Header Ads



பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாக இருங்கள் - வேதனைமிகு சம்பவம்...! (படங்கள் இணைப்பு)


தினகரன்

கிருலப்பனை சிறுமி கொலை மற்றும் அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதாக கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அருண சந்திரபால தெரிவித்தார்.

குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாருடனும் செல்லாத பிறர் கொடுக்கும் எதையும் வாங்கி உண்ணாத ஆறு வயதே நிரம்பிய கிருஷ்ணகுமார் துஷ்யந்தனிக்கு நேர்ந்த சம்பவத்தைக் கொண்டு பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தேவாலயத்தின் உற்சவம் பார்க்க ஆசையுடன் சென்ற சிறுமி இறுதியில் கழிவுக் கால்வாயிற்குள்ளிருந்தே சடலமாக மீட்கப்பட்டார். உறவினரென நம்பியிருந்த இளைஞனே சிறுமியின் கொலைக்குரிய பிரதான சூத்திரதாரியென்பதனை பொலிஸார் நிரூபித்துள்ளனர்.

சொக்லட்டும் டொபியும் வாங்கித்தருவார் என எண்ணி உறவினரான ‘போலே’ அண்ணாவுடன் சென்ற சிறுமியை அவரே கதற கதற துன்புறுத்தி கழிவுக் கால்வாய்க்குள் தூக்கி வீசுவாரென அச்சிறுமி நினைத்திருக்கமாட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினை என்பதை பெற்றோர்கள் மறந்துவிடக்கூடாது என்று கூறிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர்கள் விடயத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனக் கூறினார்.

கிருலப்பனை கிருல வீதியிலுள்ள கூம்பிகெலே எனும் பிரதேசத்தில் வசித்துவந்த துஷ்யந்தினி கிருஷ்ணகுமார் (துஷி) கொழும்பு பாமன்கடை இராகிருஷ்ணா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியாவார்.

தேவாலய உற்சவம் பார்ப்பதற்காக சித்தார்த்த வீதியிலுள்ள மாமியின் வீட்டிற்கு தனது மகனையும் மகளான துஷியையும் தாய் லலிதா அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது துஷி தனக்கு பசிப்பதாக கூறியதும், அவருக்கு உணவை ஊட்டிவிடுமாறு மாமியின் மகளிடம் கூறிவிட்டு அனைவரும் தேவாலயத்தின் ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வெளியே சென்றுள்ளனர்.

இச்சமயம் வீட்டிற்குள் வந்த மாமியின் மகனான ரவீந்திரன் அரேந்திரன் (போலே) துஷியின் கையை பிடித்து விளையாடியவாறு அவளை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சிறிது நேரமாக வீட்டில் துஷியைக் காணாத நிலையில் அனைவரும் பதற்றமடைந்து சிறுமியை எங்கும் தேடியுள்ளனர்.

துஷி காணமற்போன விடயம் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து துஷியின் அப்பா கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான போலேயும் குடும்பத்தாருடன் இணைந்து தீவிரமாக துஷியை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் துஷி ‘போலே’ அண்ணாவுடன்தான் வெளியில் சென்றார் என்பதனை ‘போலே’யின் தங்கை கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலே அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் இறுதியில் போலே தானே துஷியைக் கொலை செய்ததனை ஒப்புக்கொண்டார். அவரது வாக்கு மூலத்திற்கமைய சம்பவத்தில் தொடர்புபட்ட ஏனைய இருவர்களான ‘அப்பு’ எனப்படும் சுப்ரமணியம் ரமேஸ் மற்றும் வடிவேல்குமார் கிருஷ்ண குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“அன்றைய தினம் வழமை போலவே பாலியல் தேவைக்காகத்தான் பார்க் வீதிக்கு கூட்டிச் சென்றேன். நான் மது அருந்தியிருந்தேன். அதற்கு மேலதிகமாக பாணி மற்றும் போதை மாத்திரையொன்றையும் எடுத்திருந்தேன்.

துஷியுடன் பாலியல் ஷேட்டைகளில் ஈடுபட்டிருந்த வேளை எனது மற்றைய இரு நண்பர்களும் என்னுடன் இணைந்து கொண்டனர். அவர்களும் துஷியுடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இருப்பினும் நாம் அவளது உள்ளாடையை கழற்றியிருக்கவில்லை. துஷி உடனே அழத்தொடங்கி விட்டாள்.

வீட்டில் அம்மாவிடம் கூறுவேன் என்றதும் எனது மற்றைய இரு நண்பர்களும் அவளை கால்வாய்க்குள் தூக்கி எறியுமாறு எனக்கு யோசனை கூறினார்கள். நானும் அப்புவும் இணைந்தே துஷியை கதறக் கதறக் கழிவுக் கால்வாய்க்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டோம். பிறகுதான் உடைமாற்றிக்கொண்டு எனது குடும்பத்தாருடன் இணைந்து நானும் துஷியை தேடினேன்” என்ற உண்மையை போலே அடுத்த நாள் காலை 6.30 மணியளவிலேயே ஒப்புக்கொண்டு மேற்படி வாக்குமூலம் அளித்தார்.

இதேவேளை துஷி கால்வாய்க்குள் தூக்கி எறியப்படும் போது “ஐயோ! அம்மா!” என்ற கதறலையும் நீருக்குள் மூச்சு தத்தளித்தபடி யாரோ நீச்சலடிக்கும் சத்தத்தையும், சிலர் ஓடும் காலடி ஓசையையும் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பணியாளர் கேட்டுள்ளார்.

இருப்பினும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததனால் அவர்களால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை. நாரஹேன்பிட்டிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே கிருலப்பனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அங்கே துஷியின் இடது கால் செருப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கால்வாய்க்குள் எறியப்பட்டது துஷிதான் என்பதனை பொலிஸார் உறுதிப்படுத்திக் கொண்டனர். சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் சடலமாக மீட்கப்பட்டார்.

துஷியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய களுபோவிலை வைத்திய அதிகாரிகள் துஷி கற்பழிக்கப்படவில்லையெனவும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு மாத்திரமே உட்படுத்தப்பட்டிருப்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் சிறுமி நீரில் மூச்சுத்திணறியதிலேயே உயிரிழந்திருப்பதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

சடலத்தின் கால்களில் ஒரு சில நகக் கீறல்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.



2 comments:

  1. இஸ்லாமிய சரியா சட்டபடி இவனுகளை எல்லாம் கதற கதற நடுரோட்டில் வைத்து தூக்கில் போட்டால்தான் இப்படி பட்ட கொடும்பாவிகளின் ஆட்டங்களை குறைக்கலாம்.

    ReplyDelete
  2. tappa widak kudathu kolaidan theerpu

    ReplyDelete

Powered by Blogger.