எகிப்தில் ஹிலாரி கிளின்டனுக்கு தக்காளி அடி, சப்பாத்து வீச்சு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து நாட்டில் பயணம் மேற்கொண்ட போது, அவர் மீது, தக்காளி மற்றும் ஷூக்கள் வீசப்பட்டன.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து, இஸ்ரேல், லாவோஸ் உள்ளிட்ட, எட்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், அவர் எகிப்து நாட்டில் பயணம் மேற்கொண்டார்.எகிப்து அதிபர் பதவியிலிருந்து, ஹோஸ்னி முபாரக் பதவி விலகிய பின், அவர் முதல் முறையாக அங்கு சென்றார். புதிய அதிபர் முர்சியையும், ராணுவ தளபதி ஹுசைனையும் சந்தித்து பேசினார்.
அலெக்சாண்டிரியா நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், அவர் உரையாற்றினார். "எகிப்தில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு, அமெரிக்கா காரணமல்ல. ஜனநாயகத்துக்கு ஆதரவாக, அமெரிக்கா செயலாற்றுகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்' என பேசினார்.எகிப்தில் உள்ள அமெரிக்க தனியார் நிறுவனங்களில், அதிரடி சோதனை மேற்கொண்டதால், 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.அலெக்சாண்டிரியா நகரை விட்டு புறப்படும் போது, அங்கு கூடியிருந்தவர்கள், கிளின்டனுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரின் கணவர் கிளின்டன், அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், மோனிகா லாவின்ஸ்கியுடன் தொடர்பு வைத்திருந்ததை குறிக்கும் வகையில், "மோனிகா, மோனிகா' என, குரல் கொடுத்தனர்.அதை தொடர்ந்து, ஹிலாரி வந்த காரை நோக்கி, தக்காளி, தண்ணீர் பாட்டில்கள், செருப்பு மற்றும் ஷூக்களை வீசி எறிந்தனர். ஆனால், இதனால் ஹிலாரி பாதிக்கப்படவில்லை. இவையெல்லாம், அங்கு நின்றிருந்த எகிப்து பாதுகாவலர்கள் மீது தான் விழுந்தன.
Post a Comment