Header Ads



''யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாசல்'' அன்றும் இன்றும்..!



அறிமுகம்

யாழப்பாணம் சோனகதெருவின் இதய பூமியாக குளத்தடி பிரதேசம் விளங்குகிறது. கல்விக்காக ஒஸ்மானியா ஆண்கள் பாடசாலை, விளையாட்டுக்காக ஜின்னா மைதானம், குளிப்பதற்கு சின்னக்குளம், பெரியகுளம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல்கள், பொது மலசல கூடங்கள், இவையெல்லாவற்றையும் விட ஜனாஸாக்களை அடக்கும் மையவாடி, மற்றும் எந்த நேரத்திலும் சனநடமாட்டத்துடன் விளங்கும் வீதிகள் போன்றவற்றை கொண்டு விளங்கிய பிரதேசம் இந்த குளத்தடி (சின்னப்பள்ளி) பிரதேசமாகும்.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மர்ஹும் எம்.எம். மக்பூல் அவர்கள் முதல் முஸ்லிம் அரசாங்க அதிபராக விளங்கினார்கள். ஒஸ்மானியாவை திறம்பட நிர்வகித்த மர்ஹும் ஏ.எச். ஹாமிம் அவர்களும் இதன் மஹல்லாவாசியே. யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய எம்.அப்துல் ரஹீம் ஆசிரியர் யாழ் முஸ்லிம்களும் கல்வியும் என்ற ஆய்வை நடத்திய மர்ஹும் அப்துல் கையூம் ஆசிரியர் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை நிரூபித்து புத்தகம் எழுதிய எம்.எஸ்.எம்.ஜான்ஸின் போன்றவர்களினதும் இன்னும் பல பிரபலமான நபர்களையும் பெரும் செல்வந்தர்களையும் கொண்டு விளங்கிய பிரதேசமே இந்த சின்னப்பள்ளி பிரதேசமாகும்.

யாழ்ப்பாணத்தில் உதைப்பந்தாட்டத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய  யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம், கிரஸன்ட் வி.க., சன்றைஸ் வி.க., சம்சுன், எவர் கிறீன், ரைகர்ஸ் வி.க. போன்றவற்றின்  முக்கியமான உறுப்பினர்களின் வதிவிடங்களைக் கொண்டிருந்த ஒரு இடமும் இந்த சின்னப்பள்ளி பிரதேசமாகும்.

இத்தகைய வரலாற்றுப் பதிவுகளை கொண்ட  சின்னப்பள்ளிவாசல் தற்போது மீளக் கட்டப்பட்டுள்ளது. காலத்தால் பிந்தியதாக இருந்தாலும் அமைவிடம் மற்றும் அதன் சிறப்பான கட்டிடக் கலை வேலைகளால் யாழ்ப்பாணத்தில் இப்பள்ளி சிறந்து விளங்குகிறது. 1990 ஒக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் இப்பள்ளிவாசல் 98 விழுக்காடு தொழுகையாளிகளைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளிவாசல் மையவாடியை அண்மித்ததாக காணப்பட்டதால் எல்லோருக்கும் நன்கு பிரசித்தமான பள்ளியாகவும் இது விளங்கியது. சின்னக்குளம் மற்றும் பெரிய குளம் என்ற இரண்டு குளங்களுக்கு அண்மையாக இது அமைந்திருந்ததால் இதனை குளத்தடிப் பள்ளி என்றும் அழைப்பர்.  மேலும் யாழ்ப்பாணம் சோனகதெருவில் மரணமாகி மையவாடிக்கு செல்லவேண்டும் என்பதை 'கடைசியில் நாம் சின்னப்பள்ளிக்குத் தானே செல்லவேண்டும்' என்று மக்கள் கூறுமளவுக்கு மையவாடி நடவடிக்கைகளுடன் இப்பள்ளி இணைந்திருந்தது.

1990 ஒக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றம்

1990 ஒக்டோபர் 30ஆம் திகதி இப்பள்ளிக்கு பின்னாலுள்ள ஜின்னா மைதானத்துக்கே மக்களை வரவழைத்து 'இரண்டு மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள்' என்ற கட்டளையை புலிகள் கூறினர். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள்  வெளியேற்றப்பட்ட காலம் முதல் முஸ்லிம் பிரதேசத்தின் பெரும்பாலான வீதிகள் புலிகளால் போக்குவரத்துக்காக  தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வீடுகள் பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்ற கட்டிடங்கள் எல்லாம் அப்படியே பாதுகாப்பாக இருந்தன. வீடுகள் பள்ளிவாசல்களில் இருந்த காற்றாடிகள் மின்குமிழ்கள் தளபாடங்கள் உட்பட அசையும் சொத்துக்கள் அத்தனையும் புலிகளால் கொள்ளையிடப் பட்டிருந்தன.

மேலும் சில தமிழ் குடும்பங்கள் முஸ்லிம்களின் வீடுகளில் அத்துமீறி  குடியேறியிருந்தனர். சில மாவீரர் குடும்பங்களும் இப்பிரதேசத்திலிருந்த சில வீடுகளில் புலிகளால் குடியேற்றப்பட்டிருந்தனர். 1995 டிசம்பர் 2ஆம் திகதி  ஒபரேசன் ரிவிரெச மூலமாக யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் மக்கள் படிப்படியாக யாழ்ப்பாணம் திரும்பி மீளக்குடியேறினர். ஆனால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாதவாறு ஏ-9 பாதையின் கனகராயன் குளம் கொக்காவில் முறிகண்டி போன்ற பிரதேசங்கள் புலிகளின் கைகளில் இருந்தது. அப்போது கடற்போக்குவரத்தும் அவ்வளவு பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கான கடற்போக்குவரத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் தனியார் விமான சேவையில் ஈடுபட்ட விமானங்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தி விமானத்துடன் மக்களையும் அழித்ததால் முஸ்லிம்கள் விமானப் பிரயாணத்தையும் பாதுகாப்பாக கருதவில்லை. இக்கால கட்டத்தில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் ஒழுங்கான தொழில்களிலின்றி வீடுகளின்றியும் பணமின்றியும் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில் செலவு கூடிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்கு வரத்துகளை முஸ்லிம்களால் மேற்கொள்ள முடியாதிருந்தது.   மேலும் புலிகள் முற்றாக அழிக்கப்படாததால் யாழ்ப்பாணம் சென்று மீளக்குடியேறுவது ஆபத்தானது என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தனர்.  இதனால் முஸ்லிம்கள் மீளக்குடியேறும் எண்ணத்தை பிற்போட்டிருந்தனர்.

