மன்னாரில் நீதித்துறை துஷ்பிரயோகம் - பாராளுமன்றத்தில் முழங்கிய ஹுனைஸ் எம்.பி.
கடந்த வியாழக்கிழமை 19-07-2012 பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆற்றிய உரை
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இந்த சந்தா்ப்பத்தை வழங்கிய உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். நேற்றும் இன்றும் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்ற நிகழ்வு தொடர்பாக இங்கு உரையாற்றவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான கெளரவ ஜோன் அமரதுங்க மற்றும் கெளரவ ஸ்ரீரங்கா ஆகியோர் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அந்த நிகழ்வானது, ஓர் அமைச்சரால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாக வர்ணித்துப் பேசினார்கள்.
அது உண்மைக்குப் புறம்பானது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் நானும் இருந்தேன். அந்த வகையில் அங்கு நடந்ததைச் சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது. அங்குள்ள நீதவானுக்கு எதிராக உப்புக்குள மீனவ சங்க உறுப்பினர்கள் ஓர் அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுமார் 3 மணித்தியாலங்களாக நடந்த அந்த பேரணியில் அவர்கள் யாருக்கும் எந்தவிதமான பிரச்சினையையும் கொடுக்கவில்லை.
அப்பொழுது உத்தியோகபூர்வ உடையுடன் அங்கு நேரடியாக விஜயம் செய்த நீதவான் அவர்கள் அங்கிருந்த பொலிஸாருக்கு பேரணியில் ஈடுபட்டவர்களைச் சுடுவதற்கும் கண்ணீர்ப்புகை அடிப்பதற்குமான கட்டளையைப் பிறப்பித்தார். அதற்கேற்ப பொலிஸாரும் கண்ணீர்ப்புகை அடித்தார்கள். அதன் பிறகுதான் மக்கள் குழப்ப நிலைக்கு உள்ளானார்கள். இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு அதனை வீடியோ காட்சி மூலமாகவோ அல்லது சாட்சிகள் மூலமாகவோ அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
2002 ஆம் ஆண்டு விடத்தல்தீவிலிருந்து மன்னாருக்கு வருகை தந்த கிறிஸ்தவ மக்களுக்கு அங்குள்ள கிறிஸ்தவ சமூகம் மீன் பிடிப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் கிராமமான உப்புக்குளத்தில் வசித்த மக்கள் 'பாடி' என்ற இடத்தை அவர்கள் மீன் பிடிப்பதற்காக ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைத்தார்கள்.
இப்போதைய சமாதான சூழ்நிலையில் புத்தளத்திலிருந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு சென்றபோது அவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு அந்த இடம் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் அட்டகாசத்தையோ, அநியாயத்தையோ செய்யவில்லை. அந்தப் பிரச்சினையை மீன்பிடி அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கின்ற உதவிப் பணிப்பாளரிடமும் அதேபோன்று மாவட்ட அரசாங்க அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும் எடுத்துச் சென்று, தங்களுடைய இடத்தை தங்களுக்கு ஒப்படைக்குமாறு கூறினார்கள். இது அநியாயமா? என்று நான் கேட்கின்றேன்.
நான் எனது வீட்டை வாடகையின் நிமித்தமோ அல்லது சந்தா்ப்ப சூழ்நிலைக்காகவோ ஒருவருக்கு கொடுத்துவிட்டு 10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நான் எனது வீட்டை கேட்கின்றபோது, வாங்கியவர் பின்னணியில் பலத்தை வைத்துக்கொண்டு அதைத் தர மாட்டேன் என்று சொல்வதுபோலத்தான் இன்றைய மன்னார் மாவட்ட நிகழ்வும் உள்ளது. அங்கு எந்த நிகழ்வை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான்!
அது நிர்வாக விடயமாக இருக்கலாம் அல்லது நீதி சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம், நீதிக்காக நாங்கள் குரல் கொடுக்கும்பொழுது, மக்கள் நீதியை நாடி நிற்கும்பொழுது அங்கு இனவாதம் தூண்டப்படுகின்றது. அதற்குப் பின்னால் இனவாத சக்தி இருக்கின்றது. வட மாகாணத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஏன், சர்வதேசத்துக்கும் அவர்கள் இனவாதத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வடக்கிலிருந்து குறிப்பாக மன்னாரிலிருந்து அரசாங்கத்தின் நற்பெயரை எவ்வாறு அழிக்க முடியும் என்பதற்கான திட்டம் அங்கு தீட்டப்படுகின்றது.
ஒரு விடயம் நடக்கும்பொழுது அது manipulate பண்ணப்படுகின்றது. எவ்வாறு யுத்த காலத்தில் எல்ரீரீஈ ஆயுதத்தை வைத்துக்கொண்டு இந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக, அரசாங்கத்து எதிராகத் துரோகம் செய்து அந்த முஸ்லிம் மக்களை விரட்டியடித்ததோ, அதேபோன்று இன்று நிர்வாகத்திலிருப்பவர்கள் ஆயுதத்திற்குப் பதிலாக பேனையை வைத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்; மீள்குடியேறச் செல்கின்ற இந்தச் சமூகத்தை
விரட்டியடிப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். காடுகளைச் சுத்தம் செய்து அங்கு மீள்குடியேறச் சென்ற முஸ்லிம்களை அங்கிருக்கின்ற கெளரவத்துக்குரிய மதப்பெரியார் ஒருவர் தடுப்பதற்கு எத்தனித்தது பற்றியும் அது சம்பந்தமாக அவர் ஜனாதிபதி அவர்களுக்குக் கடிதம் எழுதியதுபற்றியும் அண்மையில் கெளரவ அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் இங்கு கூறியது உங்களுக்குத் தெரியும். யார் பிழை செய்தாலும் பிழை பிழைதான்!
அது சட்டத்தை இயற்றுபவர்களாக இருக்கலாம் அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறுகின்ற நீதிபதிகளாக இருக்கலாம்; அல்லது சட்டத்தைப் பாதுகாக்கின்றவர்களாக இருக்கலாம். யார் செய்தாலும் பிழையாக இருந்தால் அது பிழைதான். இவ்வாறு பிழையைச் சுட்டிக்காட்டும்பொழுது, அதனை ஓர் இனவாதமாக, ஒரு மதவாதமாக எடுத்து - மதப் பெரியாரை நிந்தித்ததுபோலக் காட்டுவதற்காகவும் - கெளரவத்துக்குரிய ஓர் அமைச்சரை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இழிவுபடுத்துவதற்காகவும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமொன்று மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை நான் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டபொழுது,- நான் ஒரு சட்டத்தரணி; நான் சட்டத்தைப் படித்தவன் என்ற வகையில் சட்டத்துக்கு மதிப்பளிக்கின்றேன்; நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கின்றேன். நீதிமன்றத்துக்கோ அல்லது நீதிபதிக்கோ எதிராக பிழையான வழியில் யார் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராகத் தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். -அங்கு ஒரு சிலர் தம்மிடமுள்ள நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதித் துறையைப் பிழையாக வழிநடத்துவதற்கு முற்பட்டதை நான் என் கண்களால் கண்டேன்.
இன்று அங்குள்ள சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது உண்மையில் சட்டத்துக்கு - நீதிக்கு - எதிராகச் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டமல்ல, மாறாக அது ஓர் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமாகவே இருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வன்னி மாவட்டத்தில் TNA இல் போட்டியிட்ட சிராய்பாய் என்ற சட்டத்தரணியே இவ்வார்ப்பாட்டத்தை முன்னின்று வழிநடத்தினார்.
