Header Ads



கருமலையூற்றுப் பள்ளிவாசலில் சுஜுத்து செய்ய அனுமதி கிடைக்குமா..?

கருமலையூற்றுப் பள்ளிவாசல் அமைந்துள்ள மலைப்பகுதி.

(எமது இணையத்திற்கு மூதூரிலிருந்து முறாசில் எழுதியனுப்பிய கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்)

மூதூர் முறாசில்

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பரிவிலுள்ள வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர்  பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு அழகான கிராமமே கருமலையூற்று முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமம் உலகப் பிரசித்தமான திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் மேற்குப் பக்கமாக அமைந்திருக்கின்றது. மனதைக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தின் மலைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருப்பது கருமலையூற்றுப் பள்ளிவாசலாகும்.

இற்றைக்கு சுமார் 185 வருட கால வரலாற்றைக் கொண்டமைந்திருக்கின்ற இப்பள்ளிவாசல்  1827ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.( இக்கிராமத்தில் முஸ்லிம்கள் சுமார் 500 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்)  'மஸ்ஜிதுல் ராபியா' என நாமம் சூட்டப்பட்ட இப்பள்ளிவாசல் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் இருந்து சுத்தமான தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. இதன்காரணமாக இப்பள்ளிவாசலும் 'கருமலையூற்றுப் பள்ளிவாசல்' என்ற காரணப் பெயர் கொண்டு அழைக்கப்படலாகியது. இப்பள்ளிவாசலின் அரசாங்கப் பதிவிலக்கம் சுஃ854ஃவுஃ47 ஆகும்.

ஓரு கருமலைக் குன்றிலிருந்து  சுத்தமான நீர் ஊற்றெடுத்துப் பாய்வதென்பது ஒரு அற்புதமாக இருப்பதன் காரணத்தினால் இக்கிராமமும் அதே காரணப் பெயரினால் பிரசித்தமாக பேசப்படலாகியது.(இக்கிராமம் அமைந்திருக்கும் வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மொத்தம் 765 குடும்பங்களைச் சேர்ந்த 2974 பேர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2451 பேர்கள் வாழ்கின்றனர்.ஏனையவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மக்களாகும்.இருந்தபோதும் கருமலையூற்றுக் கிராமத்தில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.) 

'கருமலையூற்று' என்னும் பெயர் பிரசித்தமாவதற்கு முன்பு இக்கிராமமானது இறந்த மனிதர்களின்  குகை என்னும் அர்த்தத்தில் 'டெட்மென்ஸ்கேவ்' என்னும்  பெயரினால் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பகுதியை கைப்பற்றிய காலகட்டத்தில் இப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டனர்.  அப்போது  மக்களால் மதிக்கப்பட்ட இறைநேசர் நால்வரின்  ஸியாரம் இப்பகுதியில்  இருந்ததனாலேயே இக்கிராமத்தையும் இப்பெயர் கொண்டு அழைத்தனர். (இத்தகைய அருகருகே அமைந்திருந்த  மூன்று  ஸியாரங்களின் பக்கத்திலேயே  பள்ளிவாசலும் அமையப்பெற்றுள்ளது.)

கருமலையூற்றுப் பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள வீதித்தடை.

'டெட்மென்ஸ்;கேவ்' என்னும் பெயர் இற்றைவரை இப்பகுதி மக்கள் மத்தியில் வழக்கில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இப்பகுதிவாழ் மக்கள் வைத்திருக்கும் ஆவணங்களிலும் பெரும்பாலும் இப்பெயரே இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இப்பெயருக்கு காரணமான இறைநேசர்களில்  ஒருவரின்   ஸியாரம் மட்டும் தற்போது  பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. இது பள்ளியிலிருந்து சற்று தொலைவில்  அமைந்திருக்கின்றது.  (பள்ளிக்கு அருகில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கு சான்றாக அமைந்திருந்த   அனைத்து ஸியாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டதாக   தெரிவிக்கப்படுகிறது.)

1990ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இங்கு வசித்து வந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றதையடுத்து இப்பள்ளிவாசலும் முறையான பராமரிபற்ற நிலைக்கு உள்ளானது. 

இருந்த போதும் யுத்தம் முடிவுறுத்தப்பட்ட கையோடு இப்பள்ளிவாசலை புனரமைக்கும்   முயற்சியில் இம்மக்கள் ஈடுபட்டனர்.   முன்னாள் அமைச்சரும் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான நஜீப் ஏ.மஜீதின் ஐந்தரை இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் 2009ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசல் இறுதியாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டநிலையில் இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டனர்.

அன்றிலிருந்து இற்றைவரை இப்பள்ளிவாசலை சென்று பார்ப்பதற்கோ, அதில் தொழுகை நடத்துவதற்கோ பாதுகாப்பு படையினர் முஸ்லிம்கள் எவருக்கும் அனுமதி வழங்கவில்லையென இப்பகுதி மக்கள் 'கள்பு' நொந்து கண்ணீர் சிந்தியவர்களாய் கூறுகின்றனர்.

எது எவ்வாறாக இருந்தபோதும்   இப்பள்ளிவாசலை பாதுகாப்புப் படையினரிடம் இருந்து மீளப் பெற்று அதில் ஜும்ஆ தொழுகையோடு ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டுமென்ற தீராத அவா இக்கிராம மக்களின் நெஞ்சத்தில் நிறைந்து கிடக்கின்றது.

இதனால் இப்பள்ளிவாசலை தொழுகைக்காக வழங்குமாறு   இப்பகுதிவாழ் முஸ்லிம் மக்கள்  தொடராக பல்வேறு மட்டங்களிலும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். என்ற போதும் இக்கோரிக்கை சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும்  பாதுகாப்பு படையினரும் அலட்சியமாக இருந்து வருவதாக இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வரலாற்றுப் புகழ் மிக்க  இப்பள்ளிவாசலில் பரம்பரை  பரம்பரையாக தொழுகை நடத்திவந்த இம்மக்களின் உணர்வுகளை மதித்து மீண்டும் இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சகல தரப்பினரும்    கவனம் செலுத்துதல் வேண்டும்.

ஈமானிய உள்ளங்களே, ( விசேடமாக)   இது உங்கள் கவனத்திற்கு!

கருமலையூற்று தண்ணீரிலிருந்து தாகம் தணிக்கும் பொது மக்கள்

No comments

Powered by Blogger.