'ஊடக சுதந்திரம்' என்ற கோஷம் மக்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகிறது
TM
செய்தி இணையத்தளங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வகையில் ஊடகங்கள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்யவுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகவில்லையெனவும் அமைச்சரவையின் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
'ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகவில்லை. மக்களுக்கான பதிலளிக்கும் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனைக் கருத்திற்கொண்டே அனைத்து செய்தி இணையத்தளங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமென நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
இரு இணையத்தளங்கள் முற்றுகையிடப்பட்டமை தொடர்பில் சர்வதேச மற்றும் உள்ளூரின் எதிர்ப்பை டெய்லிமிரர் சுட்டிக்காட்டியபோது, நாட்டின் சூழ்நிலை தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்கை மீறியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்த இணையத்தளங்களை பதிவுசெய்யுமாறு கூறுவது பயமுறுத்தலாகக் கொள்ளப்படலாமெனச்; சுட்டிக்காட்டப்பட்டபோது அது அவ்வாறில்லையெனவும் அமைச்சர் கூறினார்.
'ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் இந்நாட்டின் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். பல இணையத்தளங்கள் 'ஊடக சுதந்திரம்' என்ற கோஷத்தை மக்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துகின்றன. அது நடக்க எம்மால் அனுமதிக்க முடியாது. அச்சுறுத்தல்கள் தொடர்பான ஊகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. ஏனெனில் அது ஊகங்களின் அடிப்படையிலான பதிலாகிவிடும்.' எனவும் அவர் கூறினார்.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் டெய்லிமிரர் சுட்டிக்காட்டியபோது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் முனைப்பாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 'நீதிச் செயன்முறை நடைபெறுகின்றது. எம்மால் ஒரே இரவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது. இக்குற்றச்செயல்கள் தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரிந்தால், எங்களுக்கு தெரிவிக்க முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.' என அவர் கூறினார்.
இவ்விரு இணையத்தளங்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே முற்றுகையிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
Post a Comment