வீடுகள் பள்ளிவாசல்கள் பாடசாலைக் கட்டிடங்கள் உடைத்தழிப்பு

1996 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் வீடுகளை தமிழர் சிலர் அடாத்தாக பிடித்து குடியிருந்தனர். இராணுவத்தினர் முஸ்லிம்களின் வீடுகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வில்லை. புலிகளின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில் சில திருடர்கள் முஸ்லிம்களின் வீடுகளை உடைத்து கதவுகள் , நிலைகள், யன்னல்கள், கொங்கிரீட் கல்லுகள், கூரைகள் என்பவற்றை கழவாடிச் சென்று தமது வீடுகளை அமைத்தனர். சில திருடர்கள் வீடுகளை உடைத்து எடுத்த கட்டிடப் பொருட்களை விற்பதை தொழிலாகச் செய்தனர். வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்ட இறுதிக்கட்டத்தில் பாடசாலைகள் பள்ளிவாசல்களையும் உடைத்து கட்டிடப் பொருட்களை எடுத்து விற்றனர். இதனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப்பட்டு கட்டிட எச்சங்களே யாழ் சோனகதெருவில் காணப்பட்டது.

2002 சமாதான உடன்படிக்கை

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி புலிகளும் அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்ரம சிங்கவும் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். இதன் பிரகாரம் 2002 இன் மத்திய காலப்பகுதியில் யாழ்ப்பாண வீதி திறக்கப்பட்டது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் அப்பாதையூடாக பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் சென்று பார்த்த போது பள்ளிவாசல்கள் வீடுகள் பாடசாலைகள் என்பன உடைக்கப்பட்டு யாழ் சோனகதெரு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் மீளக்குடியேறும் சிந்தனையை கைவிட்டனர். சில குடும்பங்கள் மீளக்குடியேறின. அதேவேளை யாழ் பிரயாணத்தின் இடையில் ஓமந்தையிலும் முகமாலையிலும்   கடுமையான சோதனைகள், தனிப்பட்ட விசாரணைகள், பொருட் பறிமுதல்கள் என்பவற்றைச் புலிகள் தமது படைகள் மூலம் செய்து முஸ்லிம்களுக்கு அச்சமான ஒரு சூழ்நிலையை தோற்றுவித்து அதனூடாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்தனர்.  2006 ஒக்டோபரில் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஆரம்பித்த யுத்தத்தினால் மீண்டும் யாழ் கொழும்பு தரைவழிப் போக்கு வரத்து தடைப்பட்டது. இதனால் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் சிக்கினர். இருந்த போதும் கடல்வழி போக்குவரத்துகள் இடம்பெற்றதால் யாழ்ப்பாணத்துக்கு முஸ்லிம்கள் சிலர் கப்பல் மூலம் போய்வந்தனர்.

இறுதி யுத்த வெற்றி

2009 மே 19 அன்றுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதன் சில மாதங்களின் பின்னர் யாழ்ப்பாண வீதியும் திறக்கப்பட்டதால் முஸ்லிம்களும் இலகுவாக போக்குவரத்துகளை செய்யக் கூடியதாக இருந்தது. இந்த வாய்ப்பினால் முஸ்லிம்கள் படிப்படியாக மீளக்குடியேறி வருகின்றனர். இச்செய்தி எழுதப்படும் 2012 நடுப்பகுதி வரை  வரை ஏறக்குறைய 450 முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. மேலும் 2000 குடும்பங்கள் மீளக்குடியேற்றத்துக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் வீடுகள் கட்டித் தரப்பட்டால் மீளக்குடியேறும் எண்ணத்தில் உள்ளனர்.

மீள்குடியேற்றமும் சின்னப்பள்ளியும்

அதேவேளை சின்னப்பள்ளி மஹல்லாவாசிகளான 30 குடும்பங்கள் ஏற்கனவே மீளக்குடியேறியுள்ளன. அவர்கள் தொழுவதற்காக மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் கவனிப்பாரின்றி கிடக்கும் கட்டிடங்கள் பறிபோகக் கூடிய அபாயமும் காணப்படுகின்றது. இதனால் மஹல்லாவாசிகள் சிலர் பள்ளியின் மீது அக்கரையுடையவர்களைச் சந்தித்து பள்ளிவாசலை மீளக்கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதன் பிரதிபலனாக  சின்னப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கான கூட்டமொன்று நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நீர்கொழும்பு ஆமிலுல் இஸ்லாம் மண்டபத்தில் 2011 மே 29ஆம் திகதி காலை 10 மணியளவில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பள்ளிவாசல் மீளக் கட்டப்பட வேண்டுமென்ற ஏகோபித்த கருத்து முன்வைக்கப்பட்டது.

யாழ் சின்னப்பள்ளிவாசல் கட்டிட புனர்நிர்மாணக்  குழு

அதைத் தொடர்ந்து 'யாழ் சின்னப்பள்ளிவாசல் கட்டிட புனர்நிர்மாணக்  குழு'  என்ற பெயரில் ஒரு நடவடிக்கைக் குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக அல்ஹாஜ் எம்.எம். முஸாதீக் அவர்களும் இணைச் செயலாளராக அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜான்ஸின் அவர்களும் ஏ.சி. ஜலீல் அவர்களும்,    பொருளாளராக அல்ஹாஜ் ரி.எம்.இப்திகார் அவர்களும் உப பொருளாளராக ஏ.ஜி.நஸீர் அவர்களும், கணக்காய்வாளராக ஏ.கே. சைரக்  அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் குழு உறுப்பினர்களாக எம்.எஸ்.மாலிக், அல்ஹாஜ் ரி. இன்ஸார், எஸ்.ஏ.சி.எம். நிலாம்தீன், அல்ஹாஜ் எம்.எஸ்.ஜஹான்கீர், அல்ஹாஜ் ஏ.கே. நவாஸ், அல்ஹாஜ் எம்.ரி.நஸார், அல்ஹாஜ் எம்.ரி.உவைஸ், எம்.எஸ்.ஜின்னா, ஏ.மலீக் மௌலவி, எஸ்.எச் முத்தலிப், அல்ஹாஜ்  ஏ.எம். ஹிபதுல்லாஹ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தக்குழு பல்வேறு முஸ்லிம் சகோதரர்களைச் சந்தித்து பணவுதவியை பெற்றுக் கொண்டது. இப்பள்ளி மீளமைப்புக்காக மஹல்லவாசிகளே பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பது பாராட்டத்தக்கது.  
 
ஆரம்பகால பள்ளிவாசல்

யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1744ஆம் ஆண்டளவில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் சகல எதிர்ப்புகளையும் சதித்திட்டங்களையும் சவாலுடன் எதிர்கொண்ட சில குடும்பங்கள் மட்டும் நல்லூர் சோனவன் தோப்பில் வாழ்ந்தனர். நல்லூர் கந்தசாமிக் கோயிலுள்ள இடத்திலிருந்த இஸ்மாயில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதால் தொழுவதற்கு இடமின்றி இக்குடும்பங்கள் சில சவால்களை எதிர் கொண்டனர். இந்தக் குடும்பங்கள் முஸ்லிம் படைவீரர்களின் குடும்பங்கள் என்றதாலும் இவர்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாவற்றையும் வீரத்துடன் அவர்கள் எதிர்த்து நின்றதால் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. தொடர்ந்தும் தமிழர்களின் பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் இன்றி வாழ முடியாது என்பதையுணர்ந்த அக்குடும்பங்கள் 1890களில் நல்லூர் சோனவன் தோப்பிலிருந்து வெளியேறி குளத்தடி பிரதேசத்தில் குடியேறினர். அக்காலத்தில் இப்பிரதேச மக்கள் தற்போதைய 1590களில் அமைக்கப்பட்ட சோனகதெருவின் முதல் பள்ளியாகிய மானிப்பாய் வீதி மொஹிதீன் 1615களில் பள்ளிக்கும் அமைக்கப்பட்ட இரண்டாவது பள்ளியாகிய பெரிய பள்ளிக்குமே தொழுகைகளுக்காக சென்று வந்தனர். இந்நிலையில் தமது பிரதேசத்திலும் ஒரு பள்ளிவாசல் வேண்டுமென்ற தேவையை இப்பிரதேசவாசிகள் உணர்நதனர். இதன் பிரகாரம் உருவாக்கப்பட்டது தான் சின்னப்பள்ளிவாசலாகும்.

 ஆரம்பத்தில் சின்னப்பள்ளி தற்போது அமைந்துள்ள இடத்துக்கு சற்று முன்பாக மடம் போன்ற அமைப்பில் ஓரிடம் காணப்பட்டது.  இவ்விடத்தில் மக்கள் கூடிக் கதைத்து விட்டுச் செல்வது வழமையாகவிருந்தது. சில வேலைகளில் அம்மடத்தில் சண்டைகள் இடம்பெறுவதுமுண்டு. இந்தச் சண்டைகளை இல்லாதொழிக்கும் வகையில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது.

 கருவல் அப்பா என்று அழைக்கப்பட்ட அப்துல் காதர் கண்டு மீராண் கண்டு என்பவர் அந்த மடத்தில் திக்ரு மஸ்லிஸ்களை நடத்தி வந்தார். அதனாலும் மக்களை திருத்த முடியாமல் இருந்ததால் அம்மடத்தில் தொழுகையை நடத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில  சக்திகளின் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் மடத்தை வேறு இடத்தில் அமைத்துத் தருவதாக சிலர் கூறியதால் எதிர்ப்புகள் கைவிடப்பட்டன. 1940களில் பள்ளிவாசலாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேரே தொழுது வந்தனர். பள்ளிக்கான கொட்டில் 10அடி அகலமும் 12அடி நீட்டமும் கொண்டதாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. யாழ்ப்பாணத்திலேயே மிகச்சிறிய பள்ளியாக இது காணப்பட்டதால் இதற்கு சின்னப்பள்ளி என மக்கள் பெயரிட்டனர். சின்னப்பள்ளிவாசலுக்கு மௌலான இத்ரீஸ் தைக்கா என்றும் காட்டுப்பள்ளி என்றும் முஹதீன் தம்பி என்பவர் கட்டியதால் 'முஹிதீன் பள்ளி' என்றும் வேறு சில பெயர்கள் உள்ளன. ஆரம்பத்தில் இப்பிரதேசம் காடுபோல் காணப்பட்டதால் காட்டுப்பள்ளி என்ற பெயரையும்  பெற்றது. ஆனால் உண்மையில்  காட்டுப்பள்ளி என்ற பெயர் ஜனாஸா தொழுகை இடம்பெறும் பள்ளிக்கே உரியது. இக்கட்டிடம் சின்னப்பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்பு கட்டப்பட்டது.  இத்ரீஸ் மௌலானா என்பவர் 1816 ஆம் ஆண்டளவில் காலமாகி மையவாடியில் அடக்கப்பட்டுள்ளார். இவரது பெயரிலேயே சின்னப்பள்ளி ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இனிவரும் காலங்களில்  இது சின்னப்பள்ளிவாசல் என்றே அழைக்கப்படும்.

