Header Ads



உலகை அச்சுறுத்தும் “சிறுவர் துஷ்பிரயோகம்” பற்றிய ஆய்வும், இஸ்லாமியத் தீர்வும்


ரஸ்மின் misc

(இந்த ஆக்கத்திற்கான தகவல்கள் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. – சிறுவர் துஷ்பிரயோகம் என்பதின் மூலம் பாலியல் ரீதியாக சிறுவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பிலேயே இக்கட்டுரை ஆய்கின்றது. இந்தக் கட்டுரையின் மூலம் சிறுவர்களுடன் தொடர்பு வைக்கும் அனைவரும் கெட்டவர்கள் அல்லது கெட்ட நோக்கத்துடன் தான் தொடர்பை ஏற்படுத்துகின்றார்கள் என்று வாதிட வரவில்லை.மாறாக சில அயோக்கியர்கள் இப்படிப்பட்ட கீழ்த் தரமான செயல்பாட்டில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை இனம் காட்ட வேண்டும் என்பதே எமது நோக்கம். உண்மையான அன்புடன், பாசமாக சிறுவர்களுடன் பழகக் கூடிய எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் இந்நேரத்தில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.)


இன்றைய உலகு பலவிதமான புதிய பிரச்சினைகளை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. அதில் அன்மைக் காலமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாபாதகத் செயலாக மாறியிருப்பது “சிறுவர் துஷ்பிரயோகம்” என்ற சிறுவர் பாலியல் துன்புறுத்தலாகும்.

பாலியல் ரீதியில் சிறுவர்களைத் துன்புறுத்தும் செயலுக்குப் பயன்படுத்தப் படும் வார்த்தை தான் இந்த “சிறுவர் துஷ்பிரயோகம்” ஆகும்.

இது தொடர்பாக ஊடகங்களில் நாளுக்கு நாள் செய்திகள் ஒளிபரப்பப்பட்டாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு கொடுக்படும் தண்டனையினாலோ அல்லது கைது நடவடிக்கையினாலோ இந்த குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை.

“சிறுவர் துஷ்பிரயோகம்” என்றால் என்ன?

காம வெறி பிடித்த அயோக்கியர்கள், சிறுவர்களையும் வளர்ந்த பெண்களைப் போன்று எண்ணி அவர்களின் முன், பின் துவாரங்களில் உடலுறவில் ஈடுபடுகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்களின் தீய நடத்தையினால் உடலியல் மற்றும் உணர்வு ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உண்டாக்குவதை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும்.

1. உடலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள்.

2. உணர்வு ரீதியிலான துன்புறுத்தல்கள்.

இவ்விரண்டு வகையான துன்பங்களும் சிறுவர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்குபவை தாம். பொதுவாக 18 வயதுக்குற்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்ற பட்டியலில் தான் உலக மட்டத்தில் அடங்கப்பட வேண்டும் என்று 1988ல் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1989 ல் ஐ.நா வினால் வரையறுக்கப்பட்ட இந்தப் பிரேரனையை 1991ம் ஆண்டு இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டது.

“சிறுவர் துஷ்பிரயோகம்” மூலம் சிறுவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பகுதி வாரியாக இப்போது நோக்குவோம்.

இப்போது இந்த ஆக்கத்தின் மூலம் நாம் சொல்ல வரும் செய்தியை ஒவ்வொரு பெற்றோரும் நன்கு கவணித்துக் கொள்ளுங்கள். காரணம் இதில் எதன் மூலமாகவும் உங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படலாம்.

உடலியல் மற்றும் உணர்வு ரீதியில் நடக்கும் துஷ்பிரயோகங்கள்.

(எடுத்துக் காட்டுக்காக இங்கு சில வகையான உடலியல் மற்றும் உணர்வு ரீதியில் நடைபெரும் சில துன்புறுத்தல்களை பட்டியில் போடுகின்றோம். இதுவல்லாத இன்னும் பலவிதமான துன்புறுத்தல்களும் நிகழலாம்).

1.குழந்தைகளின் அந்தரங்க இடத்தை தொடுதல். அல்லது தொட்டு விளையாடுதல்.

