அறபுலக மாற்றங்கள் குத்ஸினதும், அக்ஸாவினதும் விடுதலையுடனேயே முடிவடையும்
இ.த.
அறபுலகில் ஆரம்பித்திருக்கும் பாரிய மாற்றங்கள் குத்ஸினதும் மஸ்ஜிதுல் அக்ஸாவினதும் விடுதலையுடனேயே முடிவடையும் என பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயீல் ஹனிய்யா தெரிவித்துள்ளார். காஸாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அமீனில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புரிதல்கள் மாற்றமுற்று முதன்மைப் படுத்தும் அம்சங்கள் மாறி அரசியல் வரைபடங்களும் மாற்றமுற்று பழைய ஆட்சி ஒழுங்குகள் துாக்கி வீசப்பட்டுள்ள ஒரு காலப்பிரிவை நாம் அவதானிக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அறபுலக மக்கள் ஆட்சியின் கடிவாளத்தை தமது கைகளில் எடுக்கத் தீர்மானித்து விட்டனர். பூமியில் அட்டகாசம் புரிந்து திரிந்த சர்வாதிகார ஆட்சியாளர்களை துாக்கி வீசியுள்ளனர். இஸ்லாமிய கிலாபத் மீண்டும் வரமுடியாது என்பதை உத்தரவாதப்படுத்தும், ஸயோனிஸத்தின் இருப்பை தொடர்ந்து பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு ஆட்சி ஒழுங்கே அங்கு காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாட்சியாளர்கள் இஸ்ரேல் என்று சொல்லப்படும் ஒன்றை பாதுகாக்கவும் அதனை தொடர்ந்து நிலைக்கச் செய்யவுமான கூட்டிணைந்த வியூகங்கங்களை வகுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஹமாஸின் தலைமைகளை வரவேற்றமை அறபு வசந்தத்திற்கும், எகிப்து மக்களின் நம்பிக்கைக்கும், பலஸ்தீன மக்களின் பொறுமைக்கும் கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment