Header Ads



இனங்களுக்கிடையில் உள்ள குறுகிய எண்ணங்களைத் தோற்கடிப்பது அவசியம் - மஹிந்த


தினகரன்

இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு சாராரும் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையில் உள்ள குறுகிய எண்ணங்களைத் தோற்கடிக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களைக் கூட தனியே பிரித்து வேறு எவரும் வரக்கூடாது என்ற சிந்தனையில் இருந்து கொண்டு இன நல்லிணக்கம் பற்றி பேச முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்தினால் மட்டும் முடியாதென்றும் அதற்கு மதத் தலைவர்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

பயங்கரவாதம் தலை தூக்கியிருந்த காலத்தில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது மட்டும் போதாது. இதனால் நாம் நிரந்தரமான ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாதென்பது எமக்குப் புலப்பட்டது.

அதனால் இந்த விடயத்தில் மேலும் ஆழமாக சிந்திக்க முற்பட்டோம். இதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவுகள் இருந்தாலும் ஒவ்வொரு இனத்தின் உள் பிரச்சினைகள் அந்த இனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது என்பதை உணர்ந்தோம். அதனால் நாம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சை மாற்றி சமூக ஒருமைப்பாட்டு அமைச்சை ஏற் படுத்தி அதற்கு பொருத்தமான அமைச்சர் ஒருவரையும் நியமித்துள்ளோம்.

இப்போது இந்த அமைச்சு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைப் போன்று நாட்டின் சகல பிரஜைகளுக்கிடையிலும் சமத்துவத்தை ஏற்படுத்துவதை நடைமுறைப்படுத்தி வருகிறது. விரிவான சிந்தனையுள்ள மனிதர்கள் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கிடையில் மோதல்கள் மற்றும் பல்வேறு வேறுபாடுகள் ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்கின்றன. எனினும், அதற்கான தீர்வுகள் அந்தந்த காலத்திலேயே எட்டப்பட்டுள்ளன.

மிருகங்களுக்கிடையில் பேதங்கள் இருந்தாலும் மனிதர்களுக்கிடையில் பேதமிருக்கக் கூடாது என புத்த தர்மம் போதிக்கின்றது. இது இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகத்திற்கும் பொருத்தமானது. இதுவே சகல மதங்களினதும் உபதேசமாகிறது. இத்தகைய போதனை கேட்பது மட்டுமன்றி அவற்றைப் பின்பற்றுவது முக்கியமாகும்.

இதனை அரசியல்வாதிகள் ஆரம்பிக்க வேண்டும். சமூகத்திற்கு நாம் முன்மாதிரியானவர்களாகத் திகழ வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பதற்காக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சில அரசியல்வாதிகள் இனங்களுக்கிடையில் இன, குல பேதங்களை ஏற்படுத்துகின்றனர்.

இனங்களுக்கிடையிலான பிரச்சினை ஒருபுறமிருக்க எமக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உண்டென்பது இதன் மூலம் தெளிவாகிறது. இரு தரப்பினரும் தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க இனங்கள் என்ற முறையில் ஒன்றிணைவது முக்கியம். நாம் இரு சாராரும் ஒன்றிணைந்து எம்மிடமுள்ள தவறுகள் பிரச்சினைகள் மற்றும் இனங்களுக்கிடையில் உள்ள குறுகிய உணர்வுகளைத் தோற்கடிக்க வேண்டும்.

நான் 1970 இல் இளம் பாராளுமன்ற உறுப்பினராக வந்தபோது ஒவ்வொரு தொழில்கள் பெயரில் உருவான குலப் பெயர்கள் இருந்தன. இத்தகைய கிராமங்களும் இருந்தன. இத்தகையவற்றை மாற்றியமைக்க நாம் தனி நபர் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தோம். மக்களுக்கிடையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் அத்தகைய உணர்வுகள் அன்று போல இன்றும் எம்மிடம் உள்ளன.

இனங்களுக்கிடையில் சமத்துவத்தை நாம் சிறு பராயத்திலிருந்தே ஏற்படுத்த வேண்டும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என நாம் பாடசாலைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசுகிறோம். சிறு வயது முதலே தனியாக வாழக் கற்பிக்கப்படுகிறது. சிறு பராயத்திலேயே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனை நாம் பாடசாலையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டி யது அவசியம்.

18-21 வயது வரை தமிழ், சிங்களம், முஸ்லிம் பாடசாலைகளில் தனித்து கல்வி கற்று பின்னர் நாம் ஒன்றிணைந்து ஐக்கியமாக வாழ்வது பற்றி பேசுவது விந்தையாகும். எமது பல்கலைக்கழகம் எமக்கு மட்டும் தான் வேறு எவரும் உட்புக முடியாது என்ற குறுகிய சிந்தனைகளில் நாம் உள்ளோம். அவ்வாறு சிந்தித்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

எம் மத்தியில் மதங்கள் குறித்த கெளரவம் மகத்தானது. நாம் மும்மொழி கொள்கையைக் கொண்டு வந்தது இனங்களுக்கிடை யிலான இடைவெளியை நிவர்த்தி செய் வதற்காகவே. மொழிகள் மிக முக்கியம். ஒருவருடன் அவரது மொழியில் பேசும் போது அவநம்பிக்கை தூரமாகிவிடுகின்றது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது என்பது அரசாங்கம் மற்றும் அமைச்சு மூலம் மட்டும் இயலாத விடயம். மதத் தலைவர்கள் மற்றும் எமது நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

நான் மஹிந்த சிந்தனையை வெளியிட்டபோது அதனை மெதமுலன சிந்தனை என கேலி செய்தவர்கள், தரக்குறைவாக பேசியவர்களும் உண்டு. மெதமுலன என்பது சாதாரண விவசாயிகள் வாழும் பிரதேசம். மெதமுலன சிந்தனை மூலம் கிராமங்களைக் கட்டியெழுப் புவதையே நாம் மேற்கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.