உதுமாலெப்பை கொந்தராத்து அமைச்சரா..? கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளிதுமளி
செயிட் ஆஷிப்
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் சுமத்திய குற்றச் சாட்டையடுத்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் அரை மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த அமர்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண விளையாட்டு விழா தொடர்பிலான தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதன்போது கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முதலமைச்சரையும் எம்மையும் அவ்விழாவுக்கு அழைக்காமல் புறக்கணித்துள்ளார் என்று மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் விபரித்ததுடன் குறித்த அமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளும் முறைகேடாகவே இடம்பெறுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
"குறிப்பாக மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, ஜெயகா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகளையும் பாரிய ஊழல் மோசடிகளையும் செய்து வருகின்றார். அவர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்து கொண்டு கொந்தராத்து செய்கிறார். இந்த கொந்தராத்து அமைச்சரின் மோசடிகள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உண்டு" என்று மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கூறியபோது ஆத்திரத்துடன் குறுக்கிட்ட மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, இந்த குற்றச்சாட்டையும் கொந்தராத்து அமைச்சர் என்ற வார்த்தையையும் வாபஸ் பெறவேண்டும் என்று கர்ஜித்தார்.
இல்லை நான் வாபஸ் பெற மாட்டேன். நீங்கள் செய்யும் மோசடிகளுக்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நீங்கள் கொந்தராத்து அமைச்சர்தான் என்று பதிலுக்கு அக்ரோசித்தார் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல். இதனைத் தொடர்ந்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினர் சொற்போரில் குதித்தனர்.
மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கு ஆதரவாக முதலமைச்சர் சந்திரகாந்தன், ஆளும் தரப்பு மாகாண சபை உறுப்பினர்களான பிரசாந்த், புஷ்பராஜா ஆகியோரும் போர்க்கொடி தூக்கினர். ஜெமீல் தனது வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
அதேவேளை ஜெமீலுக்கு ஆதரவாக எதிர்த்தரப்பு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எஸ்.பி.மஜீத், ஜவாத் மற்றும் சசிதரன் போன்றோர் குரல் எழுப்பினர். இந்நிலையில் சபைக்கு தலைமை வகித்த பிரதித் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை அமைதிபடுத்த எடுத்த முயற்சிகள் கை கூடாததால் சபையை ஒத்தி வைத்தார்.
மீண்டும் அரை மணி நேரத்தின் பின்னர் தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலைமையில் சபை கூடியபோது மாகாண சபை உறுப்பினர் ஜெமீலிடம் தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தப்பட்ட போதிலும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து அடம்பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த தனிநபர் பிரேரணையை தனது தற்துணிவு அதிகாரத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்த தவிசாளர் பாயிஸ், அது தொடர்பிலான விவாதங்களை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறு பணித்து - இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
Post a Comment