Header Ads



பேரினவாதத்தின் காய்ச்சல்


ஸர்மிளா செய்யித்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் ஒரே குறிக்கோளுடன் முழு வீச்சுடன் முன்னகர்த்தப்படுகின்ற காலகட்டம் இது. 1956ஆம் ஆண்டு அடையாளங் காணப்பட்ட பௌத்த பேரினவாதக் காய்ச்சல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்றதன் பின்னர் முற்றிய உயிர்கொல்லிக் காய்ச்சலாக வீரியத்துடன் மறுபிரவேசித்து நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றது.

தம்புள்ளை பள்ளிவாயல் தகர்ப்பு நடவடிக்கையின் பின் மூதூர் மூணாங்கட்டை மலையடிவாரத்தை நோக்கி பேரினவாதக் காய்ச்சல் படையெடுத்துள்ளது. 2012 ஜூன் 08 வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி ஒருவரின் தலைமையில் திடீரென பல வாகனங்களில் வந்திறங்கிய 20க்கும் அதிகமான பணியாட்கள் குழு மூணாங்கட்டை மலைப்பகுதியின் உச்சிக்குச் செல்ல படிகட்டுத் தொகுதியொன்றை அமைக்கும் உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளுமாக ஆக்கிரமிப்புச் செய்தது. அத்துடன் குன்றின் அடிவாரத்தில் சிறியதொரு வணக்கஸ்தள வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவ முயற்சித்தது.

மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவில் திருகோணமலை மட்டக்களப்பு ஏ- 14 வீதியை அண்மித்துள்ள கிராமமான ஜபல் நகரில் முஸ்லிம், தமிழ் மக்கள் வாழ்கின்றனர். முன்னைய காலத்தில் இந்நகர் 64ஆம் மைல் கல்லிலே அமைந்திருந்த காரணத்தினால் அறுபத்தி நாலாங்கட்டை என்றும் இப்பகுதி அழைக்கப்படுகின்றது. சுமார் 200 அடி உயரமுள்ள தொடர் குன்றுகளே மூணாங்கட்டை மலை என்ற முக்கியமான நில அடையாளமாகக் காணப்படுகின்றது. இக்குன்றுகளைச் சூழ மக்கள் குடியிருப்புகளும் மூதூர் வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல் வயல்களும் காணப்படுகின்றன. மூதூர் பிரதேச சபையின் நிர்வாக ஆளுகைக்குட்பட்ட பொதுவான இயற்கை அடையாளமான மூணாங்கட்டை மலைக்குன்றிலிருந்தே கட்டிட நிர்மாணம், வீதி அபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கான பாறாங்கற்களை மூதூர் மக்கள் உடைத்துப் பயன்படுத்துகின்றனர். பாறாங்கல்லுடைத்தல் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயத் தொழிலாக இருந்து வருகின்றது.

இத்தகைய சுமூக சூழ்நிலைகள் சூழ்ந்த மூணாங்கட்டை மலையை திடீரென பௌத்த பிக்குகள் ஆக்கிரமித்து விகாரை அமைக்கின்ற செய்தி அப்பிரதேச வாசிகளை குழப்பத்தில் ஆழ்த்த அவசர அவசரமாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேசினர். விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் இந்நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி இணக்கத்துக்கு வரும் பேச்சுவார்த்தைக்கான நாளொன்றை சர்வமதக்குழு பிரஸ்தாபித்ததற்கமைய 2012 ஜூன் 12 செவ்வாயன்று, விகாராதிபதியை தலைமையாகக் கொண்ட பௌத்த பிக்குகள் குழுவுக்கும் தவிசாளரை தலைமையாகக் கொண்ட சர்வமதக்குழு மற்றும் பொதுமக்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது கோபாவே~மாக குரலெழுப்பிய விகாராதிபதி “நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்நாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றே இதனைச் செய்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் உங்களை இந்த நாட்டைவிட்டே துரத்துவோம்” என்றார்.

மூதூரில் வாழும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தம் ஆன்மிக பேணுதல்களை நிறைவேற்றுவதற்கான பௌத்த விகாரையொன்று ஏலவே இருந்து வருகின்ற நிலையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல் நகரில் விகாரை அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்தது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்கள மக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லையாம்.

 இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வேறு உள்நோக்கங்களைக் கொண்டதென்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. மூணாங்கட்டை மலையில் ஆலயம் அமைப்பதுபோன்ற நடவடிக்கையில் சேருவிலை விகாராதிபதி தலைமையிலான குழு ஈடுபட்டபோதும், அங்கு புதையுண்டிருப்பதாக நம்பப்படும் பொற்குவியலை எடுப்பதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்பதே அது. 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுக்கும் நோக்குடன் உயிர்ப்பலி கொடுக்க இதே மூணாங்கட்டை மலையின் உச்சிக்கு குழந்தையொன்றைக் கடத்திச் சென்றதையும், பலிபூஜையின் இறுதி நேரத்தில் அன்றைய மூதூர் பொலிஸார் அதிரடியாகப் புகுந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றி பௌத்தபிக்குவை கைது செய்ததையும் கிராமவாசிகள் நினைவுபடுத்துகின்றனர்.

மூதூர் மூணாங்கட்டை மலையில் விகாரை அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியின் மறுபக்கமாக இதனைப் பார்த்தபோதும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் விகாரை அமைப்பதும், அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும், சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்துவதும், அச்சுறுத்துவதும் இலங்கையில் பிந்தியகால வரலாற்று நிகழ்வுகள்.

 2012 ஏப்ரல் 20, அன்று தம்புள்ளை நகரில் அமைந்துள்ள அல் ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித் பேரினவாத பௌத்த பிக்குகளால் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அல் ஹைரியா ஜூம்ஆ மஸ்ஜித்தை, மத நல்லிணக்கத்தைப் பேணவேண்டிய பௌத்த பிக்குகளே முன்னின்று, சிங்கள மக்களை அணி திரட்டி வந்து தாக்குதல் நடத்தினர்.

 கடந்த காலங்களிலும் அனுராதபுரம், பொலன்னறுவை, யாப்பாஹ_வ, குருநாகல், கண்டி, கம்பளை, பொத்துவில், தெஹிவளை, காலி உட்பட பல இடங்களிலும் முஸ்லிம்களின் இருப்பை அச்சுறுத்தும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளில் பௌத்த பேரினவாதிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்கு வைத்த இனவாத நடவடிக்கைகளை முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையோடும், மிக நிதானத்தோடும் கையாள்கின்றனர்.

வரலாற்றுப் பாரம்பரியத்துடன், நாட்டின் இறைமையைக் காப்பதிலும் தாய் நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும், சக இனத்தவர்களோடு சகோதர வாஞ்சையோடும் வாழ்ந்து பழகியவர்கள் என்ற அடிப்படையிலும், சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் இன்று வரை நாட்டின் நலனிற்காக உழைப்பவர்கள் என்ற அடிப்படையிலும் முஸ்லிம்கள் இலங்கையில் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டபோதும், இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அணிதிரண்டு தாய்நாட்டின் மீதான தேசப்பற்றை வெளிப்படுத்தினர். அனைத்து முஸ்லிம் நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவளிக்க முஸ்லிம்களே வழிவகுத்தனர். எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தபோதும் சட்ட ரீதியான தீர்வுகளை அணுகுபவர்களாக, சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுபவர்களாகவே இலங்கை முஸ்லிம்கள் கவனிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நாட்டுக்கு விசுவாசமாகவும், மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சாசனத்தை ஏற்றும், போற்றியும் வாழும் ஒரு சமூகத்தின் மீது கடும்போக்கு சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தேர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படுகின்ற நிலையிலும் மேலும் அமைதி காப்பதென்பது எந்தளவுக்கு இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும், எதிர்கால முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்கும் என்பது சந்தேகத்திற்கிடமானதே.

வடக்கில், குறிப்பாக சிறுபான்மை தமிழ் மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளனர். யுத்த காலத்தின்போது இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயங்களாக பிரகனப்படுத்தப்பட்ட பகுதிகளை மீட்கவும், தமிழர் பிரதேசங்களில் இராணுவ மற்றும் சிங்களக் குடியேற்றங்களை தவிர்க்கவுமே தமிழ் மக்கள் பரவலான இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 யாழ் மாவட்டம் வலிகாமம் மேற்கில் மாதகலிலுள்ள புத்த விகாரைக்கு அண்மையில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியுள்ளன. மாதகல் திருவடிநிலை பகுதியில் சுமார் 2 கிலோமீற்றர் வரையான நீளமுள்ள கரையோரப் பகுதியை ஆக்கிரமித்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது. ஏலவே 1995ஆம் ஆண்டு முதல் யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களை இராணுவம் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. யாழ் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு கிழக்கு, வலிகாமம் வடக்கு, மருதங்கேணி, யாழ் நகரின் சில பிரதேசங்களிலும் இதே நிலையிலேயே மக்களின் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் 4,096 ஏக்கர் குடியிருப்பு காணிகளும், வயல் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் பாதுகாப்பு உயர் வலயம் காரணமாக மக்கள் வாழிடங்களை இழந்துள்ளனர். இதுதவிர வடக்கு கிழக்கில் மேலும் பல மக்களின் குடியிருப்புக் காணிகளிலும், வயல் நிலங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளது.

