குறிக்கோளோ வேலைத்திட்டமோ இல்லாத முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை..!
இம்முறை மாகாண சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்து கொள்வது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்னர் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இப்போது எவரும் அதைப் பற்றி அவ்வளவு அக்கறை காடடுவதாக தெரியவில்லை.
நாம் இதற்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்ததை போல் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையே எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக் கொணடுள்ளது. எந்தளவிற்கு கிழக்கு மாகாணம் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுள்ளது என்றால் கிழக்கில் மட்டும் தான் தேர்தல் நடைபெற போகிறது என்பதைப் போன்றதோர் தோற்றம் உருவாகியுள்ளது.
இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் எடுத்த ஒரு முடிவினால் மட்டும் கடந்த வார இறுதியில் சப்ரகமுவ மாகாணமும் ஞாபகத்திற்க வந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மழையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டு சேர்ந்து போட்டியிட எடுத்த முடிவு முக்கியமான நிகழ்வாக கொள்ளப்பட்டாலும் அது அம்மாகாண தேர்தலின் இறுதி முடிவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் அதாவல்லாவின் தேசிய காங்கிரஸும் கூட்டாக செயற்படுவதாக அண்மையில் கூறப்பட்டது. அண்மையில் அகில இலங்கை முஸ்லிம் காஙகிரஸினதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் இரண்டு பிரதிநிதிகளிடையே நடைபெற்ற தொலைகாட்சி விவாதம் ஒன்றின் போதும் அகில இலங்கை முஸ்லிம் காஙகிரஸின் பிரதிநிதி இதை அடிக்கடி வலியுறுத்திக் கூறினார்.
ஆனால் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு இவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற போகிறார்கள் என்ற கேள்வி பலரது மனதில் அப்போது எழுந்திருக்கலாம். ஏனெனில் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக அரசாங்கத்தின் அமைச்சர்களால் செயற்பட முடியாது. காரணம் எதுவாக இருந்தாலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும்; தேசிய காங்கிரஸும் தொடர்ந்தும் அந்தப் போராட்டத்தில் இப்போது இல்லை.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிடப் போவதாகவும் அதன் மூலம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. அரசாங்மும் அதனை சற்று 'சீரியசாக' எடுத்துக் கொண்டதாக தெரிந்தது. எனவே தான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். அரசாங்கத்தில் இருந்து கொண்டே தனித்து போட்டியிடுவதானது கொள்கை ரீதியாக கஸ்டமான விடயம்.
ஒரு அமைச்சர் அரசாங்கத்தின் முக்கிய பிரதான கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ வாக்களிக்காது தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு மக்களை கேட்க முடியும்? வாக்களிக்க கூடாத அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கலாமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. எனினும் இதற்கு முன்னர் மு.கா. உட்பட பல கட்சிகள் அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து கொண்டே தனித்து போட்டியிட்டுள்ளன. இம்முறையும் கூட அமைச்சர் தொண்டமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சப்ரகமுவையில் தனித்து போட்டியிடப் போகிறது.
எவ்வாறாயினும் முஸ்லிம் முதலமைச்சர் பதவியைப் பற்றி முஸ்லிம் கட்சிகளே முஸ்லிம் மக்களின் மனதில் ஊட்டிய அசையை அக்கட்சிகளே கைவிட்டுள்ளன. மறுபுறத்தில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதாக ஆளும் கட்சி வாக்குறுதியளித்து அதன் காரணமாக முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியோடு கூட்டாக போட்டியிட்டாலும் கடந்த முறை பெற்ற அனுபவத்தினால் பல முஸ்லிம்கள் அந்த வாக்குறுதியை நம்பமாட்டார்கள்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண தேர்தலின் போது முஸ்லிம் முதலமைச்சர் விவகாரம் வெகுவாக சூடு பிடித்திருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மு.கா.வில் இருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆளும் கட்சிக்குத் தாவினார். தமக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி வாக்குறுதியளித்ததாக வேட்புமனு தாக்கல் செய்த உடன் அவர் கூறினார். ஆளும் கட்சியில் எவரும் அதனை மறுக்கவும் இல்லை. ஆனால் தேர்தல் முடிந்த உடன் அந்த வாக்குறுதி நிறைவேறுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் தாம் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக சில அமைச்சர்கள் கூறினர். ஆனால் அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமித்தார்.
முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருந்ததால் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
அதில் நியாயம் இருந்த போதிலும் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதியளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டார் என்பதும் உண்மையே. எனவே இம்முறையும் முதலமைச்சர் பதவி தொடர்பாக முஸ்லிம்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டாலும் அது நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வது நிச்சயமற்ற விடயமாகும்.
பதவியில் இருக்கும் ஜனாதிபதி கருணை காட்டி அவ்வாறு ஒருவரை நியமித்தால் தான். ஆனால் முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் சிலவேளை அது சாத்தியம். பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும் ஒன்று சேரப் போவதில்லை என்பதே. குறிப்பாக முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காக என்றுமே அவை ஒன்று சேரப்போவதில்லை.
காரணம் என்னவென்றால் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செல்வதற்கான பிரதான காரணமே பதவி ஆசை தான். அப்படியிருக்க, முதலமைச்சர் பதவியில் மட்டும் இந்தக் கட்சிகளுக்கு என்ன ஆசை இல்லாமல் போய்விடுமா? முதலமைச்சர் பதவி தொடர்பாக கலந்துரையாட முஸ்லிம் கட்சிகள் கூடினால், முதலாவது கூட்டத்திலேயே அந்தப் பதவி தொடர்பாக அக்கட்சிகளுக்கிடையே சண்டை வந்துவிடும்.
உதாரணமாக மு.கா. உறுப்பினர் ஒருவர் கிழக்கில் முதலமைச்சராவதை அமைச்சர் அதாவுல்லாஹ்வோ அல்லது முன்னால் அமைச்சர் அமீர் அலியோ விரும்புவார்களா? அதேபொல் தேசிய காங்கிரஸ் அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அப் பதவிக்கு தெரிவாவதை அமைச்சர் ஹக்கீம் விரும்புவாரா? நடக்காது.
எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தாலும் இந்தக் கட்சிகள் தெவையானால் அரசாங்கத்திலிருந்து வெளியே வரவும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தம்மோடு இணைந்து போட்டியிடாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் இக் கட்சிகளின் தலைவர்களுக்குக் கூறலாம். அவ்வாறு இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வெளியேறி வருவார்களா? அதுவும் நடக்காது.
இதற்கு முன்னர் ஒரு முறை ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வெளியேறியதால் மு.கா. வேண்டுமென்றால் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காகவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் என சிலர் வாதிடலாம். எனினும் அவ்வாறு தைரியமாக வெளியேறக் கூடிய நிலைமையில் மு.கா. இன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகும்.
ஏனெனில் அக்கட்சி அவ்வாறு அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் கட்சியின் சில முக்கிய புள்ளிகள் அரசாங்கத்திலெயே தங்கிவிடுவார்கள். அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் கிடைத்து விடக் கூடும். முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காக செய்யும் இது போன்ற தியாகங்களும் அர்ப்பனிப்புக்களும் ஒருபுறம் இருக்க, எதற்காக தாம் இந்தப் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப் படுவதை விரும்புகிறோம் என்பதை முஸ்லிம் தலைவர்கள் விளக்க வேண்டும். இந்தப் பதவி கிடைத்தால் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் தெளிவாக கூர வேண்டும்.
ஏனெனில் அரசாங்கத்தில் பல முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமல் இருக்கிறது. கிழக்கில் புலிகளால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினை அவற்றில் ஒன்றாகும். சிலவேளைகளில் முஸ்லிம் அமைச்சர்களே பிரச்சினை என்ற நிலைமையும் உருவாகின்றது. அண்மையில் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று முஸ்லிம் பிரதி அமைச்சர் ஒருவர் கூறியமை உதாரணமாகும்.
ஏனைய சமூகங்களுக்கு அநீதி இழைக்காமல் முஸ்லிம்களை அநீதியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே முஸ்லிம் முதலமைச்சர் பதவியின் நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறானதொர் திட்டம் முஸ்லிம் தலைவர்களிடம் இருக்கினறதா? வெறுமனே ஆத்ம திருப்திக்காகவோ தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவோ முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.
Post a Comment