தனிப்பட்டோரின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது ஊடக சுதந்திரமல்ல
தினகரன்
ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ரகசியமாக செயற்படுவது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அரச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். நீதிமன்ற அனுமதியுடன் சட்டவரையறைகளுக்குட்பட்டே சி.ஐ.டியினர் செயற்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா எக்ஸ் நியுஸ் காரியாலயம் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஊடகத்துறையை கெளரவமாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். ஊடகத் சுதந்திரத்தின் பேரில் அதனை அழிக்க முயல்வது கவலைக்குரியதாகும். ஊடகங்கள் மக்களுக்காகவே செயற்படவேண்டும். மோசமான மன நிலையில் உள்ள சிலர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட ரீதியில் நபர்களை அவமதிக்க ஊடகத்தை பயன்படுத்துகின்றனர்.
இது ஊடக சுதந்திரமல்ல. ஊடகங்கள் வெளிப்படையாகவே செயற்பட வேண்டும். ஊடக சுதந்திரத்தின் போர்வையில் ரகசியமாக செயற்படுவது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அரச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். இதனால் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் குறித்தது இணையத்தளத்தை சோதனையிட்டனர். அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் அகெளரவத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அரச விரோத செயல் இடம்பெறுவதாக கிடைத்த தகவல்படியே சி.ஐ.டி. யினர் இந்த இணையத்தள அலுவலகத்தை சோதனை செய்தனர்.
இல்லாத ஒரு சட்டத்தின் கீழ் இங்கிருந்தவர்கள் கைது செய்ததாக எதிர்கட்சித் தலைவர் கூறுவது தவறாகும். புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலே சி. ஐ. டி. இந்த விசாரணையை முன்னெடுத்தது. நாட்டில் காணப்படும் சட்டத்திற்கு அமைவாகவே இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டதோடு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment