Header Ads



இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழிப்புணர்வு அவசியம் - பேராசிரியை பாத்திமா முஸப்பர்


இந்திய முஸ்லிம் லீக்கின் செயலாளர் பேராசிரியை பாத்திமா முஸப்பர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, கண்டி உட்பட பல பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்புரைகளை நிகழ்த்தினார். துடிப்புமிக்க பெண் அரசியல்வாதியாகவும் சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கும் அவரை விடிவெள்ளிக்காக சந்தித்து சிறிது நேரம் உரையாடினோம். அவருடனான சுருக்கமான நேர்காணல் இது.

நேர்காணல்:ஏ.ஆர்.ஏ.பரீல்

விடிவெள்ளி : உங்களைப் பற்றி சில வரிகள்...?

பாத்திமா முஸப்பர் : அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளராக இருக்கிறேன். கணவர் முஸப்பர் அஹமட் அவர் முகாமைத்துவப் பணிப்பாளர், கணவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய இணைச் செயலாளர், மூன்று பிள்ளைகள் ஒரு மகன், இரு மகள்கள். தந்தை மர்ஹும் சிராஜுமில்லத் ஏ. கே. ஏ. அப்துல் சமட் (எம். ஏ) 18 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நான் சமூக சேவைக்காக 2007 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மூப்பனார் விருது பெற்றுள்ளேன்.

விடிவெள்ளி : உங்கள் வாழ்வில் மறக்கவியலாத நிகழ்வு?

பாத்திமா முஸப்பர் : 1971 ஆம் ஆண்டில் எனது தா எனக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது தந்தையுடன் மூவரும் ஹஜ்ஜுக்குப் போனது. அப்போது எனக்கு வயது 8 மாதங்கள்தான். பால் குடிக்கும் சிறுமியாக புனித கஃபாவுக்குப் போனதை நினைவில் நிறுத்தும் போது என்னில் ஏற்படும் மன நிறைவு மகிழ்ச்சி. வாழ்நாளில் மறக்கவியலாத நிகழ்வு இது.

விடிவெள்ளி : உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

பாத்திமா முஸப்பர் : உலகத்திலுள்ள முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என அல்லாஹ் வழிகாட்டியுள்ளான். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மற்றவர்களை நேர் வழிப்படுத்துபவளாக வாழ வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம். இந்நிலைமையை அடைவதற்கு முதலில் முழுமையாக மார்க்க விழிப்புணர்ச்சி, கல்வி முன்னேற்றம், பொருளாதார பாதுகாப்பு, அரசியல் வலிமை போன்ற எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தி அடுத்த தலைமுறையினராக உருவெடுக்கவுள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

விடிவெள்ளி : இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய உங்களது பார்வை எப்படியிருக்கிறது?

பாத்திமா முஸப்பர் : பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும். இலங்கையில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்திருக்கிறார்கள். மார்க்க ரீதியில் வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்களை நாம் மாற்றிக் கொள்ளும் வரை பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது சிரமம்.

ஒரு சமுதாயம் தனது நிலைமையை தானே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அதனை மாற்றமாட்டான் என திருக்குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்குள் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தேவை. இலங்கை முஸ்லிம்களிடையே பல இயக்கங்கள் இருக்கலாம். அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அனைவரும் பிரிவினைகளை மறந்து ஒன்று பட வேண்டும். சமுதாய மேம்பாட்டுக்காக இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக இயக்கங்களும் அமைப்புகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் தீர்வுகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ள முடியும்.

விடிவெள்ளி : இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

பாத்திமா முஸப்பர் : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காரியாலயத்தில் இலங்கை தொழில் புரியும் பெண்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். இலங்கை முஸ்லிம் பெண்களில் நல்ல எழுத்தாளர் இருக்கிறார்கள். பெண் சிந்தனையாளர்கள், பேச்சாளர்கள் இருக்கிறார்கள். நல்ல உயர் பதவி வகிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம் பெண்கள் வெளிக்கள வேலைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவர்களாக இல்லை. முஸ்லிம் பெண்கள் களமிறங்கி சமுதாயப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

