நீர்கொழும்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு...!
தான் அணிந்து வந்த சப்பாத்தில் மறைத்துவைத்து ஹெரோயின் கடத்திவந்த யாழ் வாசிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன மரண தண்டனை விதித்ததுடன் தலைமறைவாகியுள்ள இவரைக் கைது செய்ய பகிரங்க பிடி ஆணையும் பிறப்பித்தார்.
1988.12.4 ஆம் திகதி இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யாழ். உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் சுதாகரன் (43 வயது) என்பவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்த போது அவர் அணிந்திருந்த சப்பாத்தின் அடிப்பாகத்தில் மறைத்து வைத்திருந்த ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 120.1 கிராம் ஹெரோயின் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றவேளையில் சந்தேகநபர் சார்பில் விண்ணப்பித்த பிணை மனு மூலம் சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பிணையில் விடுதலைசெய்யப்பட்ட இவர் வழக்குத் தவணைக்கு ஆஜராகாததால் அவர் இல்லாமலேயே விசாரணை இடம்பெற்றது. இவரின் வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
தலைமறைவான சந்தேகநபருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்ததுடன் அவரைக் கைது செய்யுமாறு பகிரங்க பிடி ஆணை பிறப்பித்தார்.
Post a Comment