''நெஞ்சறையில் இறைவன் இதயத்தைக் கச்சிதமாய் வைத்திருக்கும் அமைப்பே ஓர் அற்புதம்''
"ஹார்ட் அட்டெக்' (Heart Attack) வந்து மரணமானவர் என்று சிலரது மரணங்களுக்கு மக்கள் காரணம் சொல்வதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பத்திரிகை களிலும் கூட பலரது மரணங்களுக்கு ஹார்ட் அட்டெக் எனும் மாரடைப்புக் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும்.
தற்காலத்தில் உலகில் அதிக மரணங்களுக்கு இந்த மாரடைப்பு காரணமாய் அமைந்துள்ளது. முன்னைய காலங்களில் மனிதர்கள் அதிகமாக மரணிப்பது நோய்க் கிருமித் தாக்கத்தினால் ஏற்படும் தொற்று நோய்களால் தான் (INFECTION) ஆனால் தற்போது உலகில் எமது நாடு உட்பட மரணத்திற்கான முக்கிய காரணிகளில் முன்னிலையில் இருப்பது இந்த ஹார்ட் அட்டெக்.
இரவில் வழமைபோல் தூக்கத்திற்குச் சென்ற மனிதர் எழும்பவில்லை, காலையில் சடலமாக காணப்பட்டார். காரணம் "ஹார்ட் அட்டெக்' காரைப் பார்க்கில் நிற்பாட்டிய மனிதரால் இறங்க முடியவில்லை. அப்படியே சரிந்து விட்டார். ஹார்ட் அட்டெக். காரியாலயத்தில் வழமை போல வேலை செய்து கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சு வலிக்குது என்று சொன்னார். அப்படியே சாய்ந்து விட்டார். ஹார்ட் அட்டெக். உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே விழுந்து விட்டார். ஹார்ட் அட்டெக். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மனிதர்கள் திடீரென மரணிப்பதெல்லாம் ஹார்ட் அட்டெக் வருவதினால் தான்.
இவ்வாறு திடீரெனத் தாக்கும் ஹார்ட் அட்டெக் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் முன் ஹார்ட்டைப் பற்றி (Heart-இதயம்) சில அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதனின் நெஞ்சறையில் இடம் பிடித்துள்ள இதயம் கடவுளின் அற்புதமான படைப்புகளுள் ஒன்று. அநேகமாக மனிதர்களால் இதயம் நெஞ்சறையின் இடது புறம் அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு இதயம் வலப்புறத்திலும் இருக்க முடியும். இதனை Dextrocardia என்று சொல்வார்கள். இதயம் பக்கம் மாறி இருந்தாலும் தொழிற்பாடுகள் சாதாரணமாகவே இருக்கும்.
நெஞ்சறையில் கடவுள் இதயத்தைக் கச்சிதமாய் வைத்திருக்கும் அமைப்பே ஓர் அற்புதம். சில வருடங்களுக்கு முன்னால் "பைபாஸ்' Bypass ஒபரேஷனுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒருவரின் நெஞ்சறை திறக்கப்பட்டபோது எனது கண்களும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தன. நெஞ்சறையின் நடுவே இருக்கும் முள் (Sternum) இரண்டாகப் பிளக்கப்பட்டு நெஞ்சறை திறக்கப்பட்டது. உரி உபகரணங்கள் நெஞ்சறையின் எலும்புக் கூட்டை ஒரு பக்கமாய் வைத்துக் கொண்டிருந்தன. இதயம் துடிப்பது தெரிகிறது. இதயம் நேரடியாக கண்ணுக்குத் தெரியவில்லை. இதயத்தைச் சுற்றி கடவுள் ஏற்படுத்தியிருக்கும் "கவர் பெக்கிங்' (Pericardium) அதனை மறைத்துக் கொண்டிருந்தது.
எவ்வளவு அற்புதமான, கச்சிதமான பெக்கிங். இதயத்தின் கவர் கழற்றப்படுகிறது. பெக்கிங் உடைக்கப்படுகிறது. அதற்குள்ளே கைப்பிடியளவில் உள்ள அந்த இதயம் சுருங்கி விரிவது கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. ஒரு கணம் கூட நின்று விடாமல் தாமதித்து விடாமல் இந்த இதயம் தொடர்ந்தும் சுருங்கி விரிந்து கொண்டிருந்தது. இந்த அற்புதமான அமைப்பை நேரடியாக காணும் ஒருவன் நிச்சயமாக நாஸ்திகனாக இருக்க முடியாது. நாஸ்திகம் பேசும் மூடர்களை இழுத்து வந்து அந்தக் காட்சியைக் காட்ட வேண்டும் போலிருந்தது எனக்கு.