எதிர்வரும் ரமழானிலிருந்து களமிறங்கி சமுதாய நலனுக்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக நான் சந்தித்த பெண்கள் குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். அதற்காகத் திட்டமிட்டுள்ளார்கள். ரமழானில் முஸ்லிம் பெண்கள் தமது நேரத்தை சமைப்பதிலும் ஷொப்பிங் செவதிலுமே வீணடிக்கிறார்கள். இந்நிலைமை மாற வேண்டும். பெண்கள் அனைவரும் அவர்கள் தொழில் செபவர்களென்றாலும் சாதாரண பெண்களென்றாலும் களமிறங்கி மார்க்கப் பணியுடன் சமுதாய மறு மலர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

விடிவெள்ளி : ஊடகத்துறையில் இலங்கை முஸ்லிம் பெண்களின் வகிபாகம் எத்தகையது?

பாத்திமா முஸப்பர் : இந்திய முஸ்லிம் பெண்களை விட இலங்கை முஸ்லிம் பெண்கள் படித்தவர்களாக இருக்கிறார்கள். இது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் மீடியாக்களில் இவர்களின் பங்கு குறைவாக இருப்பது கவலை தருகிறது. மீடியா துறையில் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் என்னை ஒரு அதிதியாக அவர்களது வருடாந்த மாநாட்டுக்கு அழைத்திருந்தது. மீடியா போரத்தில் முஸ்லிம் பெண்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளமை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தேன். முஸ்லிம் பெண்களுக்கு மீடியா கருத்தரங்குகள், பயிற்சிகளை மீடியா போரம் நடத்தி வருகின்றமையை நான் அறிந்து கொண்டேன்.

இன்று உலகில் அறிவுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாம் அறிவுடையவர்களாக இருந்தும் அந்த அறிவினைப் பயன்படுத்த தவறியுள்ளோம். மீடியாவில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். நான் மாவனல்லையில் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரிக்கு விஜயம் செதேன். அங்கு மாணவிகளுக்கு மீடியா துறையில் பயிற்சி வழங்குகிறார்கள். மாணவிகள் நிகழ்ச்சிகளை வீடியோ, ஓடியோ மூலம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இத்துறையில் தரமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் எழுத்துத் துறையிலும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மீடியாக்களில் பெண்களைப் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. செதிகள் வெளிவருகின்றன. தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாம் பெண்களுக்கு அநீதி இழைக்கிறது என்று பிரசாரம் செயப்படுகிறது. இதற்கு மூன்று தலாக், 4 மனைவியர்களை மணந்து கொள்ளல் (பலதாரமணம்) என்பன உதாரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன. இன்று இன்டர்நெட் மூலம் விரைவாக செதிகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே, முஸ்லிம் பெண்கள் மீடியா என்ற ஆயுதத்தை கையிலெடுத்து இஸ்லாத்துக்கெதிராகவும் முஸ்லிம் பெண்களுக்கெதிராகவும் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

விடிவெள்ளி : அரசியலில் முஸ்லிம் பெண்களின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும்?

பாத்திமா முஸப்பர் : இஸ்லாத்தில் அரசியலுக்கும் மீடியாக்களுக்கும் இடமில்லை அல்லது சம்பந்தமில்லை என்று தவறான கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்த முரண்பாடான கருத்துக்களினாலேயே நாம் இவ்விரு பலம் வாந்த இரு துறைகளிலும் பின்னடைவு கண்டுள்ளோம். முஸ்லிம் பெண்கள் தமக்குள்ள திறமைகளை, ஆளக்கூடிய இயலுமைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சடங்கும், சம்பிரதாயங்கள் பற்றியே சிந்திக்கின்றோம். தீனின் முழுமையான வாழ்க்கை முறை, அரசியல், பொருளாதாரம், கல்வி முறைகளைப் பற்றி அதிகம் கவனத்திற் கொள்வதில்லை. இதுவே எமக்குள் உள்ள குறைபாடு. ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே அரசியல் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூதுவர்களும் அல்லாஹ்வின் மீடியாக்களாக இருந்திருக்கிறார்கள். இஸ்லாம் அரசியலை எதிர்க்கவில்லை. அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக் கொண்டிருந்தால் அது சாக்கடைதான். சாக்கடையை சுத்தம் செயும் அரசியல்வாதியாக நாம் உருவாக வேண்டும். சாக்கடையை நல்ல எண்ணங்களினாலும் அல்லாஹ்வின் போதனைகளினாலுமே சுத்தம் செய வேண்டும்.