ஏற்கனவே அறியப்பட்ட இப்பிரச்சினைகள் இருக்க, காலி மாவட்டத்தில் பெந்தர எல்லுப்பிட்டி என்னும் இடத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று சுவரொட்டிகள் மூலமாக எச்சரித்து புதிய பிரச்சினைகளுக்கு தூபமிடப்பட்டுள்ளது. அங்குள்ள முஸ்லிம் கடைகளுக்கு மனித மலம் வீசப்பட்டுள்ளதுடன், நாய்களை வெட்டியும் மிகமோசமான செயற்பாடுகளைப் புரிந்து சிங்கள, முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்களை வளர்ப்பதற்கு தளமிடப்பட்டுள்ளது. சிங்கள, முஸ்லிம் மக்கள் மிக அந்நியமாகவும், நெருக்கமாகவும் வர்த்தகம் புரிகின்ற இணங்கி வாழ்கின்ற நகரங்களில் காலி மிகப்பிரதானமானது. காலியில் சிங்களவர்களுடன் ஐக்கியமாக வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்பை அச்சுறுத்துவதற்கான ஆரம்பமாகவே இந்நடவடிக்கைகள் நோக்கப்படவேண்டியுள்ளது.

இவ்வாறு இரு வேறு கோணங்களில், இராணுவ ஆக்கிரமிப்பினூடாகவும், மதவாத தீவிரப்போக்கினூடாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளுக்கெதிரான ஜனநாயகப் போராட்டங்களை தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்த போராட்டமாகவும், நல்லாட்சியை விரும்புகின்ற முற்போக்கு சிங்கள சகோதரர்களையும் இணைத்த போராட்டமாகவும் வடிவம் பெறச்செய்வதனூடாகவே அரசாங்கத்தினை திரும்பி நோக்கச் செய்யமுடியும். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் இடம்பெறவிருந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்ற அனுமதி மறுக்கப்பட்டதானது, அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பலைகளுக்கு அஞ்சுவதைக் குறிப்பதே.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து குரலெழுப்புவதே மிகப் பொருத்தமானது. போர்க்காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் மிகப்பாரிய பின்னடைவுக்கு ஆளாக நேர்ந்தது வரலாற்று உண்மை. வடக்கின் மன்னார் மாவட்டத்தில் சுமார் 70,000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறே கிழக்கிலும் முஸ்லிம்களின் வயல்காணிகளை கபளீகரம் செய்து பொருளாதார ரீதியான பின்னடைவுக்கும் பல்வேறுவிதமான நெருக்குதல்களுக்கும் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் தள்ளியிருந்தனர். போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களை இலக்குவைத்ததுபோன்றே, யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் தமது தீவிரப் போக்குகளால் முஸ்லிம்களை குறிவைத்துள்ளனர். பூதாகரமாக உருவெடுக்கும் இப்பாரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் மக்களினதும், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளினதும் பங்களிப்பு அவசியப்படுகின்ற காலமிது. வீதிப் புனரமைப்பு, கட்டட நிர்மானமும் ஒரு சமூகத்தின் அபிவிருத்தியைக் காட்டக்கூடியதோ, சமூகத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதி செய்யக்கூடியதோ அல்ல. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள், முஸ்லிம்களின் மதத்தளங்களுக்கு எதிரான தாக்குதல்கள், மீள்குடியேற்றப் பிரச்சினைகள் உட்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் அவசியப்படுகின்றன.

 எதிர்கால முஸ்லிம்களின் நலன் கருதி நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களில் முஸ்லிம்களும் பங்கெடுத்து தாம் இழந்தவற்றைப் பெறுவதற்கு உழைக்கவேண்டும். இழந்தவற்றை பெறமுடியாது போயினும், மேலும் கைசேதப்படுவதற்கான சூழ்நிலைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகள் சுதந்திரமாகவும், ஐக்கியமாகவும், கண்ணியமாகவும் வாழுவதற்கான சூழலை உருவாக்கும் தூரநோக்குடன் செயற்டவேண்டும். சமூக, தனித்துவ அடையாளங்கள் பறிபோகப் பார்த்திருப்பதும், அவற்றைக் காப்பாற்ற முயற்சிக்காதிருப்பதும் எதிர்கால சமூக இருப்பை மிகப்பின்னடைவான நிலைக்கே இட்டுச் செல்லும்.  நன்றி - எதுவரை

No comments

Powered by Blogger.