கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து, மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ராசய்யா துரைரத்ணம் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இல்லாத நிலையில், மாகாண சபையின் கால எல்லை முடிவடைவதற்கு முன்னதாக, அதனைக் கலைத்துள்ளமை மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பாகவுள்ள நம்பிக்கை அற்றுப்போவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் மற்றும் மூன்று மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் 2013 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக மாகாண சபை கலைக்கப்படக்கூடாது என்ற பிரேரணையொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாண சபையைக் கலைப்பதற்கு ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தவிர கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment