Header Ads



கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பந்தயத்தில் ஓடத் தயாராகும் குதிரைகள்



ஏ.ஆர்.ஏ.பரீல்

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அரசியல் கட்சிகள் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சித் தலைமைகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  தனித்துப் போட்டியிடுவதா இன்றேல் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா என்று முஸ்லிம் கட்சிகள் இரவிரவாகப் பேசிக் கொண்டிருக்கின்றன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் மற்றும் சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இதில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாந்ததாகும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு பட்டியலின் படியே நடைபெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி. அச்சுதன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியே இத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 441,787 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 245,363 வாக்காளர்களும், மட்டக் களப்பு மாவட்டத்தில் 377,099 வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களும், அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 285 நிலையங்களும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளன.

இம் மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும், திரு கோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் தெரிவு செயப்படவுள்ளனர்.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார். வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த தினத்திலிருந்து எந்த வொரு அரசியல் கட்சியோ வேட்பாளரோ ஊர்வலங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தேர்தல் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடைபெறவுள்ள 5 ஆம் தரப்  புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்கு எந்த இடையூறும் எற்படாத வகையில் வேட்பாளர்கள் பிரசாரங்களில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு

தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும்  தமக்குமிடையில் கருத்து வேறுபாடுகளற்ற அரசியல் நகர்வு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.  த. தே. கூட்டமைப்பு தமக்கும் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கும் இடையில் புரிந்துணர்வினை  உறுதிசெது கொள்ள கலந்துரையாடல்களை ஏற்பாடு செயுமாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கும் ஸ்ரீ ல. முஸ்லிம் கவுன்ஸிலுக்கும் அவசரக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. இக் கடிதத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளும் காப்பற்றப்பட வேண்டும். அவர்கள் தங்கள் வரலாற்றுப் பகுதிகளில் கௌரவமாகவும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உறுதி செயப்பட வேண்டும்.  இவற்றை அடைவதற்கு  ஒருமித்த இலங்கைக்குள் நியாயமான நீதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த இலக்கை அடைவதற்கு கிழக்கு மாகாண சபைத்  தேர்தலில் ஏற்படும் மக்களின் ஜனநாயக முடிவுகள்   பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாமனைவரும் உணர்ந்துள்ளோம். எனவே இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருப்பது அவசியமாகும்" என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மு.கா. யாருடன் இணைந்து போட்டியிடும்?

இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா இன்றேல் அரசுடன் சேர்ந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இக்கட்டுரை எழுதும் வரை அதிஉயர் பீட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை

இதேவேளை முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்றும் ஒருமித்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீனும், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெக் எம். எம். ஏ. முபாரக்கும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஊடக அறிக்கை இவ்வாறு தெரிவித்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாக த. தே. கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் சம்பந்தனது இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டிருந்தார்.

முஸ்லிம்களும், தமிழர்களும் மதங்களினால் வேறுபட்டிருந்தாலும் ஒரே மொழியைப் பேசுபவர்கள். தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வொன்று வழங்கக் கூடிய ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தோற்கடிக்கக் கூடிய வகையில் ரவூப் ஹக்கீம் செயற்படக் கூடாதென சம்பந்தன் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள தீர்வுகளை எதிர்பார்த்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்கச் செவதே எமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

மு.கா.-அரசு உடன்படிக்கை?

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி எம்.பி.யின் கருத்தும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான சபைகளின் அதிகாரத்தைக் கொண்டுள்ளதும் ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட பாராளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுமான ஒரு கட்சியாகும். முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்வைத்தே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே அரசுடன் சேர்ந்து போட்டியிடும். இன்றேல் தனித்து போட்டியிடும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசின் சில அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் அரசுக்கு இல்லை. அரசாங்கத்துடன் இணையாது போட்டியிட்டால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் காங்கிரஸே என்று தெரிவித்துள்ளனர். மு.கா. தனித்துப் போட்டியிட்டால் முஸ்லிம் சமூகம் பல வகையில் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிடும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்பதால் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்று ஒன்று வந்தால் அக்கட்சி எம்முடன் இணைந்தே போட்டியிடும். அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அக்கட்சி எதுவித நிபந்தனைகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. அரசுடன் இணைந்து கேட்பதற்கான நகர்வுகளே இடம்பெற்று வருகின்ற என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சபீக் ரஜப்தீன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கையில், அரசுடனும் ஏனைய அரசியற் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறோம். இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. முதலமைச்சர் பதவி, போனஸ் உறுப்பினர், மாகாண அமைச்சுப் பதவி தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் திருப்தியளிக்காவிட்டால் எம்மிடமுள்ள இறுதி துரும்பைப் பாவிப்போம் என்றார்.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி

‘முஸ்லிம் அரசியற் கட்சிகளின் ஒரு பொதுக் கூட்டணி அல்லது ஒற்றுமைப்பட்ட செயற்பாடு என்ற வடிவில் இணைய வேண்டும் என்ற இலக்கோடு முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் முனைப்புடன் செயலில் இறங்கியுள்ளார்.

முஸ்லிம் சிவில் இயக்கங்களின் கூட்டமைப்பான இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலிடம் இவ்வாறான ஒரு இணைப்பு தேவை என்றும் செயலில் இறங்குமாறும் பல தரப்புகளிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதனையடுத்து முஸ்லிம் கவுன்ஸில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையுடன் இணைந்து செயலில் இறங்கியது.

கடந்த வெள்ளி இரவு நடைபெற்ற விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒருமித்து செயற்பட இணக்கம் தெரிவித்தன. பொது இலக்கொன்றை வைத்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளன. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கட்சியின் பொதுச் செயலாளர் வை. எல். எஸ். ஹமீத், சட்டத்தரணி என். எம். சஹீட் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதி அமைச்சர் பஷீர் சோகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். எம். அஸ்லமும் கலந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் சார்பில் அமைச்சர் அதாவுல்லா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தாலும் தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகளை சந்தேகக் கண்கொண்டே நோக்க வேண்டியுள்ளது. ஒருமித்து செயற்படும் எண்ணம் அதாவுல்லாவிடம் இருந்திருந்தால் அவர் நிச்சயம் கலந்துரையாடலில் பங்கு கொண்டிருக்க வேண்டும். அல்லது அவரது பிரதிநிதியொருவரையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையும் பங்குபற்றியுள்ளது. இதில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெக் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெக் எம். எம். ஏ. முபாறக், பொருளாளர் மௌலவி கலீல், ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் தலைவர் என். எம். அமீன், செயலாளர் எஸ். ஏ. அஷ்கர் கான், எம்.எச்.எம். நியாஸ், சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ், ஷிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ரமழானின் கண்ணியத்தைப் பேணும் வகையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தடுமாறும் மு.கா

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னெடுப்புகள் தொடர்ந்தும் ஒரு ஸ்திரமற்ற தன்மையையே தோற்றுவித்துள்ளன. பொதுச் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி எம்.பி. முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் அரசாங்கத்துடன் சேர்ந்தும் இல்லையேல் தனித்தும் போட்டியிடப் போவதாக கூறியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடச் செவதற்கான முன்னெடுப்புகளை கூட்டமைப்பின் தலைவர் முன்னெடுத்து வருகிறார். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் ஒன்றிணைவதற்காகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்நடத்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு பிரயோகிப்பதற்கும் கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களதும் தமிழர்களினதும் காணிகளை மீட்டெடுத்தல், மீள்குடியேற்றம், உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம், முஸ்லிம்களுக்கென்று தனி அலகு என்பன கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் த. தே. கூட்டமைப்பை புறந்தள்ளிவிட்டு தனித்தோ, அரசுடன் சேர்ந்தோ போட்டியிட்டால் தமிழ், முஸ்லிம் உறவுக்குள் பாதிப்புகளும் நெருக்கடி நிலைகளும் உருவாகும் என ஆருடம் கூறப்படுகிறது.

மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டால் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கூறியுள்ளார். உதாரணமாக முதலமைச்சர் பதவியை மூன்று கட்சிகளும் சுழற்சி அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்ந்தும் ஸ்திரமற்ற நிலைமையிலே இருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீட உறுப்பினர்களின் நிலைப்பாடும் உறுதியாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிலர் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டுமென்றும் ஒரு பகுதியினர் தனித்து போட்டியிட வேண்டுமென்றும் கருத்து வேறுபாடுகளில் இருக்கின்றனர். 

மு.கா. உயர்பீடக் கூட்டம்

செவ்வாக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் உயர்பீடம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் கூடி பல மணித்தியாலங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராந்தது. அரசுடன் இணைந்து  போட்டியிடுவதாலும் தனித்து போட்டியிடுவதாலுமுள்ள சாதக பாதகங்கள் இதில் ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில் இறுதியானதும் உறுதியானதுமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி உறுதியாக இருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையிலேயே கூட்டம் நிறைவுபெற்றது.  நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் மீண்டும் கூடி ஆராந்து இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறப் போகிறதா இன்றேல் அரசுடன் தொடர்ந்து ஒட்டிக் கொள்ளப் போகிறதா என்ற கேள்விகளுக்கு நாளை வெள்ளிக் கிழமை பதில் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மாற்று அரசியல் சக்திகளும் களத்தில்

கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்டு கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் மாற்று முஸ்லிம் அரசியல் சக்திகளும் எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

காத்தான்குடி நகர சபையில் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் கிண்ணியா நகர சபையில் இரண்டு பிரதிநிதித்துவங்களைக் கொண்டுள்ள ஜமாஅதே இஸ்லாமியின் தூய தேச செயற்பாட்டாளர்களும் இத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இது தொடர்பில் இவ்விரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருசாராரும் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து நின்று புரிந்துணர்வுடன் போட்டியிடுவதா என்பது குறித்த பேச்சுக்களும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் தேசிய அரசியல் கட்சிகள் பலவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களான கபீர் ஹாசிம் எம்.பி., கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இரு கட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இவ் இயக்கம் எந்தவொரு தேசிய அரசியல் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை எனவும் தனித்து நின்று சுயேச்சையாகவே போட்டியிடவுள்ளதாகவும் மூன்று மாவட்டங்களிலும் சுயேச்சையாகப் போட்டியிடும் பொருட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகவும் அவ் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கிண்ணியா தூய தேச செயற்பாட்டாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிடவுள்ளதாகவும் இதன்பொருட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகவும் அவ் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கடந்த 8ஆம் திகதி கூடிய ஜமாஅதே இஸ்லாமியின் மஜ்லிஸுஷ் ஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே தாம் இத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் தேர்தல் களம் பலத்த எதிர்பார்ப்புகளைக் கொண்டதாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய அரசியல் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகாத நிலையில் இத் தேர்தல் பந்தயத்தில் ஓடுவதற்காக தேசிய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள்  கூட களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் இறுதி நேரத்தில் இரவோடிரவாக மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தீர்மானங்களைப் போன்றே எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னராக பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறலாம்.

எந்தவிதமான தீர்மானங்களாயினும் அவை கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசியல் தலைமைகளின் கடப்பாடல்லவா?

2 comments:

  1. Muslim Vakkukal sizarap pohirazu. Ungal wakkuhalai Mannakka vendam. Onru katchiyai, Nalla, Thahiriyam ulla manizanai therivu saiyya parungal. Do not be fool. Do not wast your Votes.

    Thanks

    ReplyDelete
  2. எதிர்கால முஸ்லிம் சந்ததியின் நல் வாழ்வு பற்றி சிந்திக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் பௌத்த பேரினவாத, சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமாட்டான்.

    வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், முஸ்லிம் பள்ளி வாயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் காணி அபகரிப்புகள், இவற்றுக்கு எந்தவொரு ஆக்கபூர்வமான முடிவுகளை இன்னும் எட்டாத இந்த அரசாங்கத்துடன் இணைந்து கேட்கும் துரோகிகளை தோல்வி அடையச்செய்வோம்.

    தமிழனை அழித்துவிட்டோம் இனி முஸ்லிம்கள் என்று கூவுவது இந்த அரசியல் ஜடம்களுக்கு கேட்கவில்லையா?

    அனுராதபுரம் தொடங்கி தம்புள்ள , குருநாகல், தெகிவல ..................

    அரசாங்கமோ மகிந்தவோ இந்த காடை கூட்டத்திற்கு எதிராக என்ன செய்தார்கள்.

    முஸ்லிம் அரசியல் வாதிகளே,
    ஒன்றாக இணைந்து தனித்து போட்டியிடுங்கள்.

    நாங்கள் ஒரே உம்மத்தினர்.

    எங்களுக்குள் பிரிவு வேண்டாம்

    நாங்கள் சகோதரர்கள்

    எங்களுக்குள் சண்டை வேண்டாம்.

    அலலாஹ்வின் பாதைக்கு வாருங்கள்.

    இன்ஷா அலலாஹ் நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போட்டியிட வேண்டும்.

    எமது பிள்ளைகள், பேர பிள்ளைகள் .......... அவர்கள் சந்ததிகள் சாந்தியும் சமாதானமாக வாழ வழி சமையுங்கள்.

    பணம், பதவி பெரிதல்ல.

    அல்லாஹ்வின் பாதையில் செல்லவதே பெரிது.

    ReplyDelete

Powered by Blogger.