Header Ads



தமிழ்த் தேசிய வரலாற்றிலிருந்து முஸ்லிம் தேசியம் நிறைய படிக்கவேண்டியுள்ளது - ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் நாம் இறுதியாக எடுத்த தீர்மானம்  தமிழ்மக்கள் முன்னிலையில் என்னை  சங்கடமில்லாமல் முதுகெலும்புடன் பேச வைத்துள்ளது எனத் தெரிவித்த கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றிலிருந்து முஸ்லிம் தேசியம் நிறையவே  படிக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

யாழ். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  இடம்பெற்ற  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த அமரர் எம். சிவசிதம்பரத்தின் நினைவு தின நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

வன்முறை அரசியலிலிருந்து சிவசிதம்பரம் தப்பிப் பிழைத்தார். எந்த  இயக்கம் அவரை அழிக்க நினைத்ததோ அதே இயக்கம் சிவசிதம்பரத்தின் உடல் தகனக் கிரியைக்காக கரவெட்டி சோனப்பு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது  அவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்துக் கௌரவித்தது. இந்த ஆளுமையான அத்தியாயம் தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து மறைந்து முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்த் தலைமைகளையெல்லாம் ஒன்றுபடுத்துவதில் சிவசிதம்பரத்தின் பங்களிப்பு மிகப் பெரியதாகவிருந்தது.

அதேவேளை, பேரினவாத தலைமைகளிடம் எல்லோருமே நிறையவே ஏமாந்தோம், ஆனால் தமிழ்த் தேசியத் தலைமைகள் ஏமாற்றப்பட்டதைப் போல் யாரும் ஏமாற்றப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே தான் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றிலிருந்து முஸ்லிம் தேசியம் நிறையவே படிக்கவேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய முரண்பாடுகளைப் பார்த்து எம்மை நாமே உரசிப் பார்த்து நிறைய படிக்க வேண்டியுள்ளது.

ஐ.தே.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது விடுதலைப் புலிகளுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் முஸ்லிம்கள் தரப்பில் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன். இந்த விடயத்தில் இலங்கை அரசுடன் , இந்தியாவுடன் சர்வதேசத்துடன் முஸ்லிம்களின் வகிபாகம் சரியாகக் கையாளப்படாததால் நான் முரண்பட்டேன்.

இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் இறுதியாக நாம் எடுத்த தீர்மானம் இந்த தமிழ்ச் சங்கத்தில் உங்களுக்கு முன்பாக என்னைச் சங்கடமில்லாமல் முதுகெலும்புடன் பேச வைத்திருக்கிறது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அரசில் அங்கம் வகித்த போது பட்ட அங்கலாய்ப்புக்களையும், அவஸ்தைகளையும் நானும் நிறையவே அனுபவிக்கிறேன். இதனை வரலாறு ஒருநாள் பதிவு செய்யும். நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் என்றாவது ஒருநாள் ஒளிக்கீற்றுத் தெரியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

No comments

Powered by Blogger.