இவ்வார்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் - சட்டத்தரணிகள் - ஏந்திநின்ற சுலோகங்களைப் பார்க்கும்பொழுது, அவை நீதியைக் காப்பாற்றுவதற்காக, நீதிமன்றத்தைக் காப்பாற்றுவதற்காக எழுதப்பட்டவைகளாகக் காணப்படவில்லை. மாறாக, மன்னார் மாவட்டத்தில் அதிகாரம்மிக்கவரும் அங்குள்ள முஸ்லிம்களினால் தேசியத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சருமானவரை அரசியலிலிருந்து துரத்தவேண்டும்; அவரது அதிகாரங்களை அழிக்கவேண்டும்; முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் சேவை செய்கின்ற அவரை அழித்துவிட வேண்டும்:அங்கிருக்கின்ற தமிழ், கிறிஸ்தவ சகோதரர்கள் இவர் மீது கொண்டிருக்கின்ற அன்பையும் பற்றையும் நம்பிக்கையையும் இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சுலோகங்களாகக் காணப்பட்டன.
அத்தனை பதாகைகளிலும் "அமைச்சர் றிஸாத்தை ஒழிக்க வேண்டும்! அமைச்சர் றிஸாத் ஆண்டவனா?" போன்ற அனைத்துச் சுலோகங்களும் அமைச்சருக்கு எதிராகவே இருந்தன. அமைச்சர் செய்த அநியாயம் என்ன? என்று நான் கேட்கின்றேன். ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்களித்த மக்கள் - எமது மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். அவர்களுக்குத் துன்பம் வருகின்றபொழுது நாங்கள்தான் உதவ வேண்டும்.
அங்கு நடந்த அந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்காக நேற்று நாங்கள் கெளரவ பாதுகாப்புச் செயலாளர் அவர்களிடம் விசேடமாக helicopter ஒன்றைக் கேட்டுப் பெற்று, அதன்மூலம் உடனடியாக அங்கு சென்றோம். அவ்வாறு நாங்கள் செல்லாவிட்டால், அங்கு எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கும். அந்த இடத்திற்கு விஜயம் செய்து அந்த நிலைமையை நேரில் பார்வையிட்ட நாங்கள் அங்கு துன்பத்துக்குள்ளான - பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு வந்தோம். அதாவது அந்த நிலைமையைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் எதற்காக அந்தப் பிரச்சினை எழுந்ததோ, அதைச் சீர் செய்வதன் மூலமும் அந்த மக்கள் எதை வேண்டி நின்றார்களோ, அதை வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாங்கள் நேற்று நடவடிக்கை எடுத்தோம்.
இந்தக் கெளரவமான பாராளுமன்றத்திலே நான் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, தங்களது வங்குரோத்து அரசியலை மறைப்பதற்காக மன்னார் மாவட்டத்திலுள்ள அரச நிர்வாகங்களையும் மற்றும் நீதிமன்றங்களையும் பாவிப்பவர்களுக்குத் தயவுசெய்து மக்கள் துணை போகக்கூடாது! அரசாங்கம் துணை போக வேண்டாம்! எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களே! நீங்கள் உங்களது அரசியல் செல்வாக்குகளுக்காக, உங்களது கட்சிகளை வளர்ப்பதற்காகத் தெரியாத விடயத்தில் மூக்கு நுழைக்க வேண்டாம்! அங்கிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்புக்களின் தரவுகளை வைத்துக்கொண்டு நீங்கள் பாராளுமன்றத்தில் கதைக்காமல், எங்களைப்போல் களத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமையைப் பார்த்துவிட்டு வந்து உண்மையைக் கதைக்குமாறு உங்களிடம் பணிவாகக் கேட்டு, விடைபெற்றுக் கொள்கின்றேன். நன்றி, வஸ்ஸலாம்.
தொகுப்பு –இர்ஷாத் றஹ்மத்துல்லா -
உள்ளம் கருமை கொண்ட, கறுப்புச் கோட்டு போர்த்திய நீதித்துறையிலுள்ள புலிகள்
ReplyDeleteஅகற்றப் பட வேண்டும்.
ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Welldone Mr . Hunais Farook MP Go ahead on the truth way
ReplyDeleteWeldone Sir, Allah Poathumaanavan. Alhamdulillah
ReplyDelete