அமெரிக்கா நினைத்தால்...!
வறுமையை ஒழிக்க பட்ஜெட் போடலாம்; கல்விக்கு பட்ஜெட் போடலாம்; ரகசியங்களை காக்க வேண்டும் என்பதற்காக மெகா பட்ஜெட் போட முடியுமா?
அமெரிக்கா நினைத்தால் எதுவும் முடியும். ஆம், ரகசியங்களை காக்க மட்டும் அது கடந்தாண்டு செய்த செலவு எவ்வளவு தெரியுமா? 55,000,00,00,000 ரூபாய். பூஜ்யங்களை எண்ணி டென்ஷன் ஆக வேண்டாம். (இந்திய மதிப்பு) 55 ஆயிரம் கோடி ரூபாய்.
அமெரிக்காவின் மொத்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டை விட இரு மடங்கு இது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் பட்ஜெட்டை ஒப்பிட்டு சொல்ல வேண்டுமா? அமைச்சகங்கள், துறைகளுக்கான மொத்த ஒதுக்கீடு 6 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய். அதில், ரயில்வேக்கு மட்டும் பட்ஜெட் ஒதுக்கீடு தான் அமெரிக்காவின் சீக்ரட் பராமரிப்பு செலவு.
ரகசியத்தை காக்க அமெரிக்கா 2 ஆண்டு செலவு செய்யும் தொகை யில், நம் நாட்டின் 40 கோடி பேர் வறுமையை ஒரே நாளில் ஒழித்து விடலாம் என்றால் கூட்டிக்கழித்து பாருங்கள். எதற்கு தான் இவ்வளவு செலவு செய்கிறது அமெரிக்கா? பனிப்போர் காலங்களில் அமெரிக்கா பல ரகசியங்களை காக்க வேண்டியதாக இருந்தது. ஆனாலும் அதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டிய நிலை இருந்ததில்லை.
ஆனால், 2001ல் இரட்டை கோபுரம் தகர்ப்பு போன்ற சம்பவங்களை அடுத்து தான், அதன் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.
இதற்காக, உளவு வேலைகளில் அதிகமாக ஈடுபட வேண்டியதாகி விட்டது. உளவு தகவல் களை எல்லாம் ரகசியம் காக்க வேண்டிய வேலையும் அதிகமாகி விட்டது. போதாக்குறைக்கு, விக்கிலீக்ஸ் மூலம் அதன் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்ச், அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்தியதை அடுத்து, ரகசியங் களை காக்க அமெரிக்கா இன்னும் பல வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ரகசியங்களை பதிவு செய்து, கம்ப்யூட்டர் மூலம் பாதுகாத்து வைக்கவும், அதற்காக பல அலுவலகங்களை அமைத்து, ஊழியர்களை நியமித்து வைத்துள்ளது அமெரிக்க அரசு. இந்த துறையின் பெயர் ‘இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஓவர்சைட்’ அலுலகம் என்று பெயர். ரகசியங்களை காக்க இந்த துறைக்கு பட்ஜெட் டில் தனி ஒதுக்கீடு போடப்படுகிறது. கடந்த 2001 வரை ஆண்டு செலவு 25 ஆயிரம் கோடி ரூபாய்தான். இது இப்போது இரு மடங்காகி விட்டது. கடந்த 2010ஐ ஒப்பிடும்போது,
இந்த செலவு 12 சதவீதம் அதிகம். கடந்த 2010 மற்றும் 11 ம் ஆண்டில் ராணுவ ரகசியங்கள் பலவற்றை விக்கீலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்துதான், ரகசியங்களை எல்லாம் வகைப்படுத்துவது, ரகசிய குறியீடு செய்வது, அதற்கான உளவு ஊழியர்களை நியமிப்பது போன்றவை அதிகரிக்கப்பட்டது. மொத்தத்தில், ரகசியங்களை காக்க என்னவெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்பது கூட ரகசியம்தான்.
Post a Comment