தென்னிந்தியாவில் கூடங்குளம் அணுமின்சார ஆலை - இலங்கைக்கு அச்சுறுத்தல்
TN
தென்னிந்தியாவில் கூடங்குளம் அணுமின்சார ஆலை அமைக்கப்படும் ஆலையில் எப்போதாவது ஜப்பானில் இடம்பெற்றது போன்ற அணுசக்தி கதிரியக்க ஒழுக்கு விபத்து ஒன்று ஏற்பட்டால் இலங்கைக்கு அதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கை அணுசக்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் கூடங்குளம் அணுசக்தி மின்னாலை வட இலங்கையில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருப்பதனால் அங்கு எப்போதாவது ஒரு விபத்து ஒன்று காரணமாக அணுசக்தி கதிரியக்க ஒழுக்கு ஏற்பட்டால் அது இலங்கை மக்களை பெருமளவு பாதித்துவிடும் என்றும் இலங்கை அணுசக்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய விபத்துக்களைத் தடுப்பதற்காக அதிகார சபை இலங்கையின் பல இடங்களில் அணுசக்தி கதிரியக்க தாக்கங்களைப் பதிவு செய்யக்கூடிய கருவிகளைப் பொருத்தி வருகின்றது.
கூடங்குளம் அணுசக்தி மின் ஆலையில் 1000 மெகாவொட் சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 4 பாரிய மின் ஆலைகள் அமைக்கப்படுகின்றன. இதுவே இந்தியாவில் ஆகக்கூடுதலான அளவு மின்சக்தியைத் தயாரிக்கும் அணுசக்தி மின் ஆலையாகும். இதனை சர்வதேச அணுசக்தி அமைப்பு இந்தியாவுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுத்துள்ளது.
தமிழ் நாட்டு மக்களும் சமூக அமைப் புக்களும் சுற்றாடலைப் பாதுகாப்பதில் அவதானம் செய்யும் அமைப்புக்களும் கூடங்குளத்தில் இந்த அணுமின் ஆலையை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டித்துள்ள போதிலும் இந்திய அரசாங்கம் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இதனை செயற்படுத்துவதில் பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. இதனால் எதிர்வரும் இந்தியத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்கலாம் என்றும் அரசியல் அமைப்புக்கள் எதிர்பார்க்கின்றன.
இலங்கை அணுசக்தி அதிகாரசபை கல்பிட்டி, தலைமன்னார், நெடுந்தீவு மற்றும் காங்கேசந்துறை ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக அணுமின் கதிரியக்கக் கசிவுகளை இனங்காண்பதற்கான கருவிகளைப் பொருத்த இருக்கின்றது. இரண்டாவது கட்டமாக இந்தக் கருவிகளை கொழும்பு, காலி, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் பொருத்த இருக்கின்றது.
இதுபோன்றே இந்திய அரசாங்கம் இவ்விதம் பொதுமக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1969 ஆம் ஆண்டு போபாலில் ஆரம்பித்த கிருமிநாசினித் தொழிற்சாலையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதி இரவு ஏற்பட்ட விபத்தில் 30 மெற்றிக்தொன் நிறையுடைய நச்சுவாயு வெளியேறியதனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மக்களின் 3787 பேர் மரணித்தார்கள். அதேயடுத்து ஒருவாரத்தில் மேலும் 3000 பேர் மரணித்தார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 8000 பேர் இதனால் மரணித்தார்கள். இதனால் 5 இலட்சத்து 58,125 பேர் காயமும் அடைந்தார்கள். இவர்களின் 38,478 பேர் நிரந்தரமாக ஊனமுற்றார்கள்.
பாதிக்கப்பட்ட இந்த மக்கள் நஷ்டஈடு கோரி செய்த விண்ணப்பத்துக்கு சாதகமான பதில் ஏதுவும் இதுவரை கிடைக்கவில்லை. வழக்குகள் பல்லாண்டு காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த மாபெரும் விபத்துக்குப் பொறுப்பான நிறுவனத்தின் தலைவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் 2 ஆண்டுகால சிறைத்தண்டனையையும் தலா 2 ஆயிரம் டொலர் அபராதமுமே நீதிமன்றம் விதித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. இதே நிலை கூடங்குளம் அணுமின் உற்பத்தி ஆலையிலும் நடக்கக் கூடாது என்று தென்னிந்தியாவில் எதிர்ப்புத் தெரிக்கின்றார்கள்.
கூடங்குளம் ஆலையில் விபத்து ஒன்று ஏற்பட்டு இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டால் இந்தியா அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
Post a Comment