Header Ads



பாலித ரங்கே பண்டார எம்.பி.யை பிடித்துக்கொண்டு வாருங்கள் - சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவை கைது செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு, புத்தளம் காவல் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் வாகனம் ஒன்றை சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலான வழக்கு இன்று சிலாபம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, நாடாளுமன்ற பாலித ரங்கே பண்டார சமூகம் அளிக்காததனை அடுத்தே, அவருக்கு நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே, பாலித ரங்கே பண்டார இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.

தமக்கு எதிராக வழக்கொன்று இன்றைய தினம் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெறும் நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்ற தினமானதால், தம்மால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் இன்று வழக்கு விசாரணை தினம் என்றாலும் தமக்கு நாடாளுமன்றத்திற்கு சமூகம் அளிக்க வேண்டிய உரிமை உள்ளதாகவும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினங்களில், எவ்வகையான வழக்கு விசாரணைகள் இருப்பினும், அவர்களுக்கு நீதிமன்றில் சமூகம் அளிப்பதற்கான சிறப்புரிமை இருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஊடாக சிலாபம் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.