காட்டுப்பள்ளி அல்லது ஜனாஸா பள்ளி

பெரிய குளத்துக்கு முன்னாள் இருக்கும் பள்ளிவாசல் தான் காட்டுப்பள்ளியாகும் 1920களில்  இது கட்டிடமாக அமைக்கப்பட்டது. கட்டிடத்துக்கான முழுச் செலவையும் மர்ஹும் ஆ.சேகு மதார் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பள்ளி  ஜனாஸா தொழுகைக்காக மட்டும் கட்டப்பட்ட பள்ளியாகும். வேறு தொழுகைகள் இங்கு இடம்பெறுவதில்லை. இக்கட்டிடம் முதல்  சின்னப்பள்ளிவாசல் வரையான 260அடி நீளமான மையவாடி சுற்றுமதிலை மர்ஹும் எம்.எம். சரீப் அவர்களே தமது செலவில் கட்டுவித்தார். காட்டுப்பள்ளியை அப்போது உயிருடனிருந்த எம்.சேகு மதார், ஐதுறூஸ், பைக்குட்டி, மாதா கச்சு முஹம்மத், எம்.எம்.சரீப் போன்றவர்கள் 1972 வரை நிர்வகித்தனர். இவர்களே சின்னப்பள்ளியின் பராமரிப்புக்குழுவாக 1960கள் வரை கடமையாற்றி வந்தனர்.   இவர்களில் சிலர் இறந்து விட்ட போதிலும் நிர்வாகம் தொடர்ந்து இக்குழுவில் எஞ்சியோரிடம் இருந்து வந்தது. இறுதியாக 1972இல் மர்ஹும் முஹிதீன் தம்பி தலைமையிலான  சின்னப்பள்ளி நிர்வாக சபையிடம் காட்டுப் பள்ளியின் நிர்வாகமும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இப்பள்ளியில் மாற்றங்கள் ஏதாவது செய்யப்பட வேண்டுமாயின் மர்ஹும் முஹிதீன் தம்பி குடும்பத்தினரதும் மர்ஹும் சேகுமதார் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் அனுமதியுடனேயே செய்ய வேண்டும்.  
கட்டிடமாக எழும்பிய பள்ளிவாசல்

இருந்த போதிலும் அதிகமான மக்கள் பெரிய பள்ளிவாசலுக்கும் மானிப்பாய் வீதி முஹிதீன் பள்ளிக்கும் தமது தொழுகைகளை நிறைவேற்றச் சென்றனர். நாளடைவில் பள்ளியில் மக்கள் தொகை அதிகரித்தது.  இவ்வாறாக காலவோட்டத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்து 1967களில் அக்கொட்டிலில் இடம் போதாமல் போய்விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு வாலு மரைக்கார் முஹதீன் தம்பி என்பவர் பள்ளிவாசலை பெரும் கட்டிடமாக கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மஹல்லாவாசிகளை ஒன்று சேர்த்து ஒரு மசூரா நடத்தினார். இதனடிப்படையில் பள்ளியை கட்டுவதற்கான ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது.  ஆரம்பத்தில் இந்தக் குழுவில்  மர்ஹும்களான முஹிதீன் தம்பி, புகாரி காக்கா, வி.எம்.எஸ். முத்துராசா, முஹம்மது சாகிபு மதார் (பட்டறை), முஹம்மத் சரீப்  போன்றவர்கள் இருந்தனர். அவர்கள் தமது முயற்சியைக் கொண்டு பள்ளிவாசலின் தொழுமிடத்தை 20 அடி அகலமானதாகவும் 43 அடி நீட்டமானதுமாக கட்டி முடித்தனர். இந்நிலையில் நளீம் ஹாஜியாரிடம் நன்கொடைக்காக சென்ற சமயம் அவர் 1969ஆம் ஆண்டளவில் 15000 ரூபாவைக் கொடுத்து சென்றவர்களை அசத்தி விட்டார். அந்த நன்கொடையைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சின்னப்பள்ளியின் முன்னாலுள்ள டோம்களுடன் கூடிய கட்டிடம். இந்த பகுதி தற்போதும்   அழிக்கப்படாமல் காணப்படுகிறது.

இக்கட்டிடம் கட்டிய 1969 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். அக்காலத்தில் பள்ளிக்கான தூண்களை அமைப்பதற்காக குழியொன்றைத் தோண்டிய போது பல வருடங்களுக்கு முன்னர் அடக்கப்பட்ட ஜனாஸா ஒன்றே புத்தப்புது ஜனாஸாவைப் போன்று அகப்பட்டது. அந்த ஜனாஸா பள்ளியின் பக்கத்தில் அடக்கப்பட்டது. இது தற்போதுள்ள இத்ரீஸ் அப்பா கபுறுக்கும் பள்ளியின் வலது பக்கமாக  பின்புறத்தில் உள்ள தூணுக்குமிடையில் அமைந்துள்ள இடமாகும். எனவே பள்ளியை மீளமைக்கும் குழுவினர் குறிப்பிட்ட அந்த இடத்தில் குழி தோண்டும் வேலைகள் எதுவம்  செய்யப்படாமல் பார்த்துக் கொண்டனர்.

