Header Ads



''இனச்சுத்திகரிப்பு'' பிரான்ஸ் - துருக்கி மீண்டும் முரண்பாடு


இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார். 1915-16 களில் ஆர்மனியர்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்த புதிய சட்டம் இயற்றப்படவுள்ளது. இதற்கு முன்னர் பிரான்ஸ் பாராளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டம், அந்நாட்டு அரசியல் சாசன சபையினால் தடை செய்யப்பட்டிருந்தது.

ஆர்மானியர்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்படவில்லை என துருக்கி அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இனச் சுத்திகரிப்பு என்ற பதத்தை பயன்படுத்தக் கூடாது என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை பிரான்ஸ் - துருக்கி உறவுகளில் முறுகல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஹொலண்டே தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது அறிவித்திருந்தார். இதேவேளை, 1915-16ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது ஆய்வு நடத்தி சட்டம் இயற்றுவது பொருத்தமற்றது என துருக்கி அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக ஆர்மானியா குற்றம் சுமத்தியுள்ளது. பிரான்ஸில் 500000 ஆர்மானியர்களும், 550000 துருக்கியர்களும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.