Header Ads



கொள்கையற்றவர்களின் குரல்கள்..!


ஸர்மிளா ஸெய்யித்

தேசிய அரசியலில் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் குறித்து புத்தூக்கமான கண்ணோட்டங்களும், கருத்தியல்களும் நிகழ்கின்ற காலமிது. ஒருபக்கம் ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்புகளும், இன்னொரு புறம் வழமையான அரசியல் மயப்படுத்தப்பட்ட முன்னெடுப்புகளும் நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் குறித்த பிரஞைகள் சிறுபான்மை மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்ததும், சமூகங்களிடையிலான ஒற்றுமை குறித்ததுமான வௌவேறு கோணங்களில் அலசியாராயப்பட்டு வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இணைந்து செயற்பட வருமாறு முஸ்லிம் காங்கிரஸை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்திருந்தது. அது குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தினாற்போல தெரியவில்லை.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் ஒன்றிணைந்த செயற்பாடும் மிக இன்றியமையாததாக இருந்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம்கள் செயற்படுவதற்கான பின்னணி என்பது வெறுமனே மேலோட்டமான பார்வைகளால் தீர்மானிக்கப்படக்கூடியதல்ல. அது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகப் பார்க்கப்பட்டபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் நம்பகத்தன்மையும், உண்மைத்தன்மையும் ஆழமாக ஆராயப்படவேண்டியதும் உறுதி செய்யப்படவேண்டியதுமாகும்.

2012 ஜூலை 4ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் எஸ். யோகேஸ்வரன் இருவரும் கனடா, டெரொன்டோவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியுள்ளனர். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த எஸ்.சிறிதரனின் பேச்சிலிருந்து கவனிக்கத்தக்க, ஆராயத்தக்க சில கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

அவர் தனது உரையில், 'யூதர்களை அதிகம் பிடிக்கும்' என்று தெரிவிக்கிறார். இதிலிருந்து அவரது உண்மை முகம் வெளிப்படுத்தப்பட்டபோதும், அவர் தொடர்ந்து தெரிவிக்கின்ற கருத்துக்கள் அவர் சார்ந்த அரசியல் செயற்பாடுகளிலும் பாரிய சந்தேகங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்துகின்றது. 'சதாம் ஹூசைன் கொலை செய்யப்பட்டபோது பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். பலருக்கும் பலவிதமான வருத்தங்கள் இருந்தது. ஆனால் நான் அதை சந்தோசமான விடயமாகவே பார்த்தேன். முஸ்லிம்களைக் கட்டுப்படுத்துவதை அல்லது யாரோ அவர்களைக் கட்டுப்படுத்த முனைகிறார்கள் என்பது எனக்கு சந்தோசத்தையே தருகிறது.'

இத்தகைய கருத்தியல் வாதம் கொண்டவர்களை உள்ளடக்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் முஸ்லிம்களை இணைந்து செயற்பட அழைப்பதிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகள், இருப்புக் குறித்த தமது போராட்டங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகளும் பங்கேற்கவேண்டும் என்று விரும்புவது அல்லது பங்கேற்கவில்லையென ஆதங்கப்படுவதில் நியாயத்தன்மைகள் இருக்கமுடியுமா என்பது கேள்வியாகும்.

'தமிழர்களாகிய நாம் யூதர்களிடம் காணக்கூடிய சில தத்துவங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்' என்பதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையில் காணப்படுகின்ற ஒரு கருத்தாக உள்ளது. இவை சிறிதரன் என்கின்ற தனிமனிதனின் உரையாகக் காணப்பட்டபோதும், அதுகுறித்த கண்ணோட்டங்களிலிருந்து அத்தனை எளிதில் மீண்டுவிடவோ, வெறுமனே விட்டு நகரவோ முடியாது. நகரவும் கூடாது.

'எனக்கு முஸ்லிம்களின் செயற்பாடுகளை பிடிப்பதில்லை' என்று அவர் தெரிவிக்கிறார். எதனால் அவருக்குப் பிடிப்பதில்லை? உள்நாட்டு அனுபங்களை எடுத்துப்பார்த்தால், தமிழர்களைப் பிடிப்பதில்லை என்று ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர், ஏன் ஒரு சாதாரண தனிநபர் கூறினாற்கூட அது ஏற்றுக்கொள்ளக்கூடியதும், நியாப்படுத்தக்கூடியதுமாக இருந்திருக்கும்.


கடந்த காலங்களில் தமிழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஈடுபட்டபோது, எவ்விவதமான அடிப்படைகளும் இல்லாமலே முஸ்லிம்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டனர். முடக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாக கபளீகரம் செய்யப்பட்டனர். இவற்றையெல்லாம் நேரடியாக ஒத்துக்கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பகிரங்க மன்னிப்புக் கோரியதையும் யாரும் மறந்திருக்கமுடியாது. மனிதாபிமானமற்ற தவறுகள் மன்னிப்புகளால் நிவர்த்திக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக இத்தனை அநீதிகளை நிகழ்த்தியும் கூட 'முஸ்லிம்களின் செயற்பாடுகளில் எனக்கு பிடிப்பில்லை' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்ததன் கருத்து என்ன?

தமிழர்களுக்கென்றே உருவானபின்பும் கூட தமிழர்களின் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்ட வரலாற்றை மறைக்க முடியாது. தமிழீழப் போராட்டத்திற்காக எத்தனையோ இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாகியும், நீதிமன்றங்களில் காட்டிக்கொடுக்காது தண்டனைக்கு ஆளாகியும் அர்ப்பணம் செய்துள்ளார்கள். ஏன், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் யாழ்ப்பாணக்கோட்டையில் குண்டைக் கட்டிக் கொண்டு தற்கொலைத் தாக்குதலில் குதித்த அக்கரைப்பற்று முஸ்லிம் நபரையும், இன்னும் பல இளைஞர்களையும் வரலாறு மறக்கவில்லை.

இதற்காக விடுதலைப் புலிகளால் முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்யப்பட்ட கைமாறு காலத்தையே வெல்லக்கூடியது.  பள்ளிவாயல்களிலே குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். முஸ்லிம்களை குறிவைத்துக் கொன்றார்கள். வடக்கிலிருந்த முஸ்லிம்களைத் துடைத்தெறிந்தார்கள். மூதூர் பகுதியிலும் இதுபோன்ற நடவடிக்கைக்கு தூபமிட்டார்கள். வன்முறையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றிய பலாத்காரத்தின் வடிவத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த விடுதலைப் புலிகளின் தமிழ்த் தேசிய அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களின் செயற்பாடுகளில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுவது எத்தனை அபத்தமானது. இவருடைய அங்கீகாரத்தை எந்தவொரு முஸ்லிமும் எதிர்பார்க்கவில்லை என்பதும், இத்தகைய முகமூடிகளுடன் சேர்ந்து செயற்பட மனிதாபிமானமுள்ள எந்தவொரு முஸ்லிமும் தயாராகமாட்டான் என்பதும் மற்றுமொரு கண்ணோட்டம்.

தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாஷகளின் பெயரிலும் தமிழ்த் தேசிய அரசியலின் பெயரிலும் இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளின் கையாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதற்கு இதைவிடவும் ஒரு வலுவான ஆதாரம் தேவைப்படாது. சொந்த அரசியல் இலாபத்தினை நோக்காக் கொண்டு கருணாநிதியும், வைகோ, நெடுமாறன் போன்றோர் தாழம்போட தமிழ் மக்களின் முதுகுகளை விற்கின்றவர்கள், சுகபோக வாழ்வை தக்கவைத்துக் கொள்ள இலங்கையில் தொடர்ந்தும் ஒரு கலகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் புலம் பெயர் தமிழர்களுக்கு மேடையாக உள்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாய்விரிக்கின்ற குழுவைச் சேர்ந்தவராகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்க்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஆர்எஸ்எஸ் என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பின் உறுப்பினர். அண்மையில் கேரளாவிற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் நடந்த நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் கேரளத் தமிழ் நாட்டு இந்துக்களின் ஒற்றுமைவேண்டி ஆர்எஸ்எஸ் அமைப்பினால் நடாத்தப்பட்ட பாதயாத்திரையில், ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக அவர் பங்கு கொண்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சியோனிச இஸ்ரேல் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் இந்துத்துவ வாதமும், சியோனிஸமும் உலக முஸ்லிம்களின் பரம விரோதிகள். இவற்றின் அடிப்படையில் இலங்கையில் முஸ்லிம்களோடு அரசியல் ரீதியாக உறவுகளைப் பலப்படுத்தவேண்டும் என்ற கொள்கைகள் பொய்யானதாகவும், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய நிலைகள் உருவாகி வருவதால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க கூடாது என்ற அழுத்தத்தினதும் உள்நோக்கங்களை ஆராயவேண்டியதும், அல்லது இவற்றில் உள்ள பொய்மைத் தன்மைகளை, பசப்புக்களை புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழர் தாயகத்திற்கான போராட்டத்தில் பிளவுகள் ஏற்பட முன்னரும் ஏற்பட்ட பின்னரும் முஸ்லிம்கள் ஒருபோதும் எந்தவொரு பக்கச்சார்பான நிலைப்பாட்டையும் எடுத்தவர்களல்ல. தனித்துவமான போக்குடன் முரண்பாடுகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும் தீர்க்கமான சிந்தனைகளுடன் செயற்பட்ட முஸ்லிம்கள் எந்தக் கணிப்பீட்டில் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடிபடாமல் போயினரென்று உறுதியாகத் தெரியவில்லை. சிலவேளை, தமிழ் ஈழப்போராட்டம் போன்ற வன்முறையானதும், உயிர்களையும் தலைகளையும் எண்ணும் ஒரு போராட்டத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்யாது விட்டதனால் அவருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

இன்னும் ஒரு புறத்தில் நோக்கின், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பவர்களும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என காண்பித்துக் கொள்பவர்களே!


சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவற்கும், தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எவ்வாறான நடவடிக்கைகள் கையாளப்பட்டதோ, அரசியல் அபிலாஷகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட்டதோ அப்படியான செயற்பாடுகளே பல தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் தேசிய அரசியலானது இன்னும் முதல் அத்தியாத்திலேயே நிற்கின்றது. போருக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலான மறு அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கவேண்டும். புதிய உத்திகளுடன் வியூகங்கள் வகுத்துச் செயற்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய அரசியலானது ஆரம்பித்த புள்ளியிலேயே நிற்கின்றது என்பதே உண்மை. தமிழ்த் தேசிய அரசியல் என்பதை புரட்சிகரமான செயற்பாடுகளின் வாயிலாகத்தான் அடைய முடியும் என்கின்ற மனக்கணிப்பீடே இப்பின்னடைவுக்கான மிக முக்கிய காரணம். அதுமாத்திரமன்றி, இது மற்றுமொரு அழிவுக்கு மக்களை வழிகாட்டும் நடவடிக்கை. இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சியோனிஸ இஸ்ரேல் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய சியோனிஸக் கொள்கையை ஆதரிக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தமது சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதியை எப்படி நியாயப்படுத்த முடியும்? தமிழ் மக்களின் உரிமையைக் குறித்தும், அவர்களுக்கு எதிராக அரசு அநீதியிழைப்பது குறித்தும் பேசுவதற்கு அவர் தகுதியானவர்தானா? சியோனிஸத்தை ஆதரித்து யூதர்களின் தத்துவங்களை படிக்கவேண்டும் என்று கூறுகின்றவர்கள், பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க குணங்களின் நியாயத்தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டுமே. உலகில் எந்த நாடுகளில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்குள்ளானாலும் தான் அதனை சந்தோசமாக நோக்குவதாக திருப்திப்படுகின்ற சிறிதரன், தனது சமூகம் ஒடுக்கப்படுவதாக குரல் எழுப்புதும், நில ஆக்கிரமிப்புக் குறித்து புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பேசுவதும் பசப்பானதில்லையா? 

No comments

Powered by Blogger.