Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தேசிய செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்..!

தகவல் உதவி - RASMIN M.I.Sc

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (08-07-2012) ஜமாஅத்தின் தலைமையகத்தில் சரியாக காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

முதலாவதாக தேசியத் தலைவர் ஆம்.எம். ரியாழ் ஜமாஅத்தின் செயல்பாடுகள் மறுமை வெற்றிக்காகவே அமைய வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் தேசிய துணைச் செயலாளர் சகோதரர் ரீஸா யூசுப்  சென்றவருட செயற்குழு அறிக்கையை சமர்பித்தார்.

அதன் பின்னர் கிளைகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் தங்களது குறை நிரைகளையும் ஆலோதனைகளையும் கூறி அவற்றுக்கான தெளிவுகளையும் பெற்றுக் கொண்டனர்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை ஒரு சட்டத்தரணி மூலம் தஃவாக் கலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இறுதியாக ஜமாஅத்தின்’ பொதுச்செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் செயற்குழுவின் தொகுப்புரையை வழங்கி தீர்மானங்களை வாசித்தார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ‎தீர்மானங்கள்

01.    இலங்கை அரசாங்கம் தனது அரசியல் சாசனத்தில் எந்த ஒரு மதத்தையும் ஏற்று பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை வழங்கியிருந்தும் தற்போது இலங்கையில் இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களுக்கு வழிபாட்டு உரிமை மீறப்பட்டு வருகிறது. குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசல்களை குறி வைத்து தாக்குவதும் பிரச்சாரங்களை முடக்குவதற்கு சூழ்ச்சி செய்வதும் இலங்கையில் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. உதாரணமாக தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்,குருனாகல குர்ஆன் மத்ரஸா விவகாரம், தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற இன வன்முறைகளை தூண்டக் கூடியவர்களையும் இன துவேஷத்தை உருவாக்கக் கூடியவர்களுக்கும் இலங்கை அரசியல் சாசனத்தை அவமதிக்கக் கூடியவர்களுக்கும் எதிராக இலங்கை அரசாங்கம் எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் தெளிவான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

02.    இலங்கை அரசியல் சாசனம் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கியிருந்தாலும் ஏனைய மதங்களுக்கும் அது போன்ற உரிமைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டிருக்க, இலங்கையில் புத்த மதத்தை சாராதவர்கள் வழிபாட்டு தளங்களை ஏற்படுத்துவதாக இருந்தால் இலங்கை அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் புத்த மதத்தவர்கள் வழிபாட்டு தளங்கள் அமைப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ அவர்களின் கூற்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

03.    “முப்பது வருட காலத்து யுத்தத்திற்கு பிறகு இலங்கையில் தீவிரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த இன பிரச்சனைக்கு காரணமாக இருந்த உரிமை பிரச்சனைக்கான அரசியல் தீர்வை மிகவும் அவசரமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இடம் பெயர்ந்த மக்களை முறைப்படி மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். மீள் குடியேற்றத்தின் போது ஏற்கனவே அந்தந்த பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு முன்உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

04.    இலங்கையில் தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் எனும் கொடுமை தாண்டவமாடுகிறது. இந்த இழிச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் நாளை நாட்டை ஆள இருக்கும் இளம் சிறார்களுடைய எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய இது போன்ற மானக் கேடான செயல்களுக்கு அதிக பட்ச தண்டனையான இஸ்லாம் கூறும் மரண தண்டனையை வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

05.    யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மந்த போக்கில் இருப்பதனால் பொருட்களின் விலை வாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பல நிர்க்கதிகளுக்குள்ளாகி உள்ளன. எனவே பொருளாதார அபிவிருத்திக்கான அழகிய தீர்வுகளை கண்டு இலங்கை அரசு அவற்றை நடைமுறை படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

06.    இலங்கையின் பரீட்சை திணைக்களம் 2011ம் ஆண்டு க.பொ.த. உயர் தர கல்வி மாணவ மாணவிகளின் பெரு பேறுகள் தவறான முறையில் வெளியிட்டுள்ளதை மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு ஆதரிப்பதோடு மீண்டும் மானவ மாணவிகளுக்கு சிரமம் கொடுக்காமல் மிகவும் சரியான பெறுபேறுகளை இலங்கையின் பரீட்சை திணைக்களம் வழங்க வேண்டும் எனவும், இதனை கல்வி அமைச்சு தனது முழு கவனத்திற்கு எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

07.    கற்றரிந்த பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசின் நிலைபாடு எதுவென தெளிவாக இல்லை. அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவற்றை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்கிறது.

08.    வட புல மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் காணிகள் பெரும்பான்மை இனச் சக்திகளினால் பலவந்தமாய் சுவீகரிக்கப்படும் நிலை பல இடங்களில் அரங்கேரி வருகின்றன.எனவே, முஸ்லிம்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதோடு, சிறுபான்மை இன மக்களின் வாழ்வியல் உரிமையை பாதுகாப்பதற்குண்டான முயற்சிகளை சட்ட ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் தேசியச் செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.



1 comment:

Powered by Blogger.