மேலும் பள்ளியைக் கட்டும் குழுவினரும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் அறிந்து கொள்ள  வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சின்னப்பள்ளி மஹல்லாவாசிகளான அப்துல் காதர் கண்டும் அவருடைய சகோதரர் சுல்தான் கண்டும் சேர்ந்து தான் சோனகத் தெருக்கூடாக பிணங்களை கொண்டு செல்லும் செயலை முதன்முதலாகத் தடுத்தவர்கள். அவர்கள் மறைந்த பிறகும் பிணத்தை சோனகத் தெருவுக்கூடாக கொண்டு செல்ல யாரும் முனையவில்லை. இந்நிலையில் 1960களில் ஒரு முறை  ஒரு பிணத்தை மேளச் சத்தத்துடன் கொண்டு வந்த நேரம் சாகுல்ஹமீத் அப்துல் காதர் (முத்துராசா) என்பவரும் அவருடைய சகோதரர் சாகுல்ஹமீத் அப்துல் கபூர் என்பவரும் எதிர்த்ததால் பிணத்தை அப்படியே போட்டுவிட்டு வந்தவர்கள் ஓடி விட்டனர் பலமணி நேர சமரசப் பேச்சு வார்த்தையின் பின்னர் தான் அப்பிணம் அங்கிருந்து அகற்றப்பட்டது. அவ்வுடன்படிக்கையின் பிரகாரம் பிணங்கள் சோனகதெருவினூடாக கொண்டு செல்லக் கூடாது என இணங்கப்பட்டிருந்தது. பிணம் முஸ்லிம் பிரதேசத்தால் கொண்டு செல்ல தடுக்கப்பட்ட காரணம் பிணத்தை கொண்டு செல்லும் சங்குகளையும் நாதஸ்வரத்தையும் ஊதி மேளங்களை அடித்து பெரும் சப்தமெழுப்பப் படும். இது பெரும் இடையூராக விளங்கியதால் முஸ்லிம்கள் அதனைத் தடுத்தனர்.
சின்னப்பள்ளியின் கட்டிட கலை அலங்காரங்கள்

சின்னப்பள்ளியின் கட்டிட அலங்காரங்கள் அழகானவை. காலத்தால் பிந்தியது என்பதால் புதுவிதமான கட்டிட நுட்பங்கள் பாவிக்கப்பட்டு அதனுடைய டோம் மற்றும் மினாராக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டிட கலைஞர் நாகமணி என்பவர் தான் மர்ஹும் முஹிதீன் தம்பி மற்றும் ஓ.எஸ்.எம். அப்துல் கபூர் ஆசிரியர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மிகநுனுக்கமான கட்டிட அழங்காரங்களைச் செய்தவராவார். மேல் மாடியில் அமைந்துள்ள மூன்று டோம்கள் மிகவும் நுனுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டோம்களுக்கான அறை வடிவங்களும் மேல் மாடியிலுள்ள சுற்று மதில் வடிவமும் மிக அழகாக செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய கலையம்சத்துடன் கூடிய பிறைகள் அந்த சுற்று மதிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் மனாராவில் காணப்பட்ட சில இஸ்லாமியம் அல்லாத கலை விடயங்கள் சில மீள்நிர்மாண குழுவால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  

மர்ஹும் முஹிதீன் தம்பி அவர்கள் மௌலவிக்கான அறையொன்றையும் வாடகைக்கு விடுவதற்காக இரண்டு அறைகளையும் அமைத்திருந்தார். முஹிதீன்  பிச்சை அப்துல் ரவுப் அவர்களும் சில மஹல்லாவாசிகளும் சேர்ந்து பள்ளிவாசலுக்கு வருமானம் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஐந்து அறைகளை பின்னர்  நிர்மாணித்தனர். தற்போது இந்த அறைகள் கட்டிட குழுவால் 2012இல் மீளக் கட்டப்பட்டுள்ளன.

முன்னாள் நிர்வாக சபையினர்

சின்னப்பள்ளியின் நிர்வாகம் 1960களில் மர்ஹும் முஹிதீன் தம்பி தலைமையிலான குழுவினரிடம் கையளிக்கப்பட்டது. இந்த ஆரம்ப நிர்வாகக் குழுவில் மர்ஹும் வாலு மரைக்கார் முஹம்மத் லெப்பை முஹிதீன் தம்பி, ஓ.எஸ்.எம்.அப்துல்  கபூர் ஆசிரியர், மர்ஹும்  புகாரி, மற்றும் மர்ஹும்  முத்து ராசா, மர்ஹும் கட்டபாய்  இஸ்ஸதீன்  ஆகியோர் அங்கம் வகித்தனர். இந்த நிர்வாக சபையே மறைந்த அல்பிரட் துரையப்பாவின் உதவியுடன் குளங்களுக்கு மேல் கொங்கிறீட் கூரைகளை இட்டனர்.  1979இல் மர்ஹும்  எம்.எஸ்.சுல்தான், எம்.எஸ்.சுகார்னோ, எம்.இஸ்மத், மர்ஹும்  எம்.அப்துல் கையும் ஆசிரியர், மர்ஹும்  வி.எம்.முத்துராசா மற்றும் மர்ஹும் கட்டபாய்  இஸ்ஸதீன் ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

வக்பு சபையின் வேண்டுகோளுக்கிணங்க 1984ஆம் ஆண்டு வக்பு சபையில் சின்னப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டது. 1984ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பள்ளிக்கான பதிவிலக்கமாக சுஃ0566ஃதுஃ11 வழங்கப்பட்டது.  இந்தக்காலத்திலிருந்த  நிர்வாக சபையே பொதுமக்களின் பணவுதவியுடன் பள்ளிவாசலின் இடது புறமாக ஒஸ்மானியாக் கல்லூரியின் பக்கம் வரை பள்ளிவாசலை விஸ்தரித்து கட்டியவர்கள் ஆவர்.
சமூக சேவையில் சின்னப்பள்ளி

புதிய சோனகத் தெரு (பொம்மைவெளி) பிரதேசத்துக்கு நண்ணீர் தேவைக்காக பெண்களும் சிறு பிள்ளைகளும் சின்னப்பள்ளியின் நண்ணீர் கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுப்பது வழக்கம். இதற்காக வேண்டி அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு யுனிசெப் நிறுவனத்தை அனுகி அவர்களின் மூலம் குழாய்க் கிணறு ஒன்றையும் தண்ணீர்த் தாங்கி ஒன்றையும் சின்னப்பள்ளி வளாகத்தில் அமைத்துக் கொடுப்பதில் ஜனாப் ஏ.சி. மஹ்ரூப் ஆசிரியர் அவர்களும் மர்ஹும்  எஸ்.எம். ஜகுபர் அவர்களும் பெரும் பங்காற்றினார்கள். யுனிசெப்பின் ஏழு நீர்த் தாங்கிகளை யாழ்ப்பாணத்தில் அமைக்கும் திட்டத்தின் கீழ் பொம்மைவெளிக்கு ஒரு நீர்த் தாங்கியை அமைத்துத் தர அப்போதைய யாழ் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் அவர்கள் தானாக முன்வந்து செயலாற்றினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நீர்த் தாங்கி யுனிசெப்பின் பிரதிநிதி கொல்கொட் என்பவரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.   இந்த தாங்கிக்கு தண்ணீர் நிரப்புதல் மற்றும் தண்ணீரை பொம்மைவெளி நோக்கிய குழாய்களுக்கு திறந்து விடுதல் போன்ற பணிகளை மர்ஹும் சுல்தான் அவர்களே  கொடுப்பனவுகள் எதுவும் பெறாமல் செய்து வந்தார்கள்.

