Header Ads



யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாசல் 22 வருடங்களின் பின்னர் மீளத் திறக்கப்படுகிறது



1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட காலம் முதல் கைவிடப்பட்டு சேதமடைந்திருந்த யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகளினதும் தனவந்தர்களினதும் முயற்சியால் மீளக்கட்டப் பட்டுள்ளது. மீள்கட்டுமானக் குழுவினால் கட்டி முடிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் பிரதான தொழுகை மண்டபம் அறைகள் மலசலகூடம் என்பன வருகின்ற 2012 யூலை 15 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ள வைபவத்தில் வைத்து பள்ளிவாசலின் நிர்வாக சபையினரிடமும் மஹல்லாவாசிகளிடமும்  உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

இதன் நிமித்தம் அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெறவுள்ள பள்ளிவாசல் மீள்திறப்பு விழாவில் அஸ்செய்க் சகரிய்யா மௌலவி மற்றும் அஸ்செய்க் அப்துல் சத்தார் மௌலவி ஆகியவர்களின் பயான் இடம்பெறும். இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கௌரவ அதிதிகளாக வக்பு சபைத் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன்,  யாழ் மாவட்ட செயலாளர் திரு. அருமை நாயகம், யாழ் மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம்.றமீஸ், மாநகர சபை உறுப்பினர்கள் எம். எப்.அஸ்கர், எம்.எஸ். முஸ்தபா, மௌலவி பி.ஏ.எஸ். சுபியான், யாழ் மாவட்ட உலமாசபை பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சின்னப்பள்ளிவாசலின் வேலைத்  திட்டங்கள் வெறும் கட்டுமானப்  பணியாக அல்லாமல் முஸ்லிம் வட்டாரத்தின் மையப்பகுதியில் சனப்புளக்கத்தை ஏற்படுத்துதல், ஒஸ்மானியாக் கல்லூரி பிரதேசத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுதல், மீளக்குடியேற்றத்தை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மீள்குடியேற்றத் திட்டமாகும்.

இந்த பள்ளிவாசலையும் அதனுடன் கூடிய அறைகள், மலசல கூடம், குளியலறைகள் என்பவற்றை கட்டுவதற்கான பணவுதவிகளை இலங்கையிலுள்ள தனவந்தர்களும், பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் சாரிடி சதகதுல் ஜாரியா, யாழ் முஸ்லிம் சங்கம், அமெரிக்காவில் வாழும் இலங்கைச் சகோதரர்கள், பிரான்ஸ் மற்றும் சுவிஸ் வாழ் சகோதரர்கள் சிலர்  உட்பட பலர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் யாழ் சின்னப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகள் பள்ளிவாசல் மீள்கட்டுமானத்துக்கு உதவி செய்தோர் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் சின்னப்பள்ளியின் மஹல்லாவாசிகள் அந்த பள்ளியின் மீது கரிசனையுள்ளோர் போன்ற அனைவரையும் இந்த மீள்திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சின்னப்பள்ளி மீள்கட்டுமான குழுவும், நிர்வாக சபையும் அன்குடன் வரவேற்கின்றனர்.

தகவல்:
எம்.எஸ்.ஜினூஸ்
தலைவர்- யாழ் சின்னப்பள்ளி நிர்வாக சபை 

No comments

Powered by Blogger.