Header Ads



கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசைப் புறந்தள்ளும் எந்த தீர்மானமும் அரசாங்கத்தை பாதிக்கும்


 அப்துல் ரசாக் (ஏறாவூர்) From London

கள நிலவரம் , ஊடகங்களின் அறிக்கைகள் , அரசியல் துறை சார்ந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண தேர்தலுக்கான புதிய பிரவேசம் ,அரசாங்கத்தின் தற்கால நகர்வுகள் என்பனவற்றை ஆய்வுக்குட்படுத்திப்பார்க்கின்ற பொழுது , கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் , அது அதன் முதலமைச்சர் கனவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகின்றது.

ஆனால் , அடுத்த வருடமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தும் , அதற்கு முன்கூட்டியே நடாத்தப்படுவதட்கான  காரணம் ஒரு திசை திருப்பும் முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகின்றது.  ஏனென்றால் இந்த அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சி , விலையேற்றம், அரசியல் தீர்வு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தமிழ் பிரதேசங்களில் சிங்கள உயர் அதிகாரிகளின் பரம்பல், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக , அவ்வப்போது உள்நாட்டுக்குள் பல திசை திருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு  வருவதை யாவரும் அறிவர். உதாரணத்திற்குச் சொல்லப்போனால் வெள்ளை வானில் ஆட்கடத்தல் , அமைச்சர் விமல வீரவன்சவின் உண்ணா விரதப் போராட்டம் , கிரிஸ் மனிதன் புரளி, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு, சரத் பொன்சேகாவை விடுவதா இல்லையா ? என்ற இழுத்தடிப்பு , ஜெனீவா பிரச்சினையில் மக்களை ஆர்ப்பாட்டங்களின் ஈடுபட வைத்தல் போன்ற காரணங்களைக் கூறலாம்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது அண்மையில் ஏற்பட்ட தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் கொதித்து எழுந்தனர். முஸ்லிம் காங்கிரசுத் தலைவர் ரவூப் ஹகீம் "ஜனாதிபதியுடனான நேரடிப் பேச்சு வார்த்தை தோல்விடையுமாயின் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டிவரும்" என்று எச்சரித்தார். ஆகவே முழு முஸ்லிம் தலைமைகளின் ஒரு இலக்குத் தளமாக இருந்து வரும் "கிழக்குத்" தளத்தில் ஒரு தேர்தலாம் என்று திசையைத் திருப்பி விட்டால் தம்புள்ளப் பள்ளி விடயத்தில் முஸ்லிம் தலைவர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைகளை கிடப்பில் போட்டுவிடலாம் என்ற நோக்கில் அரசாங்கம் இந்தத் தேர்தலை முன்கூட்டியே நடாத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் அபிப்ராயப்படுகின்றனர்.

ஜனாதிபதியுடனான நேரடிச் சந்திப்பு தோல்வியடையுமாயின் மு கா. அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எச்சரித்த ரவூப் ஹகீம், அண்மையில் காத்தான்குடியில் நடந்த  ஒருநிகழ்வில் " தம்புள்ள பள்ளி அகற்றப் படக் கூடாது , அதே இடத்திலேயேஇருக்க வேண்டும்ஆனால் நாம்அரசாங்கத்தில் இருந்து விலக மாட்டோம்." என்றுகூறினார்.  முஸ்லிம் காங்கிரசு  நேரடியாக ஜனாதிபதியை சந்திக்காமலே அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் என்று அவர் தெரிவித்திருப்பதில் இருந்து தேர்தல் புரளியில் முஸ்லிம் காங்கிரசும் அகப்பட்டுள்ளது என்பது தெரிகிறது  . தேர்தல் ஒன்று நடந்தால் , இந்த தம்புள்ளப் பள்ளிக்காக அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளும் பட்சத்தில் "POLITICS POWER " ஒன்று இல்லாமல் எவ்வாறு தேர்தலுக்கு முகம் கொடுப்பது என்ற  இக்கட்டான நிலையைப்பற்றி மாத்திரமே மு. கா. இப்போது யோசிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. சரி இப்போது கிழக்குத் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். 

பிள்ளையான் அணியின் பின்னடைவு:

 கடந்த முறை நடந்த (2008 ) கிழக்கு மாகான சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கொட்டமைப்புப் போட்டியிடவில்லை. இது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பான பிள்ளையான் அணிக்கு "விரால் இல்லாக் குளத்துக்கு குறத்தை ராஜா" போல் ஒரு  சாதகமாக இருந்தது. ஆனால் விரும்பியோ விரும்பாமலோ பெரும்பாலான தமிழர்கள், மாற்றுத் தெரிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினாலும் வாக்களிக்காவிட்டால் முஸ்லிம் ஒருத்தர் முதலமைச்சராகி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவும் பிள்ளையான் அணிக்கு வாக்களித்தனர். 07 ஆசனங்கள் கிடைத்தன . ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மிகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அணியென பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப் பட்டது. இப்போது கேள்வி என்னவென்றால் ,இந்த 07 ஆசனங்களையும் இம்முறை பிள்ளையான் அணி தக்க வைத்துக் கொள்ளுமா என்பதுதான். அன்று தமிழர் கூட்டமைப்பு தேர்தலில் குதித்திருந்தால் பிள்ளையான் அணி கட்டுக் காசைக்கூட பெற்று இருக்காத அளவுக்குத் தோல்வி அடைந்திருக்கலாம் . கடந்த பொதுத் தேர்தலில் அவர்களின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிள்ளையான் அணியினர், புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் நியாயங்களை தமிழர்களுக்கு நியாயப்படுத்துவதட்காயினும், இவர்கள் அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு  இதுவரை எந்த ஆக்க பூர்வமான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு பகரமாக ஆகக் குறைந்த மாற்றீடாகக் கருதுகின்றார்கள். இது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உறுதிபடுத்தப்பட்டிருந்தது. அமெரிக்கா ஜெனீவா பிரேரணையைக் கொண்டு செல்வதற்குப் பின்னணியில் நின்றவர்கள் இந்த கூட்டமைப்பினரே. இதனை திரு சம்பந்தரே ஒருதடவை ஒத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே இம்முறை தேர்தல் ஒன்று  நடந்தால் கிழக்குத் தமிழர்களின் கூட்டு மொத்தத் தெரிவாக தமிழர் கூட்டமைப்பே இருக்கலாம் எனவும் சொல்லப்படுகின்றது.. ஜெனீவா பிரேரணை முதல் அத்து மீறிய சிங்கள குடியேற்றம் வரை தற்போது குரல் கொடுக்கின்ற ஒரு அமைப்பாக தமிழர் கூட்டமைப்பு மாறிவருகின்றது. கிட்டத்தட்ட தமிழ் ஈழ புலிகள் அழிந்த பின்னர் அவர்களின் ஆவி உருவில் நடமாடும் ஒரு அமைப்பாகவே தமிழர்கள் தமிழ் கூட்டைப்பைக் கருதுகின்றனர்.

அ.இ .மு .காங்கிரசு மற்றும் தேசிய காங்கிரசின் நிலை:

 அமைச்சர்களான ரிசார்த் பதியுதீன், அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களின் மூலை முடுக்கெல்லாம் கூடுதலான ஆசனங்களை முஸ்லிம்கள் பெற்றால்" ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சர்" ஆவார் என்று பிரச்சாரம் செய்தனர். அரசாங்க அணிக்குள்ளேயே மிகக் கூடுதலான 08 ஆசனங்களை பெற்றும் கூட ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சர் ஆகவில்லை. அது இன்றும் கிழக்கு முஸ்லிம்களின் உள்ளங்களில் நீறு பூர்த்த நெருப்பாக, நீங்கா ஈறளாக இருந்து வருகின்றது. ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சரே என்று பிரச்சாரங்கள் செய்த அதே தோழமை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிள்ளையானை  ஜனாதிபதி, முதலமைச்சராக்க எடுத்த முடிவுக்கு பல்டியடித்து தொப்பியை மாற்றிப் போட்டனர். ஆக கூட்டு மொத்தத்தில் மீண்டும் இதே தலைவர்கள் முஸ்லிம்களிடம் வந்து ஜனாதிபதியவர்கள் இன்னாரை முஸ்லிம்கள் சார்பில் முதலமைச்சராக்க ஒத்துக்கொண்டுள்ளார் என்று என்ன முகத்துடன் பிரச்சாரம் செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆதலால் ,இம்முறை மேற்படி அரச தோழமை முஸ்லிம் கட்சிகளின் முஸ்லிம் முதலமைச்சர் பிரச்சாரமும் வேவாது என்றே தெரிகிறது.

  மேலும் , தம்புள்ள பள்ளிவாயல்,குருநாகல் ஆரிய சிங்கள அகதியாப் பாடசாலை, தெகிவள அகதியா பாடசாலை ஆகியவை சிங்கள தேரர்களால் முற்றுகை இடப்பட்டதன் மூலம் முஸ்லிம்கள் மிகவும் மனம் உடைந்து காணப்படுகின்றார்கள். இவற்றுக்காக ஜனாதிபதியோ அல்லது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத் தலைவர்களோ உத்தியோக பூர்வமாக முஸ்லிம்களின் நியாயத்தை நியாயப்படுத்தவில்லை. ரிசாட் பதியுதீந்தான் "ஜனாதிபதி தம்புள்ள மஸ்ஜித் அகற்றப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்துள்ளார்" என்று அறிக்கை விட்டுள்ளார். இதே பதியுதீந்தான் "ஜனாதிபதி ஹிஸ்புல்லாவை முதலமைச்சர் ஆக்குவதாக வாக்குறுதி தந்துள்ளார்" என்று தேர்தல் மேடைகளில் முழக்கமிட்டுத் திரிந்தவர். தம்புள்ள பள்ளிவாயல் விடயமாக ஜனாதிபதி நேரில் அறிக்கை விட்டாரா என்பதுதான் இன்று பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. போதாக்குறைக்கு பள்ளிவாயல்கள் தொடர்பான விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலம் கண்டறிவதற்கும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்ற செய்தியானது முஸ்லிம்களுக்கு "வெந்த புண்ணிலே வேல் பாய்த்தது" போல் இருக்கின்றது.

"முஸ்லிம்களின் விடயத்தில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுமாயின் அவசர முடிவுகளை எடுக்க வேண்டிவரும்" என்றும் அமைச்சர் ரிசர்த் பதியுதீனும் அண்மையில் "வேர் அறும் வலி" என்னும் கவிதை வெளியீட்டு விழாவில் அரசாங்கத்தை எச்சரித்திருந்ததைப்  பார்க்கின்ற பொழுது அரசாங்கம் முஸ்லிம்களின் இதயங்களில் பின்னடைவை எதிர்நோக்கி வருவது தெரிகிறது. 

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கின்ற பொழுது , சுதந்திர முன்னணி (அரசாங்க அணி) முன்னர் பெற்றுக் கொண்ட 20 ஆசனங்களையும் இம்முறை பெற்றுக் கொள்வதில் நிறையச் சவால்களை எதிர் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது

சரி , ஒரு உதாரனத்திட்கு அரசாங்க அணி 13 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என வைத்துக் கொள்வோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரசு 08 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்களையும் ஏனைய அணி அல்லது சுயேட்சைக் குழு 01 ஆசனத்தையும் பெற்றுக் கொள்வதாக ஒரு கற்பனைக்காக எடுத்துக் கொள்வோம். இதில் அரசாங்க அணிக்கு மிகக் கூடுதலான ஆசனங்களும் மு.கா.வுக்கு அதி குறைவான ஆசனங்களுமே ஒரு ஒப்பீட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்.
அனுமான அடிப்படையில் எதிர்வு கூறப்படும் ஆசனங்கள்:-
கட்சி /அணி                        ஆசனங்கள்              

அரசாங்க அணி                        13           (பிள்ளையான்  அணி ,ரிசார்ட் பதியுதீன் அணி, அதாவுல்லாஹ் அணி)
தமிழ் தே.கூ.                              11

மு. கா.                                        08
ஐ.தே.க.                                      04

சுயேச்சை குழு                          01

கிட்டத்தட்ட இதைத் தழுவிய  ஆசன அமைப்பு நிலைதான் எதிர்வருகின்ற மாகான சபைத் தேர்தலில் எட்டப்படும்  என்றே  பலரும் எதிர்பார்க்கின்றனர்  . இந்த நிலையில்  அரசாங்கம்  கூடிய ஆசனங்கள் பெற்றுக் கொண்டமைக்காக ஆட்சியமைக்க முற்படுமாயின்  உடனடியாக முஸ்லிம் காங்கிரசு தமிழ் தேசிய தேசியக் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்தப் பார்க்கும். தம்மைக் கணக்கில் எடுக்காமல் தான்தோன்றித் தனமாக செயற்பட்ட அரசாங்கத்தைப் பழிவாங்க தனக்கு கிடைத்த ஒரு  அரிய சந்தர்ப்பமாக மு.கா. இதனைப் பயன்படுத்தும்.

அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது?

அமெரிக்காவினால்  கொண்டுவரப்பட்டுள்ள ஜெனீவா பிரகடனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ,வட கிழக்கு தாயகம் இணைந்தே இருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களின் கொள்கையில் இன்னும் நிலைத்து இருப்பது மட்டுமல்லாமல்  கிட்டத்தட்ட அரசாங்கத்தின் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் பெரும் தலையிடியாக இருந்து வருகின்ற   தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் கிழக்கு மாகாணத்தை தாரை வார்த்துக் கொடுப்பதைப் பற்றி  இந்த அரசாங்கம் யோசிக்கப்போகின்றதா   அல்லது தனது அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்து கொண்டு அவ்வப்போது அரசாங்கம் எதிர் நோக்குகின்ற இன்ப துன்பங்களிலெல்லாம்  தன்னை அர்ப்பணித்து சகிப்புத் தன்மையுடன் கருமமாற்றுகின்ற முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் வேட்பு மனுவைப்பற்றி இந்த அரசாங்கம்  யோசிக்கப் போகின்றதா? என்பதுதான் இன்று அரசாங்கத்தைச் சுட்டி நிற்கின்ற பெரும் கேள்விகளாகும். தமிழர் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்று அரசாங்கத்துக்குத் தெரியாது .ஆனால் முஸ்லிம் காங்கிரசு என்ன செய்யப் போகின்றது என்பது அரசாங்கத்துக்கு தனது பங்காளி என்ற அடிப்படையில் நன்கு தெரியும் என்று  அவதானிகள் கருதுகின்றனர் . ஒரு ஆங்கிலப் பழமொழி ஒன்றின் மூலம் இதனை இவ்வாறும் சொல்லலாம். "known devil is better than unknown angel ". அதாவது தெரியாத மலக்கை விட தெரிந்த ஷைத்தான் நல்லம் .

ஆகவே ,எது எப்படியாயினும் இந்த முறை நடக்கப் போகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் " முஸ்லிம் காங்கிரசைப் புறம் தள்ளி விட்டு எடுக்கும் எந்தத் தீர்மானமும் அரசாங்கத்தின் முதலமைச்சர் கனவுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும்  ".

No comments

Powered by Blogger.