குளத்தடி பள்ளியை மையமாக வைத்து இயங்கிய ஜனாஸா நலன்புரிச் சங்கத்தில் ஆரம்பகால உறுப்பினர்களாக எம்.பி.அப்துல் ரவுப், மர்ஹும் அப்துல் கையூம் ஆசிரியர், ஜெஸீம், ரிபைன் சலீம் ஆகியோர் இருந்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து  பல  வசதி குறைந்தவர்களின் மையத்துக்களை எடுப்பதற்கு உதவி செய்துள்ளனர். பிற்காலத்தில் முஹிதீன் தம்பி . நஸார், மர்ஹும் ஏ.எம்.ஜலீஸ் ஆகியோர் முன்னின்று வசதி குறைந்த மையத்துக்களை அடக்குவதற்கான செலவுகளை பகிர்ந்து கொண்டனர். 
   
 1987இல் எம்.எஸ்.ஜமாலிக், ஏ.எம்.  நஜீப் (தாடி) , கச்சு முஹம்மத் சுல்தான், மர்ஹும்  அப்துல் வஹாப் லாபீர், சேகுமதார்  குவைஸ் (குபாஸிஸ்) ஆகியோர்  நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இச்சபை  செயற்பாடுகள் அற்றதாகக் காணப்பட்டது.
மர்ஹும் சுலைமான் லெப்பை மரைக்கார் லெப்பை

மர்ஹும் சுலைமான் லெப்பை மரைக்கார் லெப்பை அவர்கள் இந்தப் பள்ளிவாசலில் நீண்ட காலம் பணியாற்றிய ஒரு பேஷ் இமாமாவார். இவர் பெரும் உலமாவாக இல்லாத விடத்தும் இஸ்லாமிய சட்டங்களை நன்கு தெறிந்து வைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் உலமாக்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காலகட்டத்தில் ஐங்காலத் தொழுகை, பெருநாள் தொழுகை, திக்ர் மஜ்லிஸ்கள் போன்ற அமல்களை திறம்பட தலைமை தாங்கினார். சுபுஹு தொழுகையில் அர்ரஹ்மான், சூரத்துல் முல்க் போன்ற சூராக்களை இவர் ஓதும் அழகைக் கேட்டால் உள்ளம் புள்ளரிக்கும். இவருடைய இந்த ஓதுதலைக் கேட்டு மேற்படி சூராக்களைப் பாடமாக்கியவர்கள் பலர் உள்ளனர். மேலும் இவர் பள்ளிவாசலின் சுற்றாடலை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பதுடன் வாகனத் தறிப்பிடத்துக்கான கட்டணங்களை அறவிடல், அறைகளின் நிர்வாகித்தல் போன்றவற்றையும்  திறம்பட மேற்கொண்டார்.  தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மார்க்கம் சம்பந்தமான சில சொற்பொழிவுகளையும் இவர் நிகழ்த்துவார். மேலும் தான் வாசிப்பவற்றில் மக்களுக்கு பயனுள்ள விடயங்களையும் ஜமாஅத்  தொழுகையின் பின்னர் எழுந்து நின்று பள்ளியில் சமூகமளித்துள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வார். இதனால் சின்னப்பள்ளி மஹல்லாவாசிகள் மார்க்க விளக்கங்களிலும் சிறந்து விளங்கினர்.
பித்அத் மூட பழக்கவழக்கங்களை ஒழிப்பதில் சின்னப்பள்ளியின் பங்களிப்பு

யாழ் சின்னப்பள்ளிவாசலை அண்டிய பிரதேசம் மையவாடியாக காணப்பட்டதால் கப்றுகள் தொடர்பான  சில மூடப்பழக்கவழக்கங்கள் இங்கே காணப்பட்டன. கப்றுகளின் மேல் கல்லுகள் பதித்தல், கப்றுகளை சுற்றி தூண்கள் அமைத்து விளக்கு ஏற்றுதல், எண்ணை ஊற்றுதல், கப்ரில் உள்ளவர்களுக்காக நாரிஸா வழங்குதல் போன்ற சில மூடப்பழக்க வழக்கங்களை மக்கள் மேறகொண்டனர். தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேல் காலணித்துவ ஆட்சியின் கீழ் இலங்கையிருந்ததாலும் போர்த்துக்கீஸர் காலத்தில் முஸ்லிம் உலமாக்கள் மற்றும் தலைவர்கள் கொல்லப்பட்டதாலும் படிப்படியாக இஸ்லாமிய செயற்பாடுகள் எது மாற்றுதமத செயற்பாடுகள் எது என்பது மக்களுக்கு விளங்கவில்லை. 1700களில் கப்றுகளை கட்டிடமாக கட்டி அதனை புனிதமாக கருதும் பாரசீக மக்கள் இலங்கையில் காலடி வைத்தனர். அவர்களை அறபிகள் எனக்கருதிய இலங்கையர் அவர்களின் பழக்க வழக்கங்களை அப்படியே காப்பியடித்தனர். பாரசீகர்கள் மரணித்த தமது செய்குகளுக்காக அவர்களின் கப்றுகளின் மேல் கட்டிடங்களை கட்டினர். அதனை இலங்கையர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர். இந்தப் பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணத்திலும் ஊடுறுவி கப்றுகளை அழங்கரிக்க  மக்கள் முயற்சித்தனர். இந்தக் காலப்பகுதியில் கேரள மற்றும் காயல் பட்டிண முஸ்லிம்களின் சில தொடர்புகள் யாழ்ப்பாணத்துடன் காணப்பட்டதால் இங்குள்ள முஸ்லிம்கள் கப்று வணக்கத்தில் ஒரேயடியாக மூழ்கிவிடவில்லை. அதிகமான யாழ்ப்பாண  மக்கள் கப்று வணக்கம் ஷிர்க்கான பழக்க வழக்கம் என்பதை அறிந்திருந்தனர்.

