Header Ads



பௌத்த பிரித் ஓதும் நாட்டில்தான் தினமும் பாலியல் வல்லுறவுகள் - ஹரீன் எம்.பி.

நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் சிறைச் சாலைகளிலுள்ள வைத்தியசாலைகளில் சொகுசு "வார்ட்டுகளில்'' சுகபோகம் அனுபவித்து வருவதாகக் குற்றம் சாட்டும் ஐ.தே.க. வின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பௌத்த மத அனுஷ்டானங்களுடன் "நாள்'' ஆரம்பமாகின்றது. அதே அனுஷ்டானங்களுடன் அந் நாள் நிறைவு பெறுகிறது. இவ்வாறானதோர் நாட்டிலேயே பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தினம், தினம் பெண்கள் மீதான பாலியல் பலாத் காரங்களும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துச் செல்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் மட்டும் 5108 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 9447 முறைப் பாடுகள் கிடைத்துள்ளன.

16 வயதிற்கு குறைந்தவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் 1169 இடம்பெற்றுள்ளன். இவ்வாண்டு இது வரையில் இவ்வாறான சம்பவங்கள் 82 இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு இவ்வாறு குற்றச் செயல்கள் அதிகரித்திருந்தன. ஆனால் அவற்றைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதனால் இவ் வருடம் இது வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசாங்க தரப்பைச் சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் விசேடம் என்னவென்றால் நாட்டின் தலைவரின் பிரதேசத்திலேயே பெண்கள் மீதான பலாத் காரங்கள் அதிகமாக இடம் பெறுகின்றன.

அண்மையில் கிருலப்பனையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுவரையில் எதுவிதமான நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பதவி தராதரம் பார்க்காது, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆனால் தங்காலை, ஹக்மனை, அக்குரஸ்ஸ, கட்டுவன, போன்ற பிரதேசங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், சிறைச் சாலைகளிலுள்ள வைத்திய சாலைகளின் சொகுசு "வார்ட்டுகளில்'' தங்க வைக்கப்பட்டு சுக போகம் அனுபவிக்கின்றனர்.

நாட்டில் இவ்வாறான நிகழ்வுகள், இடம் பெறுகிறது. ஆனால் தர்ம இராஜ்ஜியத்தை உருவாக்க வந்த ஜாதிக ஹெல உறுமய மூச்சு விடாதுள்ளது. அதே போன்று மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சரும் இப்பிரச்சினைகள் தொடர்பில் மௌனத்தைக் கடைப் பிடிப்பதோடு எது விதமான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதுள்ளார். பௌத்த மத பிரித் ஓதலுடன் ஆரம்பமாகும் நாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நள்ளிரவு பிரித் ஓதலுடனே நிறைவு பெறுகிறது.

அவ்வாறானதொரு நாட்டில் பெண் பிள்ளைகள் புத்தகங்களைச் சுமந்து கொண்டு பாடசாலை செல்ல முடியாதுள்ளது. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். கடுமையான சட்டங்களை உருவாக்கி இவ்வாறான பிரச்னைகளைத் தடுக்க முயற்சிகளை மேற் கொள்ளாது தேர்தல்களை நடத்தி தமது ஆட்சித் தக்க வைத்துக் கொள்ளவே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.