ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீண்டும் சட்டவிரோத தடுப்புச் சுவர் அமைக்கிறது
மேற்குக் கரையின் எல்லையை ஒட்டி இஸ்ரேலின் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி 5 ஆண்டு தாமதத்தின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணி இன்னும் 5 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என இஸ்ரேல் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் அதிகாரியான கொலனல் ஒபர் ஹின்டி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் இந்த கட்டுமான பணிகள் குறித்து விளக்கியுள்ளார்.
அதில் பெத்லஹாமுக்கு அருகில் குஷ் எட் சியோன் குடியிருப்பு பகுதியை சூழ தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டில் கிழக்கு ஜெரூசலம் குடியிருப்பு பகுதியான மாலே அது மிம்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்று விளக்கினார்.
இந்த தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நிதி நெருக்கடி மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகள் தாமதித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமான பணிகள் பலஸ்தீனர்களின் இரண்டாவது இன்திபாழா போராட்டத்தின் போது கடந்த 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இந்த தடுப்புச் சுவர் மூலம் இஸ்ரேல் தமது நிலத்தை கைப்பற்றுவதாக பஸ்தீனம் குற்றம் சாட்டியது. இந்த தடுப்புச் சுவரின் 85 வீதமான பகுதி பலஸ்தீனின் மேற்குக்கரை நிலப்பகுதியினூடாகவே செல்கிறது. பலஸ்தீன நிலத்தை கைப்பற்றும் இஸ்ரேலின் இந்த தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் 2004 இல் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment