வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை
இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியாக மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய கடற்பாட்டை தூதுவர்களும் அதிகாரிகள் உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தியத்தலாவை இராணுவ முகாமின் கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமான வெளிநாட்டு தூதுவர்களுக்கான விசேட இரண்டு நாள் செயல் அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில், அமைதிக்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நாடாக இலங்கையினை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்த போதிலும், இலங்கையினால், கடந்த ஆண்டு எட்டு தசம் இரண்டு சத வீத பொருளாதார வளர்ச்சியினை இலங்கையினால் எட்ட முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் அடைந்த அதி கூடிய பொருளாதார வளர்ச்சி வேகமாகும் என்பதுடன் தொடர்ச்சியாக 8 சத வீத பொருளாதார வளர்ச்சியை இலங்கையால் தக்க வைக்க முடிந்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த நிலைமை தொடர்பாக தெளிவு படுத்த வேண்டியது தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன் எடுத்துள்ள வேலைத் திட்டம், அரசாங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை, தகவல் தொழில் நுட்பம் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லல், கிராமிய மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் போன்றவை தொடர்பாக வெளிநாட்டு தூதுக் குழுவிற்கு தெளிவு படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கு சர்வதேச ரீதியாக ஏற்படும் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தூதர அதிகாரிகளுக்கு, இவை தெளிவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையும் எனவும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.
Post a Comment