நேட்டோ படைகளை தாக்கப்போவதாக தெஹ்ரிக்-இ-தலிபான் எச்சரிக்கை
ஆப்கனில் உள்ள பன்னாட்டுப் படையினருக்குத் (நேட்டோ) தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தாக்கப் போவதாக பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பாதுகாப்புக் குழு அடங்கிய அமைச்சரவை குழு கூடி நேட்டோ படை வாகனங்களை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்தது. இதன் மூலம் இப்பிரச்னையில் 7 மாதங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டை நீங்கியது.
கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த அமெரிக்காவின் விமான தளத்தை உடனடியாக காலி செய்யுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது. அத்துடன் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு நேட்டோ வாகனங்கள் செல்வதற்கு நவம்பர் 26 முதல் தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டபோதிலும் இவ்வளவு காலமாக இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மெத்தனமாக இருந்தது.
தங்களது பொறுமைக்கும் எல்லையுண்டு என்று அமெரிக்க தரப்பில் உறுதியாக தெரிவித்த பிறகு, செவ்வாய்க்கிழமை கூடிய கூட்டத்தில் நேட்டோ படை வாகனங்களை அனுமதிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இக்கூட்டத்துக் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தலைமை தாங்கினார். மூன்று மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராணுவ தலைவர் ஜெனரல் அஷ்ஃபக் பர்வேஸ் கயானி, துணைப் பிரதமர் செüத்ரி பர்வேஸ் இலாஹி, வெளியுறவுத்துறை அமைச்சர் ரப்பானி கர், பாதுகாப்பு அமைச்சர் நவீத் கமார், முப்படைகளின் தளபதிகள் ஜெனரல் காலித் ஷமீம் வேய்ன், விமானப்படை தலைமை தளபதி தாஹிர் ரபீக், ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகிர்-உல்-இஸ்லாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு நேட்டோ வாகனங்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நேட்டோ படை வாகனங்களுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் அமெரிக்காவுடனான உறவு மட்டும் பாதிக்கப்படவில்லை. மாறாக நேட்டோவில் அங்கம் வகிக்கும் 49 நாடுகளுடனான உறவும் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதைத் தவிர்க்கவே வாகனங்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அபாயகரமான ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் ஆப்கனில் அமைதியை நிலைநாட்ட தேவையான பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான் எச்சரிக்கை: நேட்டோ வாகனங்களை நிச்சயம் தாக்குவோம் என்று தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் இஷானுல்லா இஷான் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் சாலை வழியாக ஆப்கன் செல்லும் வாகனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் என்று முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். தலிபான்களின் தாக்குதல் எவ்விதம் இருக்கும் என்பதை இனிதான் அவர்கள் உணர்வர்.
ஆப்கனில் உள்ளவர்களும் இஸ்லாமிய சகோதரர்கள்தான். அவர்களைக் கொல்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அச்செயலில் ஈடுபடுவோரை நிச்சயம் பழிதீர்ப்போம் என்று அவர் கூறினார்.
நேட்டோ வரவேற்பு: இதனிடையே பாகிஸ்தானின் இம்முடிவை வரவேற்பதாக நேட்டோ படையின் தலைவர் ஜெனரல் ஜான் ஆலென் வரவேற்றுள்ளார். பாகிஸ்தானின் இம்முடிவை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment