லிபியாவில் ஆட்சியை அமைக்க இஹ்வானுல் முஸ்லிமின் தீவிரம்
லிபிய பாராளுமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என லிபிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்திற்கு எதிர்வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள லிபரல்களை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லிபிய பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பிரதேச அடிப்படையில் பகுதிவாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி கிளர்ச்சிப் படையின் பிரதமராக செயற்பட்ட மஹ்மூத் ஜிப்ரிலின் கூட்டு அரசு முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
எனினும் 200 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களுக்கே அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. எஞ்சிய 120 ஆசனங்களும் சுயேச்சை வேட்பாளர்களிடம் பகிரப்படவுள்ளது. இதில் ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் தனிப்பட்ட வேட்பாளர்களாக இருந்தாலும் ஏனையோர் கட்சி சார்பானவர்கள் என கருதப்படுகிறது.
இந்நிலை தாம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை எதிர்பார்க்கிறோம் என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சியின் தலைவர் மொஹம்மட் சவான் குறிப்பிட்டுள்ளார்.
“ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகள் 40 வீத ஆசனங்களுக்கானவையே. இதில் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் அடுத்த 120 ஆசனங்களுக்கும் அவர்கள் போட்டியிடவில்லை” என்று மொஹமட் சவான் குறிப்பிட்டார்.
எனினும் ஐக்கிய கூட்டணி ஒன்றுக்கு கூட்டணி கட்சியின் தலைவர் ஜிப்ரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment