முஸ்லிம்கள் மீது பௌத்த பேரினவாத இனச்சுத்திகரிப்பு - இஹ்வான்கள் கடும் கண்டனம்
இ.த.
மியன்மார் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைகள் குறித்து ஜோர்தான் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் பொதுக் கண்காணிப்பாளர் கலாநிதி ஹும்மாம் ஸயீத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அங்கு நடக்கும் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னால் சர்வதேச சமூக் மௌனம் காப்பது குறித்தும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
அராகான் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச முஸ்லிம் நாடுகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மியன்மார் முஸ்லிம்கள் அநியாயம், சித்திரவதைகள், கொலை, பலவந்த வெளியேற்றம் என்பவற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளும் மஸ்ஜிதுகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டுள்ளனர்.
இவ்வநியாயத்தை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச இஸ்லாமிய நிறுவனங்கள் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இந்நிறுவனங்கள் இப்படியான சூழ்நிலையில் செயற்படாவிட்டால் எப்போது செயற்படுவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் மீது பௌத்த பேரினவாதிகள் மேற்கொண்டுவரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை நிறுத்துவதற்கு முஸ்லிம்கள் தமது குரல்களை உயர்த்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரிய முஸ்லிம் நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பர்மாவின் அண்டை நாடுகள் இவ்வநியாயத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பர்மா மிக எளிமையான உரிமைகளையும சர்வதேச சட்டங்களையும் மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பா்மாவில் அநியாயத்திற்குட்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஜோர்தான் அரசாங்கமும் மக்களும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment