ஒற்றைக் காலில் பயணம் செய்யும் அதிகாரிகளால் பௌத்த சாசன அமைச்சுக்கு அபகீர்த்தி
மொஹமட் ஹபீஸ்
நாம் எமது பாதையில் செல்வோம். அதற்கு ஒத்துழைக்க முடியாத அதிகாரிகள் எமது அமைச்சில் இருப்பின் அவர்கள் விருப்பத்துடன் வெளியேறி விடலாம். அதற்கு நான் சம்மதிக்கின்றேன் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
பௌத்த சாசன அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கே.பி; திசாநாயக்கா அமைச்சில் தனது பொறுப்புக்களைக் கையேற்கும் வைபவத்திலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒற்றைக் காலில் பயணம் செய்யும் அதிகாரிகளால் பௌத்த சாசன அமைச்சு அபகீர்த்திக்குள்ளாகியுள்ளது. அதனைச் சுட்டிக் காட்டிய பௌத்த துறவிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த காலங்களில் நான் பௌத்த சாசன அமைச்சில் செயல் படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்திருந்தேன்.ஆனால் அதிகாரிகளில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
சில விடயங்கள் எனக்குத் தெரியாமலே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. தலைமைத்துவம் இன்றி எதனையும்மேற்கொள்ள முடியாது. எமக்குத் தலைமைத்துவம் தேவை. அதற்கு கட்டுப்பட்டவர்களாக நடக்கவேண்டும். கடந்த காலங்களில் பௌத்த சாசன அமைச்சிற்கு ஒரு அமைச்சர் இல்லாதது போல் சிலர் செயல்பட்டனர். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். எனது அமைச்சில் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகம் என்றால் அதைக்குறைக்கத் யார். ஏனென்றால் அதிகாரிகள் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமானால் பணியாற்றும் வேகம் குறைந்து விடும்.
நான் ஒரு பூரணமான பௌத்தன். அவ்வாறே வாழ விரும்புகிறேன். ஜனாதிபதி என்மீது பூரண நம்பிக்கை வைத்து இப்பதவியை ஒப்படைத்துள்ளார். கடந்த காலங்களில் இடம் பெற்றவைகளை மறப்போம். புதிய பாதையில் பயணிப்போம். அதற்கு விரும்பமில்லாதவர்கள் பதவி நீங்கிக் கொள்ளலாம் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார். இவ்வைபவத்தில் சர்வமத அணுஷ்டானங்களும கிரிகைகளும் இடம் பெற்றன.
Post a Comment