Header Ads



சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட்ட கணவரை மீட்டுத்தாருங்கள் - மனைவி உருக்கம்

சவூதி அரேபியாவில் தனது அறையில் புத்தர் சிலையை வைத்து வணங்கியதற்காக சவூதி பொலிஸாரினால் ஷரிஆ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனது கணவன் சார்பில் தலையிட்டு அவரை மீட்க வேண்டுமென அவரது மனைவி சஞ்சனி சமரக்கொடி அதிகார பீடங்களிடம் கேட்டுள்ளார்.

தனது கணவன் 3 வருட ஒப்பந்தகாலம் முடிந்து விரைவில் நாடு திரும்பவுள்ள வேளையில் இந்த சிக்கலில் அகப்பட்டுள்ளதாக திருமதி சமரக்கொடி கொழும்பில் நடந்த ஊடகவியலாளருடனான சந்திப்பின் போது கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முறைப்பாடு செய்ததாகவும் ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார். தனது சார்பிலும் தனது இரண்டு பிள்ளைகள் சார்பிலும் உயர் அதிகாரிகள், உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தனது கணவனை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

'பொதுபல சேன' நிறுவனத்தின் போசகரான வண.கிராம விமலஜோதி தேரர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டில் வேலை செய்வோரில் 75 சதவீதமானோர் பௌத்தர்கள் எனவும் அவர்கள் வேலைக்கு செல்லும் நாட்டில் காணப்படும் சமய சட்டங்கள் பற்றிய விளக்கமின்றி செல்வதால் அப்பாவித்தனமாக பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் எனவும் கூறினார்.

சமய சுதந்திரம்பற்றி ஐ.நாவில் தீர்மானங்கள் பல உள்ளபோதும், இலங்கையினால் தனது பிரஜைகளுக்கு உண்டாகும் இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வு காண முடியாது உள்ளது எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.