இலங்கையில் 15 இலட்சம் பேர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
தினகரன்
பல்வேறு விதமான நிதி மோசடிகளில் ஈடுபட்டமை காரணமாக சட்ட நடவடிக்கைகள் மூலம் ‘கறுப்புப் பட்டியலில்’ உள்ளடக்கப்பட்டு மீண்டும் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாத நிலையில் சுமார் 15 இலட்சம் பேர் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் வங்கிக் கடன் மற்றும் கடன் அட்டை போன்ற கொடுப்பனவுகளை மீளச் செலுத்தாமை மற்றும் ஏனைய நிதி மோசடிகள் என்பன காரணமாக இவ்வாறு ‘கறுப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் கடன் அட்டை கொடுப்பனவுகளை மீளச் செலுத்தாமையால் சுமார் 5 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் ‘கறுப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது நீதிமன்றங்களில் தீர்க்கப்பட்டுவரும் வழக்குகளில் அதிமானவை கடன் அட்டை மோசடியுடன் தொடர்புடையவை எனவும் கூறப்படுகின்றது.
கடன் தகவல் பணியகத்தில் (CRIB) பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் தற்போது வங்கி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளோர் தொகை சுமார் 50 இலட்சம் பேரென கூறப்படுகின்றது.
மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 90 நிதி நிறுவனங்கள் ஊடாக மேற்படி தொகையினர் கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடு பட்டுள்ளனர். கடன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பிணையா ளர்களாக உள்ளவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
1990 ஆம் ஆண்டின் கடன் தகவல் பணியக (CRIB) சட்டம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் கடன் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரம் மேற்படி தரவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற அறிக்கைகளின் பிரகாரம் கடன் மற்றும் ஏனைய நிதி கொடுக்கல் வாங்கல்கள் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் பிணையாளர்கள் எனவும் கூறப்படுகின்றது.
எனவே, இவ்வாறு ‘கறுப்புப் பட்டியலில்’ பெயர் உள்ளடக்கப்பட்டவர்களுக்கு இந்நாட்டிலே அனு மதிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றிடம் இருந்து கடன் அல்லது ஏனைய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது காணப்படுகின்றனர். இதிலே மேலும் வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையினை கடனாகப் பெற்று மீளச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குக் தப்பிச் சென்றுள்ளவர்களும் இவர்களில் அடங்குவர்.
ஒருவர் கடன் தொகை ஒன்றினை பெற்றுக்கொண்டவுடன் கடன் பெற்றவர் மற்றும் பிணையாளர் ஆகியோரது அடையாள அட்டை இலக்கத்தினை கடன் தகவல் பணியகம் பதிவு செய்கின்றது. அதன் பின்னர் அக்கொடுக்கல் வாங்கல் முடிவடையும் வரையில் அனைத்து தகவல்களையும் கணனி மயப்படுத்தி பேணி வருகின்றது.
நாடளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து நிதி நிறுவனங்களும் கடன் தகவல் பணியகத்துடன் வலையமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் நபர் ஒருவருக்கு கடன் வழங்க முடியுமா அல்லது முடியாதா என்ற தகவல் பணியகத்தினால் பதிவு வைக்கப்பட்டுள்ள தகவல்களில் இருந்து நிதி நிறுவனங்கள் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். இத்தகவல்கள் மிகவும் இரகசியமான முறையில் பேணிவரப்படுவதுடன், விரும்பிய நபர்கள் தமது வங்கி கொடுக்கல் வாங்கல் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அதிலே வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment