வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றுமாறு சரத் பொன்சேக்கா கூறமுடியாது - ஜே.வி.பி.
வடக்கு, கிழக்கில் படைமுகாம்களின் இருப்புத் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜேவிபி கோரியுள்ளது. வடக்கு, கிழக்கில் இருந்து படைமுகாம்களை அகற்ற வேண்டும் என்று அண்மையில் சரத் பொன்சேகா கூறியுள்ள நிலையிலேயே, ஜேவிபியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால் காந்த இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
“வடக்கிலுள்ள படைமுகாம்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் கூறியிருந்தார். இது அவரது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம். அத்துடன் இராஜதந்திர நெறிமுறைகளை மீறுகின்ற - ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்ற செயலாகும்.
இதையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்ட போதும் அரசு அவ்வாறு செய்யவில்லை. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கை, படையினரின் எண்ணிக்கை தொடர்பாக, வடக்குப் படைத் தளபதியிடம் அவுஸ்ரேலியத் தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்தே இது இடம்பெற்றது.
வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியத் தூதுவர், பிரித்தானியத் தூதுவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பநதன் ஆகியோர் கோருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த இராணுவ முகாம்களை அரசாங்கம் தனது நாட்டின் எல்லைக்குள் தான் வைத்துள்ளது என்பதை இவர்கள் மறந்து விட்டனர். இந்த இராஜதந்திரிகள் வம்பு செய்வதற்கு படை முகாம்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் இருக்கவில்லை. தனிநாட்டை அமைக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தச் சூழலில் சரத் பொன்சேகா எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார் என்பதை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.
அதேவேளை, வடக்கில் குடியியல் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளை சிறிலங்கா அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்பதும், குடியியல் நிர்வாகம் அங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுமே ஜேவிபின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்
Post a Comment