Header Ads



"கட்டாக்காலி அரசியல்வாதிகள்''


TL

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்றுவருகின்ற பாலியல் குற்றச் செயல்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது அரசாங்க உயர்மட்டத்திற்கு பெரும் தலையிடியைக்கொடுத்திருக்கிறது.

பாலியல் வன்முறை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவிருப்பதாகவும் எந்தவொரு தேர்தலிலும் அவர்கள் போட்டியிடுவதற்கு  அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அத்துடன், நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய பட்சத்தில் அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே சிரேஷ்ட அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பெற்றோலியம் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம ஜயந்த பாலியல் வன்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கட்டாக்காலி நாய்களுடன் ஒப்பிட்டிருந்தார். இது தொடர்பில்"சத்வமித்திர' அமைப்பின் தலைவியான சாகரிகா ராஜகருணாநாயக்க நேற்றைய  தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் "கட்டாக்காலி அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இவர் சிரேஷ்ட பத்திரிகையாளர் லூசியன் ராஜகருணாநாயக்கவின் மனைவியாவார்.

பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை கட்டாக்காலி நாய்களுடன் ஒப்பிட்டதற்காக  அந்தக் கட்டுரையில் சாகரிகா அமைச்சர் பிரேமஜயந்தவை கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை கீழே படியுங்கள்.

"அமைச்சர் மிகவும் குழம்பிப்போய்இருக்கிறார். அவர் விவகாரங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். நாய்கள், அவை கட்டாக்காலிகளாக இருந்தாலென்ன, வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தாலென்ன. அவற்றின் பாலியல் வேட்கையைக் குட்டி நாய்கள் மீது காட்டுவதில்லை. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் அவற்றின் வேறுபட்ட சுற்றுச் சூழலுக்கேற்ப உடல் ரீதியான முதிர்ச்சியை வெவ்வேறு நிலைகளில் அடைகின்ற வரை அவை பாலியல் நாட்டத்தைக் காட்டுவதில்லை.

பெட்டை நாய்கள் அவற்றின் உடல் ரீதியான பக்குவத்தை அடைந்த பின்னரே கடுவன்கள் பாலியல் உறவு கொள்வது இயற்கையாகும்.  கட்டாக்காலி நாய்களோ அல்லது வீட்டு நாய்களோ ஒரு போதுமே சிறு பிள்ளைகளை மனிதப் பிறவிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்துவது போன்று  குட்டிகளைக் கொடுமை செய்வதில்லை.  இந்த இழிவான கொடுஞ் செயலை நாய்கள் செய்வதில்லை என்பது மனித இனம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு உண்மையாகும்.

அமைச்சர் மக்களைத் தவறாக வழிநடத்துவதை விடுத்து யதார்த்த நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே கட்டாக்காலி நாய்களே செய்யாத செயல்களைச் செய்யும் கீழ்த்தனமான கட்டாக்காலி அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான கல்வியறிவில்லை. பண்பான குடும்பப் பின்னணி இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று மானசீகமான அக்கறையில்லை. ஆனால், உயர் மட்ட அரசியல்வாதிகளினதும் பாதாள உலகத்தவர்களதும் தொடர்புகளை வைத்துக்கொண்டு அரசியலுக்குள் அலைகிறார்கள்'.

No comments

Powered by Blogger.