Header Ads



ஆசிரியர் சேவைக்காக...!

தினக்குரல்

வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் யாழ்ப்பாண யுவதியொருவருக்கு கொழும்பு நகருக்கு வெளியே உள்ள முஸ்லிம் பாடசாலையொன்றில் ஆசிரிய நியமனம் கிடைத்திருக்கிறது. அந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க நிருவாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை வானொன்றில் யுவதியைத் தேடி வெள்ளவத்தைக்கு வந்தனர். யுவதி தற்போது யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்.
யுவதி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வானில் வந்தவர்களைக் கண்டு பயந்து ஏதோ என்னவோ என்று பதறியடித்து விசாரித்தனர். ஏதாவது விசாரணைக்குத்தான் இரகசியப் பொலிஸார் வந்திருக்கிறார்களோ அல்லது கடத்திகிடத்திக் கொண்டு போகத் தான் வந்திருக்கிறார்களோ என்று கூட அவர்கள் பயந்திருக்கக்கூடும்.

வந்தவர்கள் தாங்கள் குறிப்பிட்ட யுவதிக்கு ஆசிரிய நியமனம் கிடைக்கப்பெற்றிருக்கும் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க நிருவாகிகள் என்றும் அவரைக் கண்டு தங்களது பாடசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொழும்புக்கு வெளியே என்று நினைத்து இந்த நியமனத்தை அவர் மறுத்துவிடக்கூடாது. தங்களது பாடசாலைக்கு நீண்டகாலமாக குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் அவரைக் கண்டு நம்பிக்கையூட்டி தங்களது பாடசாலைக்கு நிச்சயமாக அவர் வந்து பதவியேற்பதை உறுதி செய்வதற்காகவே தேடி வந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

வீட்டுக்காரர்களின் பதறியடிப்பு வீதியால் சென்றவர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அதில் ஒருவர் வெள்ளவத்தையில் ஒரு அரைச் சைக்கிளில் திரியும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர். அவரும் அந்தக் கூட்டத்துடன் பூராயம் விசாரித்தார். அவர் தான்  எனக்கு இந்தக் கதையைக் கூறினவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து அந்தப் பிள்ளை திரும்பி வந்ததும் நீங்கள் வந்து சந்திக்கலாம். நீங்கள் வந்து அவரை விசாரித்ததை நாங்கள் அவருக்குக் கூறுகிறோம் என்று வீட்டுக்காரர்கள் வானில் வந்தவர்களுக்குக் கூறினார்கள். அவர்களும் அவ்வாறே செய்கிறோம் என்று கூறி மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.

ஒரு பாடசாலைக்கு ஆசிரியையாக நியமனம் கிடைத்த வட பகுதி யுவதியை கட்டாயமாக தங்கள் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று அந்த முஸ்லிம் பிரமுகர்கள் அக்கறையுடன் வந்திருக்கிறார்கள். பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதனால் மாணவர்கள் படுகின்ற கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு பெற்றோர் எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார்கள் என்று பார்த்தீர்களா? ஆனால், சில பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களையும் அதிபர்களையும் விரட்டியடிக்கும் வேலையில் மறுபுறத்தில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விசித்திரங்கள் பற்றியும் அவ்வப்போது கேள்விப் படுகிறோம் அல்லவா!

No comments

Powered by Blogger.