இஹ்வானுல் முஸ்லிமின் ஜனாதிபதி முர்ஸிக்கு ரவூப் ஹக்கீம் வாழ்த்துச் செய்தி
எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த முஹம்மத் முர்ஸியின் வெற்றி, அரபுலகில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், முஹம்மத் முர்ஸி இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றி ஒழுகுவதன் ஊடாக நேர்மையான இஸ்லாமிய ஆட்சியாளர் எத்தகையவர் என்பதை உலகிற்கு உணர்த்தக் கூடியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கு அமைச்சர் ஹக்கீம் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இஹ்வானுல் முஸ்லிமூன் என்ற இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்) அவர்களினால் எகிப்தில் நிறுவப்பட்டதிலிருந்து ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட போதிலும், தடைகளை தாண்டி ஜனநாயக ரீதியாக மக்களால் அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான தாங்கள் தெரிவுசெய்யப்பட்டு வெற்றிவாகை சூடியுள்ளதையிட்டு இலங்கை முஸ்லிம்களின் சார்பிலும், இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்றுள்ள எனது தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் தங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக வெறும் பீதி மனப்பான்மையை தோற்றுவிக்கும் விதத்தில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போருக்கு தங்களது வெற்றி சாட்டையடியாக அமைய போகின்றது.
அத்துடன் தங்களுக்கு வாக்களித்தோருக்கு மட்டுமல்லாது, அனைத்து எகிப்தியருக்கும் தாங்கள் ஜனாதிபதி என்று குறிப்பிட்டுள்ளது தங்களது பெருந்தன்மையை நிலைநிறுத்துகிறது.
முழு உலகமும் எகிப்தை உற்று நோக்கிக் கொண்டிருப்பதோடு இஸ்லாத்தின் மகத்தான நெறிமுறைகளின் பால் தங்களது நாட்டை வழிநடாத்தி நாடுகள் அனைத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக தாங்கள் திகழ்வீர்கள் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
இஹ்வானுல் முஸ்லிமூன் தலைமைத்துவத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும், சுதந்திரத்திற்கும், நீதிக்குமான கட்சியின் உறுப்பினர்களுக்கும் எங்களது நல் வாழ்த்துக்களை எத்திவையுங்கள். எகிப்து மக்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்' என குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மத் முர்ஸி பிள்ளைகள் யாவருமே அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வாழ்பவர்கள். முர்ஸி அமெரிக்காவின் கைப்பாவையாக சிறப்பாக செயல்படுவார்.
ReplyDelete