நான்கு அறைகளைக் கொண்ட அந்த அற்புதமான இதயத்தோடு ஒப்பிட்டு விளங்க வைக்க உலகில் இருக்கும் வேறு ஒரு பொருளையோ அமைப்பையோ கற்பனை செய்ய முடியாமலிருக்கின்றது. இதயம் இரத்தத்தை உடல் முழுவதற்கும் செலுத்துகின்றது என்ற தொழிற்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு இதனை ஒரு Water pumpக்கு ஒப்பிட முடியும்.
இதயம் என்ற இந்த பம்ப் ஒரு சிசு கருப்பையில் உருவாகிய 40 நாட்களில் தனது செயற்பாட்டை ஆரம்பிக்கிறது. வளரும் சிசுவுக்கு போஷணை வழங்க தொடர்ந்தும் இரத்தத்தைப் பம்ப் பண்ணிக் கொண்டே இருக்கும். இந்த இதயம். கருப்பையில் ஏறக்குறைய 240 நாட்களுக்கு தனது செயற்பாட்டை ஒரு வித்தியாசமான முறையில் மேற்கொள்கிறது. இந்த இதயம் சிசு பிறந்த பின்னும் கூட ஒரு கணம் கூட நின்று விடாமல் ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கும் ஓர் உறுப்பாகும்.
வளர்ந்த மனிதனின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 தடவைகள் சுருங்கி விரிகிறது. ஒரு முறை சுருங்கும் போது 70மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. எனவே ஒரு நிமிடத்துக்கு இந்த இதயம் (70x72 = 5040 மில்லி லீற்றர்) செலுத்துகின்ற இரத்தத்தின் அளவு 5 லீற்றராகும்.
இந்த 5 லீற்றரும் ஒரு நிமிடத்தில் முழு உடலையும் சுற்றி வந்து விடும். இந்த சுழற்சியைச் செய்யும் பம்ப் இதயமாகும். ஒரு மணி நேரத்துக்கு இதயம் வெளியே செலுத்தும் இரத்தத்தின் அளவு 300 லீற்றராகும். உங்களின் உயிரை ஒருநாள் காப்பாற்றிக் கொள்ள உங்கள் நெஞ்சறைக்குள் இருக்கும் இதயம் செய்ய வேண்டிய வேலையின் அளவைப் பாருங்கள். அது ஒரு நாளைக்கு (24 மணி) 7200 லீற்றர் இரத்தத்தை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்துக்கு இருபத்தாறு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் (2,628 மில்லியன்) லீற்றர்!
60 வயது நிறைந்த ஒரு மனிதரை அதுவரை உயிரைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள இதயம் 157.68 மில்லியன் லீற்றர் இரத்தத்தை தொடர்ந்தும் பம்ப் பண்ண வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல தலைமுடி முதல் கால் பாதம் வரை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தத்தை சுழற்சி செய்யும் பொறுப்பும் இதயத்திற்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு கடினமான வேலை.
இதில் மற்றோர் அற்புதம் என்ன வென்றால் இவ்வளவு பாரிய வேலையைச் செய்கின்ற இதயம் அளவில் ஒரு கை பிடிதான். நமது உயிரைத் தக்க வைத்துக் கொள்ள இரவு பகலாக 24 மணி நேரமும் இயங்கும் இந்த இதயம் இருப்பதையோ சுருங்கி விரிவதையோ நாம் உணர்வதில்லை. பெற்றோல் இன்றி, ஒயில் இன்றி இயங்கும் இந்த பம்ப் ஓர் அதிசயம்! அற்புதம்!
இதயம் முழு உடலுக்கும் இரத்தத்தை அனுப்புவதன் மூலம் முழு உடலையும் போஷாக்குறச் செய்து காப்பாற்றி வருகிறது. அப்படியானால் இதயம் தனக்குரிய போஷாக்கை எப்படி பெற்றுக் கொள்ளும்? அதற்கு கடவுள் இதயத்தில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். முக்கியமான மூன்று நாடிகள் மூலமாக (Coronary Artery) இதயம் இரத்தத்தைப் பெறுகிறது. இந்த மூன்று நாடிகளும் ஒரு நிமிடத்துக்கு 250 மில்லி லீற்றர் இரத்தத்தை இதயத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதயத்திற்குத் தேவையான இரத்தத்தின் அளவு குறைந்து விட்டால் இதயம் தொழிற்படத் தயங்கும்.
அல்லது இரத்தம் குறையும்போது நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும். இது "ஹார்ட் அட்டெக்' இற்கான ஆரம்ப அறிகுறியாகும். இதயத்திற்கு இரத்தம் கிடைப்பது குறைவதற்கு அந்த மூன்று நாடிகளிலும் ஏற்படும் அடைப்பு (block) காரணமாகிறது. இதனை Ischaemic Heart Disease (IHD) என்று சொல்வார்கள். இது "ஹார்ட் அட்டெக்' வருவதற்கான ஆரம்ப கட்டமாகும். Angiogram என்ற பரிசோதனை மூலம் இந்த நாடிகளில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஏற்பட்ட அடைப்பை மருந்து கொடுத்து நீக்கி விட முடியாது. எனவேதான் ஒபரேசன் மூலம் காலில் இருந்து மேலதிகமாக இருக்கும் ஒரு நாளத்தில் (Vein) துண்டை எடுத்து இதயத்தின் நாடியில் அடைப்பு இருக்கும் இடத்திற்கு இரு புறமும் இணைத்து விடுவதன் மூலம் இரத்தம் புதிய இரத்தக் குழாய்க் கூடாக அனுப்பப்படுகிறது. இதுவே (block is bypassed) பைபாஸ் ஒபரேஷன் எனப்படுகிறது.
அநேகமான சந்தர்ப்பங்களில் பலருக்கு இவ்வாறு தமது இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியாது. இவ்வாறான மனிதர்களுக்கு சிலவேளைகளில் திடீரென மூன்று நாடிகளும் தடைப்பட்டு விட முடியும், இதனையே "ஹார்ட் அட்டெக்' என்பார்கள். இவ்வாறு மூன்று நாடிகளும் முற்றாகத் தடைப்பட்டு விட்டால் திடீர் மரணம் ஏற்படும். இரண்டு நாடிகளில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் ஹார்ட் அட்டெக் வரும். உயிர்வாழலாம். அடைப்பின் மூலம் இதயத்தின் எந்தப் பகுதி பாதிப்படைகிறது என்பதை பொறுத்தும் ஹார்ட் அட்டெக்கின் வருகை வேறுபடும்.
ஹார்ட் அட்டெக் ஒரு முறை வந்துவிட்டால் இதயத்தின் ஒரு பகுதி இயங்காமல் போகும். இது அந்த மனிதரின் அன்றாட வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். படி ஏற முடியாமல் இருக்கும். பாரமான வேலைகள் செய்ய முடியாமல் இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். இரவில் திடீரென மூச்சு விட முடியாமல் போகும். இவ்வாறு பல பிரச்சினைகளால் இந்த நோயாளியின் வாழ்க்கைத் தரம் (Quality of Life) கெட்டு விடும்.
இந்த நாடியில் (Coronary Arteries) அடைப்பு ஏற்படக் காரணமான சில அம்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புண்டு. அளவுக்கு அதிகமாய் கொழுத்திருப்பது (Obesity), உடலைப் பயன்படுத்தி வேலைகள் செய்யாமலிருப்பது (Sedentery Life), புகை பிடிப்பது (Smoking), இரத்தத்தில் கொலஸ்ரோல் அதிகமாக இருப்பது (Hyper Lipidaemia), குருதி அமுக்கம் (Blood Pressure), நீரிழிவு நோயாளியாய் இருப்பது (Diabetes) முதலியன ஹார்ட் அட்டெக்கை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாகும்.
எனவே நாம் எமது வாழ்வை ஒழுங்கு படுத்தி இலகு படுத்தி கடவுளுடனான எமது இதயத்தின் தொடர்பை மேலும் பலப்படுத்துவதன் மூலம் உலக வாழ்க்கையின் அதிகமான அழுத்தங்களில் இருந்து விடிவு பெற்று எமது வாழ்வை நிம்மதி நிறைந்ததாக மாற்றிக் கொள்ள முடியும். இது இயதத்தில் ஏற்படும் பௌதிக ரீதியான நோய்களில் இருந்தும் எம்மைப் பாதுகாக்கும்.
Post a Comment