பான்பாரக் சாப்பிட்ட மாணவனை சிறுநீர் குடிக்கவைத்த ஆசிரியர்கள்..!
இந்தியா - பெரம்பலூரில் மாணவனை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டு ஆசிரியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மாணவனை சிறுநீர் குடிக்க வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவர்களை அடித்தது உண்மை என தெரிய வந்ததாகவும், ஆனால் சிறுநீர் குடிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இருப்பினும் மாணவனை அடித்தது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்தாய் அதற்குள் சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர். அடக்க முடியாத மாணவன் சிறுநீரை அதே இடத்தில் கழித்து விட்டான். இதனால் ஆசிரியர்கள் அடித்து உதைத்தனர்.
இதற்கு பின்னர் பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாணவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.
கல்வி துறை அதிகாரி விசாரணை: : சிறுநீர் குடிக்க வைத்ததாக எழுந்த புகாரை அடுத்து தனியார் பள்ளியில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தது. சிறுநீர் குடிக்க வைத்தது உண்மையா என விசாரிக்க முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தனர், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் கேள்வி கேட்ட போது : சிறுநீர் குடிக்க வைத்தனர் என்பது தவறான தகவல். யாரும் அப்படி செய்யவில்லை. மாணவன் ஆசிரியர்கள் மிரட்டலுக்கு பயந்து விடுதியை விட்டு தப்பி சென்று விட்டான். பின்னர் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மீது தவறான கருத்தை சொல்லியிருக்கிறான் என்றனர். மேலும் மாணவனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவனும் சிறுநீர் குடிக்கவில்லை என ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
பான்பாரக் சாப்பிடுவது வழக்கம்: சிறு நீர் கழித்து வர அனுமதி மறுக்கப்பட்டதுதான் உண்மை என்றும் சிறுநீர் கழித்தமைக்காக ஆசிரியர்கள் அடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சிறுநீர் குடிக்கும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மாணவன் பான்பாரக் சாப்பிடுவது வழக்கமாம். அவன் பாக்கு போடுவதை ஆசிரியர்கள் கண்டித்து வந்துள்ளனர். பான்பாரக் சாப்பிடுற நீ மூத்திரத்தை குடிடா என்று திட்டியதாக தெரிகிறது. மாணவன் ஆசிரியர்கள் மீது வீண்பழி போட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மங்களமேடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment