Header Ads



லிபியாவில் 40 வருடங்களுக்கு பின் தேர்தல் - இஸ்லாமியவாத கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு


TN

லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் முறையாக நாடு தழுவிய ரீதியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட முஅம்மர் கடாபி அரசு கடந்த ஆண்டில் கிளர்ச்சிப் படைமூலம் கவிழ்க்கப்பட்டு 9 மாதங்கள் கழிந்த நிலையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்புக்கான தேசிய காங்கிரஸிற்காக இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 200 ஆசனங்களுக்காக சுமார் 4000 தனிப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இதில் சுயாதீன வேட்பாளர்களாக 2,501 வேட்பாளர்கள் போட்டியி டவுள்ளதோடு கட்சி அடிப்படையில் 142 கட்சிகளின் 1,206 பேர் போட்டியிடவுள்ளனர். நாளைய தேர்தலில் வாக்களிக்க சுமார் 2.8 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே வெளிநாட்டிலுள்ள லிபிய பிரஜைகள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர்.

உள்நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நீடிக்கும் நிலையிலேயே லிபியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை யொட்டி நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் சனிக்கிழமை வரையிலான காலப் பகுதிக்கு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் மூலம் தேர்வாகும் தேசிய காங்கிரஸின் 200 உறுப்பினர்களும் ஆட்சியிலுள்ள இடைக்கால அரசின் பொறுப்பை ஏற்கவுள்ளது. இதன்படி தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் காங்கிரஸ¤க்கான புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளதோடு 30 தினங்களுக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தவிர, தேர்வாகும் தேசிய காங்கிரஸ் புதிய அரசியலமைப்புக்கான குழுவையும் தேர்வு செய்யவுள்ளது.

இதில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட எகிப்து, துனிஷியாவைப் போல் லிபியாவிலும் இஸ்லாமியவாதிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனினும் முஅம்மர் கடாபி ஆட்சிக்காலத்தில் அரசியல் செயற்பாடுகள் மற்றும் இஸ்லாமியவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டதால் அங்கு எந்த அமைப்பும் மக்கள் மத்தியில் ஊடுருவ முடியாமல் போனது.

குறிப்பாக எகிப்து, துனீஷியாவைப் போல் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு லிபியாவில் ஆழமாக ஊடுருவவில்லை. எனினும் அந்த அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்துக்குமான கட்சி நாளை தேர்தலில் போட்டியிட வுள்ளது.

அதேபோன்று முஅம்மர் கடாபி அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கிளர்ச்சிப்படையில் முன்னின்று செயற்பட்ட இஸ்லாமிய வாதியான அப்துல் ஹகீம் பல்ஹாஜும் அவரது கட்சியான அல் வதான் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவருக்கு அதிக மக்கள் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர லிபிய இடைக்கால அரசின் முன்னணி தலைவர் மஹ்மூத் ஜிப்ரீலின் தேசிய கூட்டணியும் நாளைய தேர்தலில் போட்டியிடுகிறது.

No comments

Powered by Blogger.