடித்ததாக வந்த செய்தியை முதலில் நம்ப முடியாமல் இருந்தது. மு.கா. தலைவரும், தவிசாளரும் திட்டமிட்டு, வேண்டுமென்றே முரண்பட்டுக் கொண்ட நாடகமாக இது இருக்குமோ என்றே முதலில் பலரும் எண்ணினர்! ஆனாலும், அது – அப்படியல்ல என்று வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த மோதல் நடைபெறுவதற்கு முன்பாகவே, மு.கா. தலைவர் மற்றும் தவிசாளருக்கிடையில், அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் கருத்து முரண்பாடுகள் குறித்து நமது கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
'எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவதே எனது விருப்பமாகும். இன்றைய காலகட்டத்தில் அவ்வாறு போட்டியிடுவதை மடத்தனமானதொரு செயல் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால், ஒற்றுமையோடு நாம் தனித்துப் போட்டியிடுவோமானால் நமது பலத்தை நிரூபிக்க முடியும்' என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மு.கா. தலைவர் ஹக்கீம் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு, மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் 'தி ஐலன்ட்' எனும் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலொன்றில்ளூ 'எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மு.காங்கிரஸ் - அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதே தனது முதன்மை விருப்பமாகும்' என்று கூறியிருந்தார்.
கிழக்கு மகாணசபைத் தேர்தலில் மு.கா. எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் அந்தக் கட்சியின் தலைவருக்கும், தவிசாளருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட இரு கருத்துக்களையும் நமது கட்டுரையொன்றில் பதிவு செய்து, இரண்டு 'தலை'களும் கட்சிக்குள் இருவேறு திசையில் பயணப்படத் தொடங்குவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்!
எவ்வாறெனினும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றே – அந்தக் கட்சியின் பெரும்பான்மையானோர் விரும்புவாகத் தெரிகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று மு.கா.வின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, அரசுடன் இணைந்து மு.கா. போட்டியிடுவதற்கு அக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தவர்களில் 90 வீதமானோர் கைகளை உயர்த்தி ஆதரவளித்ததாக அறிய முடிகிறது. அதேவேளை, அவ்வாறு இணைந்து களமிறங்கும் போது, சில நிபந்தனைகளை முன்வைக்குமாறும் உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சரி, மீண்டும் மு.கா. தலைவர் - தவிசாளர் மோதல் விவகாரத்துக்கு வருவோம்!
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணிப்பட்டு தேர்தல்களில் குதிக்கும் போதூன் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும் என்று – பல வருடங்களுக்கு முன்பிருந்தே மு.காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறிவருகின்றார். இந்த அடிப்படையில், கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரசோடு - அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்துக் கொண்டு களமிறங்க வேண்டும் என்பது மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் திட்டமாகும். இதற்காக, அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடன் நேரடியாகவும், அமைச்சர் அதாஉல்லாவுடன் தொலைபேசி மூலமாகவும் பஷீர் பேசியதாகவும் அறிய முடிகிறது.
ஆனால், இவ்வாறாதொரு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மு.கா. தலைவருக்கு தவிசாளர் பஷீர் தெரியப்படுத்தியிருக்கவில்லை. தனது திட்டமானது சமூக நலன் சார்ந்த விடயமென்பதால் எல்லோரும் இதை விரும்புவார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே – தான் இந்தத் திட்டத்தினை முன்னெடுத்ததாக தவிசாளர் பஷீர் கூறுகின்றார். ஆனாலும், தேர்தலொன்றினை எதிர் கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், சிறிய முஸ்லிம் கட்சிகளிடம் இறங்கிச் சென்று மு.கா. தவிசாளர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமையானது சரியானதொரு செயலல்ல! மு.காங்கிரஸ் பலவீனமானதொரு நிலையில் இருப்பதால்தான் இவ்வாறு இறங்கிச் சென்று சிறிய கட்சிகளுடனெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார்கள் என – அரச தரப்பு நினைக்கக் கூடும். இது மு.கா.வுக்கு நல்லதல்ல என்பது ரஊப் ஹக்கீமுடைய வாதமாகும்.
இந்த விவகாரமானது தலைவருக்கும் - தவிசாளருக்குமிடையில் கடுமையான தர்க்கத்தினை ஏற்படுத்தியது, கோபம் மூண்டது, வார்த்தைகள் கடுமையாகின – ஆரம்பித்தது போர்!
இந்த நிலையில், மு.கா. தலைவருக்கெதிராக தவிசாளர் பஷீரும் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்தார். அதாகப்பட்டது, 'அரசாங்கத்துடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தொடர்பில் - அரசின் உயர் மட்டத்தாருடன் மு.கா. தலைவர் தனியாகச் சென்று பேசி விட்டு வருகின்றார். அந்தப் பேச்சுவார்த்தைக்காக கட்சியிலுள்ள வேறு எவரையும் தலைவர் அழைத்துச் செல்வதில்லை. இந்தப் போக்கு சரியானதல்ல' என்பது பஷீரின் குற்றச்சாட்டாகும்!
இந்தக் குற்றச்சாட்டு எழுந்தபோது, இருவருக்குமிடையிலான 'போர்' மேலும் உக்கிரமடைந்ததாக அறிய முடிகிறது!
எது எவ்வாறாயினும், ஏனைய முஸ்லிம் கட்சிகளை மு.கா.வோடு இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் திட்டத்தினை ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தாமல் - பஷீர் தனியாக முன்னெடுத்தமையானது பிழையாயின், தேர்தல் கூட்டு குறித்து அரச உயர் மட்டத்துடன் பேசுவதற்கு ஹக்கீம் தனித்துச் சென்றமையும் பிழையாகவே பார்க்கப்படும்! அதற்காக, 'நானும் பிழை செய்தேன், நீயும் பிழை செய்தாய். பிழைக்குப் பிழை – கணக்குச் சரி' என்று, பிழையைப் பிழையால் சரி செய்து விடவும் முடியாது!
இந்தப் போருக்குப் பிறகு, கடந்த செவ்வாய்கிழமையன்று மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இடம் பெறுவதற்கு முன்னர், தவிசாளர் பஷீர் - தலைவர் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், இதன்போது இருவரும் மனம் விட்டுப் பேசியதாகவும் தெரியவருகிறது.
அலிசாஹிர் மௌலானா: இடையில் வரும் கதாபாத்திரம்!
'தேர்தல் ஒன்றினைக் குறிவைத்து மு.கா.வில் யாரும் இணைந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு இணைவதற்கு முயற்சிப்பவர்கள் தம்மை மலினப்படுத்திக் கொள்கின்றார்கள்' எனும் கருத்துப்பட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சில வருடங்களுக்கு முன்னர் நமக்கு வழங்கியிருந்த நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.
எதிர்வரும் கிழக்குத் தேர்தலில் களமிறங்கும் நோக்குடன், மு.கா.வில் சிலர் இணைந்து கொள்ள முயற்சித்து வரும் இந்த வேளையில் - மு.கா. தலைவரின் மேற்சொன்ன கூற்றினை நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டியுள்ளது.
குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபைத் தலைவருமான அலிசாஹிர் மௌலானா மு.கா.வில் இணைந்து கிழக்குத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.
அலிசாஹிர் மௌலானா தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளராகப் பதவி வகிக்கின்றார். ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் அரச தரப்பில் களமிறங்கித்தான் - அச்சபையின் தலைவரானார். இந்த நிலையில், கடந்த மாதம் 16 ஆம் திகதி ஏறாவூரில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அழுத்கமகேளூ 'அலிசாஹிர் மௌலானாதான் கிழக்கின் முதலமைச்சராக வருவார். முதலமைச்சராக வரப்போகின்ற அவருக்கு ஆதரவளிக்கவே எங்களை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார்' என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது!
இவ்வாதொரு நிலையில், அலிசாஹிர் மௌலானா திடீரென மு.காங்கிரசில் இணைந்து கொள்ளவுள்ளார் என்பதை – பத்தோடு பதினொன்றானதொரு செய்தியாகப் பார்க்க இயலவில்லை!
'கிழக்கு முதலமைச்சராக அலிசாஹிர் மௌலானாவே வருவார்' என்று - அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவரே அறிவித்துள்ள நிலையில், மௌலானா திடீரென மு.கா.வில் இணைகின்றமையானது, 'சும்மா' நிகழும் காரியமல்ல!
அரசாங்கத்தோடு இணைந்து மு.கா. போட்டியிடுவதென்றால், கிழக்கின் முதலமைச்சர் பதவியினை தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று மு.கா. நிபந்தனையொன்றினை முன்வைத்துள்ளதாக அறியப்படும் நிலையில், 'கிழக்கு முதலமைச்சராக வருவார்' என அரச தரப்பால் எதிர்வு கூறப்பட்ட, ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய தொகுதி அமைப்பாளரொருவர் மு.கா.வில் இணைவதானது பல மட்டங்களிலும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், மு.காங்கிரசில் அலிசாஹிர் மௌலானா இணைகிறாரா? இணைக்க வைக்கப்படுகிறாரா? என்பது இங்கு பாரிய கேள்வியாக எழுகிறது!
அலிசாஹிர் மௌலானாவை கிழக்கின் முதலமைச்சராக்குதல்ளூ அதேசமயம், மு.காங்கிரசின் நிபந்தனைக்கிணங்க, அந்தக் கட்சி சார்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியினைக் கொடுத்தல் எனும் இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் பறித்துக் கொள்வதற்கான அரசின் தந்திரமாக, அலிசாஹிர் மௌலானா – மு.கா.வில் இணைவதை ஏன் பார்க்கக் கூடாது என்று கேட்கிறார் நமது ஊடக நண்பரொருவர்!
இந்தச் சந்தேகத்தில் உண்மைகள் இருக்குமாயின், தேர்தலுக்குப் பிறகு 'கிழக்கு முதலமைச்சர்' எனும் குழந்தையொன்று மு.கா.வுக்குக் கிடைத்தாலும், அது - தத்துக் குழந்தையாகத்தான் இருக்கப் போகிறது!!
·
Post a Comment