Header Ads



எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பேன் - முஜீபுர் ரஹ்மான்

V

எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் முஸ்லிம் மக்களுக்காகவும் மதத்தின் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் எனது போராட்டங்களை கைவிடமாட்டேன் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது,

அனைத்து மதங்களும் தமது கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றுவதை அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மதக் கடமைகளுக்கு எதிராகவும் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபு ரஹ்மான் கூறினார்.

இதனைத் எதிர்த்தே நான் உட்பட உறுப்பினர் பைரூஸ் ஹாஜி, மேயர் முஸம்மில், கபீர் ஹாசீம், எம்.பி. போன்றோர் குரல் கொடுத்தோம். இன்று நாட்டில் ஒருவரை கொலை செய்வதென்பது இலகு விடயமாகும். எனவே பொலிஸ் மா அதிபர் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். எனக்கோ அல்லது எனது குடும்பத்தைச் சார்ந்த எவருக்காவது ஆபத்து ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜயலத் ஜயவர்தன எம்.பி. உரையாற்றுகையில்,

முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும், மதச் சுதந்திரத்திற்காகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அரசாங்கத் தரப்பால் “மரண அச்சுறுத்தல்’ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இது தொடர்பில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தூதரகங்களிற்கும், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், உறுப்பினருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ;

தம்புள்ளை, தெஹிவளை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தறை பள்ளிவாசல்களில் இடம்பெற்ற பிரச்சினைகளை அச்சமின்றி பகிரங்கமாக வெளியிட்டதோடு அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களையும் முஜிபுர் ரஹ்மான் நடத்தினார்.

அரசாங்கத்தில் பெரும் எண்ணிக்கையாகவுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிக்கும் போது மௌனமாக இருந்தார்கள். அரசாங்கத்திற்கு எதிராக எதனையும் கூறவில்லை. ஆனால் முஜிபுர் ரஹ்மான் குரல் கொடுத்தார். எனவே தான் இன்று மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தனக்குள்ள அச்சுறுத்தல் தொடர்பாக கட்சியின் செயலாளருக்கு உறுப்பினர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக கவனம் செலுத்தி இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து முறைப்பாடு செய்யவுள்ளோம். அத்தோடு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.
 
 

1 comment:

Powered by Blogger.