கிழக்கு மாகாண தேர்தலும், தமிழ்-முஸ்லிம் உறவும்
(இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமே இது)
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பான அரசியல் கட்சிகளின் முன்னெடுப்புகள் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களால் கையகப்படுத்தக் கூடிய இரண்டு மாகாண சபைகளில் ஒன்றாக கிழக்கு மாகாண சபை இருப்பதும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தல் என்ற வகையிலும் இது அதீத முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.
வழக்கம் போன்றே எல்லா அரசியல் கட்சிகளும் இத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம் சிறுபான்மை தமிழ்-முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் எடுக்கும் முடிவுகளும் அவற்றின் தேர்தல் பிரசார ஒழுங்குகளும் இம் மாகாணத்தின் இன நல்லுறவில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதே தற்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய நிதர்சனமாகும்.
கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் முதலமைச்சரா? முஸ்லிம் முதலமைச்சரா? எனும் கோஷம் முன்வைக்கப்பட்டு தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் இன விரிசலுக்கு வழிவகுக்கும் வகையிலான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. தமது இனத்தைச் சார்ந்த ஒருவரே முதலமைச்சராக வர வேண்டும் என தூரநோக்கற்ற வகையில் சிந்தித்த தமிழர்களும் முஸ்லிம்களும் முட்டி மோதி வாக்களித்த போதிலும் ஈற்றில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கமைவாகவே முதலமைச்சர் நியமிக்கப்பட்டார்.
அவ்வாறானதொரு சூழ்நிலையே இன்று மீண்டும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் கட்சிகள் தமிழ் முதலமைச்சர் என்றும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் முதலமைச்சர் என்றும் இனவாதக் கோஷங்களை முன்னிறுத்தி களத்திலிறங்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந் நிலையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த இனவாத பிரசாரத்தில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளுமாகவிருந்தால் கிழக்கில் பாரியதும் நிரந்தரமானதுமான இன விரிசலுக்கே தமிழர்களும் முஸ்லிம்களும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் எனும் கசப்பான உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அந்தவகையில்தான் இதுதொடர்பில் முன்கூட்டியே விழிப்படைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் முஸ்லிம் கவுன்சிலுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாதிருப்பது புனிதமானதும் முக்கியமானதுமான கடமை என இக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு தரப்பும் சுமுகமான முறையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு உலமா சபையும் முஸ்லிம் கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் ஏற்கனவே புரிந்துணர்வுடன் கூடிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தேர்தல் காலத்தில் அவை காற்றில் பறக்கவிடப்பட்டு இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்படலாம் எனும் அச்சத்தின் பேரிலேயே கூட்டமைப்பு இவ்வாறானதொரு கடிதத்தை உலமா சபைக்கு அனுப்பி வைத்திருக்கிறது எனலாம். அந்த வகையில்தான கூட்டமைப்பின் இந்தக் கடிதத்தை உலமா சபையும் முஸ்லிம் கவுன்சிலும் உடனடியாகக் கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஏற்கனவே மூன்று முஸ்லிம் கட்சிகளுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
எனவேதான் மிக விரைவில் இரு தரப்பினரையும் ஒரு மேசைக்கு அழைத்து கிழக்கில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய இன நல்லுறவில் இத் தேர்தல் எந்தவொரு சிறு கீறலையும் ஏற்படுத்தாத வகையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்த வேண்டியது சிவில் சமூகத்தின் கடப்பாடாகும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் தார்மீகக் கடமையாகும். இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.
Post a Comment