டென்ஷனை குறைக்க புதிய 'பெல்ட்' கண்டுபிடிப்பு
டென்ஷனை போக்கி, மனதை லேசாக்கும் மின்சார பெல்ட்டை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பரபரப்பான வாழ்க்கை, பதற்றத்தை ஏற்படுத்தும் போக்குவரத்து ஆகியவற்றின் தாக்கம் வீடு மற்றும் வேலை பார்க்கும் இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தவிர அங்கு ஏற்படும் டென்ஷன்கள் தனி. மனஇறுக்கம், மனஅழுத்தம், டென்ஷன்.. இதெல்லாம் முளைச்சு மூணு இலை விடாத பொடியன்களுக்கும் இப்போதெல்லாம் இருக்கிறது.
வாய்ப்பாடு படிக்க சொன்னால் நாலாங்கிளாஸ் சுள்ளான்கூட டென்ஷன் ஆகிறான். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடக்கின்றன. மனஅழுத்தம், டென்ஷன் போன்றவற்றால் உண்டாகும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், மனஉளைச்சலை தீர்க்கும் வகையிலான ‘எலக்ட்ரிக் பேச்’ எனப்படும் மின்சார பெல்ட்டை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
மனஅழுத்தம், மனஉளைச்சல், டென்ஷன் ஆகியவை நாள்பட இருந்தால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவரை நிரந்தர நோயாளிகளாக மாற்றிவிடும் ஆபத்தும் உள்ளது. இதற்கு தொடர் சிகிச்சை அவசியம். கபாலத்தின் 5,வது நரம்பு என அழைக்கப்படும் டிரிகெமினல் நரம்பு, நெற்றிப் பொட்டின் கீழாக செல்கிறது. இந்த நரம்பை மூளையின் ‘யுஎஸ்பி போர்ட்’ என்பார்கள். மனிதனின் மனநிலைக்கு இந்த நரம்பின் செயல்பாடு முக்கிய காரணம். இதில் ஏற்படும் மாற்றங்கள்தான் டென்ஷன் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
பெல்ட் போல இருக்கும் ‘எலக்ட்ரிக் பேச்’ சாதனத்தை தலையில் அணிந்து கொண்டால் இதில் இருந்து வெளியேறும் அதிர்வு, டிரிகெமினல் நரம்பை மசாஜ் செய்யும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ‘எலக்ட்ரிக் பேச்’ சாதனத்தை சோதனை செய்து பார்ப்பதற்காக, மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் தேர்வு செய்யப்பட்டனர். தூங்கும்போது அவர்கள் இதை அணிந்துகொண்டனர். தினமும் 8 மணி நேரம் என 2 மாதத்துக்கு இதை அணிந்து தூங்கினர். அவர்களிடம் மனஅழுத்தம், மனஇறுக்கம், டென்ஷன் போன்ற பாதிப்புகள் பாதிக்கு பாதியாக குறைந்திருந்தது.
Post a Comment