Header Ads



ஒரு மூத்த அமைச்சரின் வேதனை..!

இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்து ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட மூத்த அமைச்சர் அதாவுத செனவிரட்ன, தன் மீதான நடவடிக்கைகளுக்கு 'மேலிடத்து அழுத்தங்கள் தான் காரணம்' என்று கூறுகிறார்.

தனது தரப்பு நியாயத்தை கேட்காமலேயே தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மேலிடத்தில் இருந்துவந்த அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை உயர் அதிகாரிகளே தன்னிடம் கூறியதாக அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் உள்ள கொஹொம்பதெனிய என்ற கிராமத்தில், மலையைக் குடைந்து எடுக்கப்படும் நிலக்கீழ் நீரை போத்தலில் அடைத்து விற்கும் வியாபாரத்தில் சிலர் ஈடுபடுவதை தடுக்க முனைந்தபோதே தன்மீது தனியார் சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுவதாக அதாவுத செனவிரட்ன கூறினார்.

குறித்த நிலக்கீழ் நீர் வியாபாரத்துக்கு பிரதேச மக்களிடமிருந்தும் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததாகவும் அந்த வியாபார முயற்சியை நிறுத்துமாறு பிரதேச உள்ளூராட்சி சபை ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அனுமதியின்றி குடிநீர் போத்தல் வியாபாரத்தை நடத்த முனைந்த வீட்டின் உரிமையாளர்களிடம் கலந்துரையாடிவிட்டு வந்த தன்னை விளக்கமறியலில் அடைக்குமாறு காவல்துறையினருக்கு அரசின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்திருப்பதாக மூத்த அமைச்சர் குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால் அமைச்சரின் குற்றச்சாட்டை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.
சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்தமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அமைச்சர் அதாவுத செனவிரட்ன மற்றும் அவருடன் இருந்த 17 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்தார்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் இருப்பதாகவும் எந்தவித அழுத்தங்களும் இன்றி தாம் செயற்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.

இலங்கையில் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் ஒரு காலத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த 10 பேர் கடைசியாக நடந்த அமைச்சரவை மாற்றத்தின்படி, 'மூத்த அமைச்சர்கள்' என்ற அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்கள் தமக்கு போதிய அதிகாரங்களோ அல்லது பொறுப்புகளோ இல்லை என்று அண்மையில் வருத்தம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Pavam, enna seivadu adhiharam ponal appadiththan.

    MEEZAN

    ReplyDelete

Powered by Blogger.