இருந்த போதிலும் கபுறுகளை கற்களால் கட்டுதல், விளக்கேற்றுதல் போன்ற செயல்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 1978களில் யாழ் சின்னப்பள்ளிவாசலில் கடமையாற்றிய பரீத் மௌலவி என்பவர் இந்த பழக்க வழக்கங்களும் மார்க்கத்துக்கு முரணானது என்று கூறவே சின்னப்பள்ளிவாசல் வாலிபர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கப்றுகளின் மேல் கட்டப்பட்டிருந்த கற்களையும் தூண்களை உடைத்தெறிந்தனர். பிரதேசவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த மையவாடியின் ஒரு பகுதியில் அநாதை மையத்துக்களை அடக்கம் செய்து பிரதேசவாதத்தையும் உடைத்தெறிந்தனர். 1978களில் தற்போதுள்ள பல இயக்கங்கள் இல்லாத நிலையிலேயே இஸ்லாத்தைப் பற்றிய தெளிவு சின்னப்பள்ளி வாலிபர்களிடம் இருந்துள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. மேலும் கப்றுகளில் அடக்கப்பட்டுள்ளவர்களிடம் துஆ கேட்பது கூடாது என்பதை இப்பிரதேச பெண்கள் கூட அறிந்து வைத்திருந்தனர். இப்பிரதேசத்தில் காணப்பட்ட சண்டித்தன சூழ்நிலையும்  சின்னப்பள்ளி மையவாடியில் மூடப்பழக்க வழக்கங்களை மக்கள் செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

2012இல் பள்ளிவாசலின் ஒருபகுதியாக இருந்த ஸியாரம் ஒன்று உடைக்கப்பட்டு மையவாடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூடப்பழக்க வழக்கங்களை முற்றாக ஒழித்த முதல் பள்ளிவாசல் என்ற பெருமையை சின்னப்பள்ளி பெறுகின்றது.  

சின்னப்பள்ளிவாசலை மீளமைக்க வேண்டுமென்ற கோரிக்கை  தனிப்பட்டவர்களாலேயே முன்வைக்கப்பட்டது. பள்ளியை கட்ட வேண்டுமென்ற தனிப்பட்ட கலந்துரையாடல்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவர் கட்டித் தருகிறார் இவர் இத்தனை கோடி ஒதுக்கியிருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டு பள்ளிவாசல் கட்டுவது சம்பந்தமான சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டன. ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேற்பட்ட இழுத்தடிப்புகளின் பின்னரே அவ்வாறான கட்டுகதைகளில் உண்மையில்லை என்பதை உணர முடிந்தது. இதன் பின்னர் தான் நீர்கொழும்பில் குடியேறியிருந்த பள்ளியின் மஹல்லாவாசிகள் சிலர் தனிப்பட்ட முறையில் கதைத்து பள்ளியை கட்ட ஏதாவது செய்ய வேண்டுமென பரஸ்பரம் வேண்டுகோள்களை விடுத்தனர். இந்த வேண்டுகோள்கள் இறைவன் உதவியால் செயல்வடிவமான கூட்டமாக மே 29, 2011இல் நீர்கொழும்பில் நடந்தேறியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்களுக்கூடாகவே 'சின்னப்பள்ளிவாசல் மீளமைப்புக்குழு' உருவாக்கப்பட்டது.

பள்ளிவாசல் மீளமைப்புப் பணி

பள்ளிவாசலை மீளமைப்பதற்கான அனுமதிக் கடிதத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களம் 11.07.2012 அன்று வழங்கியது. அதனையடுத்து பள்ளிவாசலையும் அதன் அறைகள் மலசலகூடம் என்பவற்றை மீளமைக்கும் பணி ஜனவரி 27, 2012 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அறைகளையும் மலசல கூடங்களையும் அமைத்து தொழக்கூடியவர்களை உள்வாங்கி விட்டு பள்ளிவாசலை திருத்த  வேண்டுமென்ற திட்டத்துக்கு அமைய அறைகளும் மலசலகூடமும் அமைக்கப்பட்டன. இவற்றுக்காக 17 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டது. அறைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்டு சனப்புளக்கம் வந்து  பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டதன் பின்னர் பள்ளிவாசல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 
  
பள்ளிவாசல் வேலைகள் 2012 ஏப்ரில் மாதம் 13ஆம் தொடங்கியது. பள்ளிவாசலின் பழைய கட்டிடத்தொகுதியிலிருந்த சுவர்கள் வலுவிழந்து போயிருந்ததால் அச்சுவர்களை உடைத்து மீள நிர்மானிக்க வேண்டியிருந்தது. இதன் பிரகாரம் பள்ளியின் வலப்புறத்திலும் இடப்புறத்திலிமிருந்த சுவர்கள் உடைக்கப்பட்டு மீளக்கட்டப்பட்டன. அத்துடன் ஆறு தூண்களும் புதிதாக அமைக்கப்பட்டு அதிலேயே கோப்பிசம் நிற்பாட்டப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மாடியை அமைப்பதாயின் இந்த தூண்களின் மேலேயே அதனை அமைக்கக் கூடியவாறு பலமான தூண்களாக அவை அமைக்கப்பட்டுள்ளன. பள்ளியின் நிலப்பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்ததால் அதன் மேல் புதிய கொங்கிறீட் இடப்பட்டு அதன் மேலேயை மாபிள் கற்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிட தொகுதிக்கான வரைபுகள், திட்டமிடல்கள், பணவசூலிப்பு என்பன எம்.எம்.முஸாதீக், எம்.எஸ்.எம்.ஜான்ஸின், எம்.எஸ்.ஜினூஸ், எம்.எஸ்.எம்.மலீக், ஏ.கே. சைரக், ரி.எம்.இப்திகார், எம்.ஏ.சி. சனூன், எஸ்.ஏ.சி. நிலாம்தீன்  போன்றவர்களால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இக்கட்டிடப் பணிக்கான பொருட்களை வாங்குதல் மேசன்மாருடன் தொடர்புகளை பேணுதல் கட்டிடப் பணியை மேற்பார்வை செய்தல் போன்ற மிகவும் கஷ்டமான பணிகளை உயிரை பணயம் வைத்து  எஸ்.ஏ.சி. நிலாம்தீன் அவர்கள் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.  எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஈருலக வாழ்க்கையிலும் வெற்றியைக் கொடுப்பானாக!