நேர்மையான வழியில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலில் முஸ்லிம் பெண்கள் மாத்திரமல்ல ஆண்களும் பின்னடைந்துள்ளோம். உலகெங்கும் அரசியலில் மாற்று மதத்தவர்களே தலைமை தாங்குகிறார்கள். இதனால் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டியுள்ளது. நபிகள் நாயகம் அவர்கள் முஸ்லிம் பெண்களுக்கு சூரா கவுன்ஸிலில் இடம் வழங்கியிருக்கிறார்கள். தீர்மானங்கள் மேற்கொள்ளும் அதிகாரம் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சிறந்த நேர்மையான ஆண்கள் மட்டுமல்ல முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் போருக்கு கூட சென்றிருக்கிறார்கள். முஸ்லிம்களின் ஜிஹாத் என்பது அரசியல் மற்றும் மீடியா ஆகிய இரு துறைகளாகும். இதில் ஆண்களும் பெண்களும் பங்கு கொள்ள வேண்டும். சனத்தொகையில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சரிசமனாக இருக்கிறார்கள். எனவே, அரசியலில் ஆண்களுக்கு சமமான வகிபாகமாக முஸ்லிம் பெண்களும் இருக்க வேண்டும்.

விடிவெள்ளி : முஸ்லிம் சமூக எழுச்சிக்கு ஊடகங்கள் எவ்வாறான அணுகு முறைகளை கையாள வேண்டும்?

பாத்திமா முஸப்பர் : ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துவதென்றால் அது இலேசான காரியமல்ல. எனது தந்தை ‘மணிச்சுடர்’ என்றொரு பத்திரிகையை எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் நடத்தினார் என்பது எனக்குத் தெரியும். ஒரு முஸ்லிம் பத்திரிகை சமயத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டிருக்கக் கூடாது. அது சமுதாய மறு மலர்ச்சியையும் நோக்காகக் கொண்டிருக்க வேண்டும். சமுதாய நிலைமைகளை எடுத்து விளக்க வேண்டும். முஸ்லிம்கள் மாத்திரமல்ல மாற்று மதத்தவர்களும் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ‘வொஷிங்டன் டைம்ஸ்’ என்ற பத்திரிகையை எடுத்துக் கொள்வோம். உலகெங்கும் அப்பத்திரிகை கிடைக்கிறது. வாசகர்களைக் கொண்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் சகல துறை செதிகளும் வெளிவருகிறது. இதனால் அனைத்து மக்களும் அப்பத்திரிகையை வாங்கி வாசிக்கிறார்கள். எனவே, முஸ்லிம்களின் சமூக எழுச்சி சமூகத்துக்குள் மாத்திரமல்ல ஏனைய சமூகங்களுக்குள்ளும் உருவாக வேண்டும். இதுவே சமூக வளர்ச்சியாக அமையும்.

சமூக எழுச்சி எனும் போது பலஸ்தீன் தொடர்பான செதிகளை மாத்திரம் வெளியிடாது ஏனைய நாடுகள் அவுஸ்திரேலியா, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் செதிகள் வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு கல்வி தொடர்பான விடயங்களும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பகுதிகளும் வெளிவர வேண்டும். தீவிரவாதத்தை வளர்ப்பதாக முஸ்லிம் பத்திரிகைகள் அமையக் கூடாது.

இஸ்லாத்தில் அரசியலுக்கும் மீடியாக்களுக்கும் இடமில்லை அல்லது சம்பந்தமில்லை என்று தவறான கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்த முரண்பாடான கருத்துக்களினாலேயே நாம் இவ்விரு பலம் வாந்த துறைகளிலும் பின்னடைவு கண்டுள்ளோம். இஸ்லாம் அரசியலை எதிர்க்கவில்லை. அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக் கொண்டிருந்தால் அது சாக்கடைதான். சாக்கடையை சுத்தம் செயும் அரசியல்வாதியாக நாம் உருவாக வேண்டும். சாக்கடையை நல்ல எண்ணங்களினாலும் அல்லாஹ்வின் போதனைகளினாலுமே சுத்தம் செய வேண்டும். நேர்மையான வழியில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.
 



No comments

Powered by Blogger.