உங்கள் குழந்தைகளுடன் விளையாடுபவர்கள் அல்லது உங்கள் குழந்தைகள் மீது அன்பு பாராட்டுவதைப் போன்று நடிக்கும் குற்ற உணர்வு படைத்தவர்கள் பிள்ளைகளின் அந்தரங்க உருப்புகளை தொட்டு விளையாடக் கூடும். இதை அவர்கள் விளையாட்டாக செய்வதாக நாம் எண்ணிக் கொள்வோம்.

ஆனால் குற்ற உணர்வுடன் பிள்ளைகளை அனுகும் இவர்கள் கண்டிப்பாக பாலியல் ரீதியிலான தூண்டுதலின் காரணமாகத் தான் இவ்வாறு செய்வார்கள். இதனை பெற்றோர்கள் கவணித்துக் கொள்ள வேண்டும்.

2. குழந்தைகளை உடல் உறவுக்கு உட்படுத்துதல்.

பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அல்லது பெற்றோர்களுக்குத் தெரியாமல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இத்தகைய ஆசாமிகள் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு (உடலுறவுக்கு) உட்படுத்துகின்றார்கள். இப்படி பாலியல் ரீதியில் குழந்தைகளை உடலுறவுக்கு உட்படுத்துபவர்கள் ஆண் குழந்தைகளை பின் துவாரம் வழியாகவும், பெண் குழந்தைகளை முன் துவாரம் வழியாகவும் இத்தகைய செயல்பாட்டுக்கு உள்ளாக்குகின்றார்கள்.

3. முன், பின் துவாரங்களை பாலியல் சேஷ்டைகள் மூலம் காயப்படுத்துதல்.

சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் போது சிறுவர்களின் பலமில்லாத உடம்பு அதனை தாங்கிக் கொள்ளாத காரணத்தினால் பலவிதமான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள். அது மட்டுமன்றி பிள்ளைகளின் முன் பின் துவாரங்களும் பாதிக்கப்பட்டு அவர்கள் சில நேரங்களில் நிறந்தர நோயாளிகளாகவும் மாறிவிடுவார்கள்.

குழந்தைகள் தங்களின் முன் பின் துவாரங்களில் ஏதும் வலி ஏற்படுவதாகவோ, அல்லது சொறிச்சல், சிறங்கு போன்றவை இருப்பதாகவோ கூறினால் அவர்களின் அந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட பிரச்சினை வருவதற்கான காரணத்தைத் தேடுங்கள்.

குறிப்பாக மருத்துவரின் ஆலோசனையை இதில் முதன்மைப்படுத்துங்கள்.

4. குழந்தை விரும்பாத இடங்களில் முத்தம் கொடுத்தல்.

பொதுவாக எந்தக் குழந்தையானாலும் யாராக இருந்தாலும் அவர்கள் கண்ணத்தில் முத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொள்வார்கள். இது தவிர்ந்த இடங்களில் தாய், தந்தையல்லாதவர்கள் முத்தம் கொடுப்பதை பொதுவாக எந்தக் குழந்தையும் ஏற்றுக் கொள்வதில்லை.

சிறுவர்களை பாலியல் ரீதியில் அணுக நினைக்கும் அயோக்கியர்கள். அவர்களின் தொப்புல், மர்ம உறுப்பு, பித்தட்டு போன்ற இடங்களில் முத்தம் இடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்படி தொடர்ச்சியாக யாராவது நடப்பதை நீங்கள் அவதானித்தால் அவர் விஷயத்தில் கவணமாக செயல்பட வேண்டும்.

5. குழந்தையுடன் தொடர்பில்லாதவர்கள் அவர்களின் ஆடைகளை கலற்றுதல்.

குழந்தையுடன் தொடர்பில்லாத தாய், தந்தை உறவினர்கள் போன்றவர்கள் தவிர்த்து காரணமில்லாமல் யாராவது குழந்தையின் ஆடைகளை கலற்றுகின்றார்களா என்பதில் கவணமாக இருக்க வேண்டும். குழந்தை சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதற்காக அல்லது மலம் கழிக்க அல்லது குழிக்க வேண்டும் என்பதற்காக யாராவது ஆடையை தாய், தந்தையின் அனுமதியுடன் கலற்றி விட்டால் பிரச்சினையில்லை. மாறாக சம்பந்தமில்லாமல் ஆடையை யாராவது கலற்றினால் அல்லது கலற்ற முற்பட்டால் அவர் விஷயத்தில் கவணமாக இருக்க வேண்டும்.

6. ஆபாசமான வார்த்தைகளை குழந்தைகளுடன் பேசுதல்.

குழந்தைகளுடன் பேசும் போது ஆபாசமாக பேசுதல், ஆபாசமாகப் பேசத் தூண்டுதல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல் போன்ற செயலிலும் இந்தக் காமக் கொடூரர்கள் ஈடுபடுகின்றார்கள். இப்படி யாராவது உங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் நடந்து கொண்டால் அவர்கள் விஷயத்திலும் கணவனம் செலுத்துங்கள்.

7. ஆபாச வீடியோக்களை பார்க்கத் தூண்டுதல்.

விஞ்ஞானத்தின் வளர்சியின் உச்சகட்டமாக இன்று செல்போன் கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டுமன்றி இந்த செல்போன்களிலேயே ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை சேமித்து வைக்கக் கூடிய வசதிகளும் இன்று அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப் பட்ட நேரத்தில் நமது பிள்ளைகள் யாரோடு தொடர்பு வைத்துள்ளார்கள் என்தை அறிந்து கொள்ளுங்கள், அவர்கள் தொலை பேசி பயன்படுத்தினால் அவர்களின் கைத் தொலை பேசியில் “மெமரி காட்” போன்றவை இருக்கிறதா? இருந்தால் அதில் அவர்கள் எதனை பதிவேற்றம் செய்து வைத்துள்ளார்கள் போன்ற விபரங்களை அடிக்கடி அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் உங்கள் குழந்தைகளின் கைத் தொலை பேசியை எடுத்து அதில் உள்ளவைகளை சரிபாருங்கள்.

அதே போல் பிள்ளையுடன் பழகும் நண்பர்களி்ன் குணாதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை மற்றவர்கள் மூலம் அறிய முற்படுங்கள்.

யாராவது உங்கள் பிள்ளையுடன் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் மூலம் தொடர்புகள் வைத்திருந்தால் அது தொடர்பாக அவசரமாக முடிவெடுத்து குறிப்பிட்ட நபருடனான தொடர்பை துண்டித்துவிடுங்கள்.

“சிறுவர் துஷ்பிரயோகம்” செய்பவர்களின் எண்ணங்கள் எப்படியானவை?

சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் கயவர்களை சுமார் 06 வருடங்கள் இந்தியாவின் தீகார் சிறையில் வைத்து ஆய்வு நடத்திய டாக்டர் ரஜத் மித்ரா அவர்களிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட நேரத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களின் மனநிலை பற்றி அவர் ஆய்வு செய்த செய்திகளைப் பட்டியல் போடுகின்றார்.
 1. இது ஒரு தீய செயல் என்ற குற்ற உணர்வே அவர்களின் மனதில் இல்லை.
 2. குழந்தைகளையும் பெரியவர்களாகத்தான் இவர்கள் பார்க்கிறார்கள்.
 3.இந்தத் தீய செயல்பாட்டில் ஈடுபடும் போது தந்திரமாக செயல்படுவார்கள்.
 4.யாரையாவது விரும்பினால் அவர்களை குறிவைத்து திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வார்கள்.
 5.குழந்தைகளின் மனதை அவசரமாக ஈர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
 6.பெரியவர்களை விட அதிகமதிகமாக குழந்தைகளுடன் தான் பழகுவார்கள்.
 7.ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவ்வாறு தானது ஆய்வின் மூலம் தான் அறிந்து கொண்ட செய்திகளை பட்டியலிடுகின்றார் ரஜத் மித்ரா.

“சிறுவர் துஷ்பிரயோகம்” நடப்பதற்கான காரணம் என்ன?

சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஏற்படுத்திக் கொள்ளும் காரணங்களை இப்போது நோக்குவோம்.

1. சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை.

கண்டவர்களும் நமது குழந்தையுடன் லேசாக தொடர்பு வைக்கக் கூடிய அளவுக்கு கண்டும் காணாமல் இருக்கும் போது இது போன்ற அயோக்கியர்கள் பிள்ளைகளை தங்கள் காமப் பசிக்கு ஆளாக்கிக் கொள்கின்றார்கள்.

2. பெற்றோரின் கவனக்குறைவு.

பிள்ளை சுதந்திரமாக இருக்க வேண்டும் அல்லது நமது குழந்தை எந்தத் தவறும் செய்யாது போன்ற எண்ணங்களினால் குழந்தை பற்றிய செய்திகளை ஆராயாமல் பெற்றோர்கள் கவனக் குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

3. பொருளாதார பலவீன நிலைமை.

பெற்றோரின் பொருளாதார பலவீனம் காரணமாக தங்கள் பிள்ளைகளுடன் யாராவது இப்படி நடந்தாலும் அது பற்றிய செய்திகள் பெற்றோருக்கு தெரியவந்தாலும் குறிப்பிட்ட நபர் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்திற்காக இந்த விஷயங்களை பெற்றோர் கண்டு கொள்வதில்லை.

4. சிறுவர்களின் அறிவீனம்.

சிறுவர்களின் அறிவீனத்தையும் இத்தகைய மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எது சரி, எது தவறு என்று தெரியாத சிறு பிள்ளைகளை ஏமாற்றுவதின் மூலம் தங்கள் இச்சைக்கு குழந்தைகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.

5. பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகள்.

பெற்றோர்களின் விவாகரத்து நடவடிக்கைகளும் இவ்விஷயத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். பிள்ளைகளை கவணிப்பதற்கு தாய், தந்தை ஆகியவர்கள் இல்லாவிட்டால் அல்லது இருவரின் ஒருவராவது இல்லாவிட்டால் அந்தப் பிள்ளைகளை குறிப்பிட்ட குரோத எண்ணத்துடன் பழகக் கூடிய ஆசாமிகள் தங்கள் வலைக்குள் இலேசாக இழுத்துக் கொள்வார்கள்.

6. தாய் தந்தையரின் வெளிநாட்டுப் பயணம்.

தொழில் நிமித்தமாக அல்லது வேறு சில காரணங்களினால் பிள்ளைகளைப் பிரிந்து பெற்றோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது பிள்ளைகளை சரியாக கவணிப்பதற்கு ஆள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் இப்படிப் பட்ட நேரங்களில் பலவிதமான காரணங்களையும் கூறி பாலியல் ரீதியில் குழந்தைகளை அணுகும் தீயவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

7. பெற்றோர் கல்வியறிவின்மை.

பெற்றோருக்கு மார்க்க மற்றும் உலகவியல் தொடர்பான சமுதாய அறிவின்மை காரணமாகவும் இந்தப் பிரச்சினையில் குழந்தைகள் அவசரமாக சிக்கிக் கொள்வார்கள். சரியையும், தவரையும் பிரித்துக் காட்டுவதற்கு வழிகாட்டிகள் இல்லாத காரணத்தினால் எது சரி என்று தெரிகின்றதோ அந்த பாதையில் குழந்தைகள் பயனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் பிள்ளைகள் வழிகெட்டுப் போவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

8. கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணைய தளங்கள்.

கையடக்க தொலை பேசிகள் மற்றும் இணையதளங்கள் மூலமாக ஆபாச மற்றும் விரசப் படங்களுடன் குழந்தைகளைத் தொடர்பு படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டுவதின் மூலம் பிள்ளைகளை இது போன்ற தீய நடத்தைகளுக்கு ஆளாக்குவார்கள்.

9. மதுபானம் , போதைவஸ்து உபயோகம்.

போதைப் பொருளுடன் பிள்ளைகள் தொடர்பு படுவதினால் அல்லது பெற்றோர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களாக இருப்பதினால் போதைக்கு அடிமையாகும் பிள்ளைகள் சிறுவர் துன்புறுத்தல்களுக்கும் இலேசாக ஆட்பட்டுவிடுவார்கள்.

 10. தனிமைப்படுத்தப்பட்டிருத்தல்.

துணைகள் இல்லாமல் தனிமைப்படுத்தப்படும் போது பிள்ளைகள் துணையைத் தேடுவார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் யார் அவர்களுக்கு அடைக்களமாக இருக்கிறார்களோ அவர்களுடன் குறிப்பிட்ட சிறுவர்கள் ஒன்றிப் போய்விடுவார்கள், அப்படி ஒன்றிப் போய்விடும் சந்தர்ப்பத்தில் யார் அவர்களுடன் அடைக்களமாக இருக்கிறார்களோ அவர்களை அதிகம் நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

சிறுவர்களுக்கு அடைக்களம் கொடுத்து அவர்களை நம்பும் நிலைக்குத் தள்ளும் குறிப்பிட்ட நபர் இந்தத் தீய குணம் கொண்டவராக இருந்தால் கண்டிப்பாக குழந்தை “சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு” தள்ளப்படும்.

11. சிறிய சூழலில் நிறையப் பேர் இணைந்து வாழ்தல்.

சிறிய இடங்களில் இடம் பற்றாக் குறையாக இருக்கும் சந்தர்பங்களில் அதிகமானவர்கள் அந்த இடத்தில் சேர்ந்து வாழ்வதும் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது. அனைவரும் ஒரே இடத்தில் ஒட்டி வாழ்கின்றமை, ஒருவரின் வீட்டின் பின் புறம் அடுத்தவரின் வீட்டின் முன்புறமாக இருத்தல்.

குளியலறை, மலக் கூடங்கள் என்பவை பலருக்கு ஒன்றிரண்டு இருத்தல். இது போன்ற சந்தர்பங்களில் சிறுவர்களுடன் பால்ய தொடர்பை ஏற்படுத்தும் கயவர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இப்படி பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

“சிறுவர் துஷ்பிரயோகத்தினால்” இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள்.

2000 – 2010 ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக “சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு” தெரிவிக்கின்றது.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக “சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள்” பிரதி அமைச்சர் “எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்” அவர்கள் பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள்.
பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பட்டியல் ஆண்டு வாரியாக.

2000 ஆம் ஆண்டில் 600 சிறுமிகள்.

2001 இல் 685 சிறுமிகள்.

2003 இல் 714 சிறுமிகள்.

2003 இல் 753 சிறுமிகள்.

2004 இல் 930 சிறுமிகள்.

2005 இல் 793 சிறுமிகள்.

2006 இல் 799 சிறுமிகள்.

2007 இல் 805 சிறுமிகள்.

2008 இல் 914 சிறுமிகள்.

2009 இல் 922 சிறுமிகள்.

2010 இல் 1089 சிறுமிகள்.

2011 ஆம் ஆண்டில் 1160 சிறுமிகள்

2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் 10164 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட ஆண் பிள்ளைகளின் பட்டியல் ஆண்டு வாரியாக.

2000 ஆம் ஆண்டில் 1557 சிறுவர்கள்.

2001 இல் 1370 சிறுவர்கள்.

2002 இல் 1430 சிறுவர்கள்.

2003 இல் 1762 சிறுவர்கள்.

2004 இல் 2896 சிறுவர்கள்.

2005 இல் 2824 சிறுவர்கள்.

2006 இல் 2355 சிறுவர்கள்.

2007 இல் 2624 சிறுவர்கள்.

2008 இல் 3196 சிறுவர்கள்.

2009 இல் 2954 சிறுவர்கள்.

2010 இல் 4029 சிறுவர்கள்.

2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 27,023 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

“சிறுவர் துஷ்பிரயோகத்தினால்” இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள்.

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் குழந்தைப் பருவத்திலேயே பாலியல் பலாத்காரத்தின் மூலம் சுமார் 53 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

02 குழந்தைகளில் 01 குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றது.

இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களை விட ஆண்களே சிறுவர் துஷ்பிரயோகத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். நூற்றுக்கு 53 சதவீதம் ஆண் பிள்ளைகள் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

47 சதவீதம் பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

2006-ல் ஐ.நா மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, சுமார் 15 கோடி சிறுமிகளும் 7 கோடியே முப்பது இலட்சம் சிறுவர்களும் ஓர் ஆண்டிற்குள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களில் 36 சதவீதத்தினரும், ஆண்களில் 29 சதவீதத்தினரும் தாம் பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் இந்தக் கொடுமையை அவர்களுக்கு இழைத்தவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களே என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.

சட்டம் சொல்வது என்ன?

இலங்கை.

இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி யாராவது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால் குற்றவாளி உடனடியாக 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.

அதிகபட்சமாக 03 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின் வழக்குத் தொடரப்படும்.

03 மாதத்தின் பின் நீதிபதி விரும்பினால் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை (ஜாமின்) கொடுத்து வெளியில் அனுப்பலாம்.

இது தவிர வேறு பாரதூரமான பாதிக்கப்பட்டவன் திருப்தி பெறும் வகையில் எந்தச் சட்டமும் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியா.

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மதிக்கப்படும் இந்தியாவில் இந்தக் குற்றத்தைத் தடுக்க எவ்வித சட்டமும் இல்லை. என்று இந்தியாவின் பாலியல் பலாத்கார தடுப்புப் பிரிவைச் சேர்ந்த நிதிஷ் குமார் என்பவர் தெரிவிக்கின்றார்.

இந்திய ஹை கோர்ட் சட்டப் படி இதை தண்டனை குற்றமாகக் கூட எடுக்க முடியாத அளவுக்கு ஒரு சாதாரண பிரச்சினையாகவே இந்திய சட்டவியல் இதனைப் பார்க்கின்றது என்பதே கவலைக் குறிய விஷயமாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய இரண்டு பிரித்தானியர்களை தண்டிக்க 10 வருடம் தேவைப்பட்டுள்ளது. பத்து வருடங்களின் பின்னர் ஒரு குறிப்பிட்ட தண்டனைகளுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்காகவே சிறுவர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக சிறுவர்கள் பாலியல் ரீதியாகவோ, அல்லது உணர்வு ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ பாதிப்புக்கு உள்ளாகுவதைப் பார்ப்பவர்கள் இது தொடர்பாக உடனடியாக இலவச தொலை பேசி அழைப்பின் மூலம் சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் முறைபாடு செய்வதின் மூலம் குறிப்பிட்ட குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலை பேசி இலக்கங்கள் - 1929

சிறுவர் துஷ்பிரயோகத்திற்குத் தீர்வு இஸ்லாமே!

“சிறுவர் துஷ்பிரயோகம்” தொடர்பில் தீர்வு காண்பதற்கு முடியாமல் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இறைவனால் இவ்வுலகுக்கு வழிகாட்டியாக தரப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் இதற்குத் தெளிவான தீர்வைத் தருகின்றது.

அனைவரும் பொறுப்பாளர்களே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் – புகாரி 2554)

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் என்று கூறிய நபியர்வர்கள் தாய், தந்தை இருவரையும் குறிப்பிட்டுக் கூறுகின்றார்கள். பிள்ளைகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதும் தங்கள் குழந்தைகளுடன் யார் யார் தொடர்பு வைக்கிறார்கள் என்பதைக் கவணிப்பது போன்ற அனைத்து செயல்கள் பற்றியும் நாளை மறுமையில் பெற்றோர் விசாரிக்கப்படுவார்கள் அதனால் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவணமாக இருக்க வேண்டும்.

சிறுவர்களுக்கு முன் பெண்கள் ஆடை மாற்றக் கூடாது.

அந்தரங்க நேரங்களில் அதாவது குறைவான ஆடைகளுடன் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில் சிறுவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அனுமதி கேட்டு அனுமதியளிக்கப்பட்டவுடன் தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.

சிறுவர்களுக்கு முன்னால் பெண்கள் ஆடை மாற்றவோ, அல்லது குறைவான ஆடையுடனோ இருக்கக் கூடாது.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(அல்குர்ஆன் 24 : 58,)

பஜ்ரு தொழுகைக்கு முன்னுள்ள நேரத்திலும்,

நண்பகல் நேரத்திலும் அதாவது உபரியான ஆடைகளை களைந்துள்ள நேரத்திலும்,

இஷா தொழுகைக்குப் பிறகும்,

பருவ வயதை அடையாத சிறுவர்கள் அல்லது அடிமைகள் வீட்டுக்குள் வருவதாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் அனுமதி பெற்ற பின்பு தான் உள்ள வர வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

காரணம் பஜ்ரு தொழுகைக்கு முன்னுள்ள நேரம் பெரும்பாலும் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரமாகும், அதே போல் நண்பகல் நேரம் என்பது வீட்டுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் மார்புகளுக்கு மேல் போடுகின்ற (துப்பட்டா, தாவணி போன்ற) துணிகள் இல்லாமல் இருக்கும் நேரமாகும். இஷா தொழுகைப்குப் பின் தூங்குவதற்குத் தயாராகும் நேரம் என்பதினால் அப்போதும் குறைவான ஆடைகளுடன் பெண்கள் இருப்பார்கள் இப்படியான சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் அல்லது அடிமைகள் வீட்டுக்குள் நுழைய வேண்டிய தேவையேற்பட்டால் அனுமதி கேட்டு அனுமதியளித்த பின்னர் தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

காரணம் சிறுவர்களாக இருந்தாலும் அவர்கள் பெண்களின் அந்தரங்க இடங்களைப் பார்க்கும் விதமாக பெண்கள் இருக்கக் கூடாது. இதன் மூலம் சிறுவயதில் இருப்பவர்களுக்கு பாலியல் ரீதியிலான தீய சிந்தனைகள் உருவாகிவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது.

“சிறுவர் துஷ்பிரயோகமும்” விபச்சாரமே!

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி சிறுவர் துஷ்பிரயோகம் அதாவது சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது தெளிவான விபச்சாரமாகவே கருதப்படுகின்றது.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் 17:32)

மனைவி அல்லது அடிமைப் பெண் தவிர்த்து யாருடனும் பாலியல் ரீதியில் தொடர்பு வைக்கக் கூடாது.

மனிதன் பாலியல் ரீதியிலான உணர்ச்சியுடன் படைக்கப் பட்டவன் என்பதினால் இஸ்லாம் ஆண்களுக்குப் பெண்களையும், பெண்களுக்கு ஆண்களையும் திருமணத்தின் மூலம் அடைந்து கொள்ளும் வழிகாட்டுதலைத் தந்திருக்கிறான்.

தங்கள் மனைவிமார்கள் அல்லது அடிமைப் பெண்கள் தவிர (தற்காலத்தில் உலகில் எங்கும் அடிமைப் பெண்கள் இல்லை) யாரிடமும் எதன் மூலமும் தங்கள் பாலியல் தேவையை தீர்த்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். (அல்குர்ஆன் 23 : 5,6)

தமது மனைவியர் அல்து அடிமைப் பெண்கள் தவிர்த்து வேறு எந்த முறையில் தங்கள் பாலியல் தேவையை நிறைவேற்றினாலும் அது விபச்சாரமாகவே கருதப்படும்.

ஓரினச் சேர்க்கையாளர்களை அல்லாஹ் “கல்மழை” மூலம் அழித்தான்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஓரினச் சேர்க்கை என்ற பாவத்திற்கும் தள்ளிவிடுகின்றது. ஒரு ஆண் இன்னொரு சிறுவனை துஷ்பிரயோகம் செய்தாலோ அல்லது ஒரு பெண் இன்னொரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்தாலோ அது ஓரினச் சேர்க்கை என்ற பாவமான காரியத்தை செய்ததாக மாறிவிடும்.

அல்லது ஒரு ஆண் பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கினாலோ, அல்லது ஒரு பெண் ஆண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கினாலோ அது விபச்சாரம் செய்த குற்றமாக மாறிவிடும்.

பின்னர் ஏனையோரை அழித்தோம். அவர்கள் மீது கல் மழை பொழியச் செய்தோம். எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது. (அல்குர்ஆன் 26 : 172, 173 )

விபச்சாரத்திற்கான தண்டனையே இவர்களுக்கும் வழங்கப்படும்.

திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் 100 கசையடியும், திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும், அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24 : 02)

ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (நூல் – புகாரி 2649)

அபூஹுரைரா (ரலி) அவர்களும், ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது: (ஒரு முறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ் வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்‘ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், “உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்‘ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்கு மிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப் பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி (மரண) தண்டனை கொடுத்தார். (நூல் – புகாரி 2695, 2696 )

திருமணம் செய்தவர்கள் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கினால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் செய்யாதவர்கள் இந்த தீய செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு 100 கசையடிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான தீர்பாகும்.

இஸ்லாம் காட்டும் இந்த வழி முறையை உலகம் ஏற்று நடப்பதினால் மாத்திரம் தான் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க முடியுமே தவிர இது தவிர்ந்து எத்தனை சட்டங்களை இயற்றினாலும் அவற்றினால் இவ்வுலகுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அன்பின் பெற்றோர்களே!
நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக மாறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதுடன், சிறுவர்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதற்கு முயற்ச்சி எடுப்போமாக!

No comments

Powered by Blogger.