கடந்த மார்ச்சு இறுதி வாரம் தொடக்கம் எம்.எஸ்.ஜின்னா அவர்களும் நிலாம்தீன் அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார். ஜின்னா கட்டிட பணியை மேற்பார்வை செய்ததுடன் பள்ளியின் மஹல்லாவாசிகளை பள்ளியுடன் தொடர்பு படுத்தி மீண்டும் ஜமாஅத் தொழுகைகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார். தற்போது பள்ளியில் மஹல்லாவாசிகள் அறைகளில் வசிப்போர் உட்பட பதினைந்து பேரளவில் தொழுகைகளை நிறைவேற்றுகிறார்கள். 

மீளத் திறப்பு விழா

மீளக்கட்டப்பட்ட சின்னப்பள்ளி வாசல் 2012 ஜுலை 15ஆம் திகதி உத்தியோக பூர்வமாக மஹல்லாவாசிகளிடம் கையளிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு சிறப்பு அதிதிகளாக அஸ்செய்க் அப்துல் சத்தார் (ஹாசிமி), அஸ்செய்க் அப்துல் முனாப் (ஹாசிமி) மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் மற்றும் பல உலமாக்கள் சமூகத் தலைவர்கள் மஹல்லாவாசிகள் ஊர்வாசிகள் நன்கொடையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிவாசலின் சகல கட்டடங்களையும் அமைப்பதற்கான செலவாக ஏறக்குறைய 37 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான உதவிகளை மஹல்லாவாசிகள், யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள், சதகதுல் ஜாரியா (பிரித்தானியா), யாழ் முஸ்லிம் சங்கம் (பிரித்தானியா), பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களும் யுனைடட் அரப் எமிரட்ஸ், கட்டார், ஓமான், குவைட், சவுதி அரேபியா வாழ் முஸ்லிம் சகோதரர்களும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
     
இவைகள் யாழ் சின்னப்பள்ளிவாசலின் வரலாற்றுத் தடங்களாக நினைவு கூறப்பட வேண்டியவை. இந்த எமது கட்டுரையில்  பல விடயங்கள் விடுபட்டிருக்கலாம். சின்னப்பள்ளிவாசல் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விடயங்கள் இருப்பின் அவற்றை எமக்கு தெரியப்படுத்தினால் அவற்றையும் நாம் வெளியிட தயாராகவிருக்கின்றோம் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.

மீளக்குடியேறியுள்ள ஒரு சமுதாயம் தனது வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இந்நூல் வெளியிடப்படுகிறது. மனிதர்கள் தவறுகளுக்கு அற்பாற்பட்டவர்கள் அல்ல. எனவே, யா அல்லாஹ்! இந்த சின்னப்பள்ளிவாசல் கட்டிட மீளமைப்புப் பணிகளிலும் அதன் செயற்படுத்தல்களிலும்  ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருப்பின்  அவற்றை மன்னித்தருள்வாயாக! இந்தப் பள்ளிவாசலை அதிகமான மக்கள் பேணுதலுடன் தொழக்கூடிய ஒரு பள்ளியாக ஆக்கித் தருவாயாக! எமது குறைகளையும் குற்றங்களையும் மண்ணித்து பள்ளியை கட்டுவிக்க நாம் எடுத்த முயற்சிகளை அங்கீகரிப்பாயாக! எமக்கு பணவுதவி, பொருளுதவி மற்றும் ஆலோசனைகள், வாழ்த்துக்கள் போன்றவற்றைச் சொல்லி எம்மை உற்சாகப்படுத்தி எமது பணி வெற்றியடைய உதவியவர்களின் வாழ்க்கையை நீ வளம்படுத்துவாயாக! மேலும் அவர்களுக்கு ஈருலக பாக்கியங்களையும் கொடுப்பாயாக!

ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



2 comments:

  1. யுத்தச் சிதறல்களால் சேதப்படுத்தப்பட்ட எம் குளத்தடி சின்னப்பள்ளிவாசலின் மீள் உருவாக்க பணி தொடர்பான பார்வை சிறப்பாகவுள்ளது. யாழ் முஸ்லீம் இணையத்தளதின் சேவை தொடரட்டும். உரிய காலத்தில் உரிய செய்திகள் தொடர்பான ஆழமான பார்வையைப் பதிப்பதில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் பெரும் பங்காற்றி வருகின்றது...உங்கள் பணி தொடரட்டும் !

    ReplyDelete
  2. 1990 இற்குப் பின்னர் பாழடைந்து போயிருந்த சின்னப் பள்ளிவாசலை
    உயிர்ப்பித்த மவ்லவி பைசர் மதனியின் பெயர் ஏன் இந்தக் கட்டுரையில்
    இடம் பெறவில்லை?

    மேலும் சகோதரர் சுவைஸ் ஹாமீம், ஜெலீல் ஆசிரியர்
    ஆகியோரின் பெயரும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    (இதையாவது இரட்டடிப்பு செய்யாமல் பிரசுரிக்கவும்)

    ReplyDelete

Powered by Blogger.