ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற சவூதி அரேபிய பெண்களுக்கு அனுமதி
BBC
ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற முதல் முறையாக சவுதிப் பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒலிம்பிக்ஸில் பங்குபெற தகுதி பெற்றுள்ள தமது நாட்டு பெண் வீராங்கனைகளின் பங்கேற்பை சவுதி ஒலிம்பிக் அமைப்பு மேற்பார்வை செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் ரீதியான பாகுபாடு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதிலிருந்து சவுதி அரேபியா தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன என்று எழுந்த ஊகங்களுக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெளிப்படையாக பங்குபெறுவது சவுதி அரேபியாவில் இருக்கும் அடிப்படை மதவாதிகளால் இன்னமும் எதிர்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் பெண்கள் வெளிப்படையாக விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவது என்கிற ஒரு வழக்கம் இல்லை.
லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னமும் சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரை சவுதி அரேபியாவிலிருந்து மகளிர் பிரிவில் பங்குபெற தகுதி பெற்றுள்ள ஒரே ஒருவர் தல்மா ருஷ்டி மல்ஹார் மட்டுமே.
அவர் குதிரையேற்றப் போட்டியில், ஷோ ஜம்பிங் பிரிவில் பங்கேற்கவுள்ளார். எனினும் பல பெண்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அவ்வாறு அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தேர்தெடுக்கப்பட்டால், தங்களது கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் அவர்கள் உடையணிய வேண்டும் எனவும் சவுதி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நடைமுறை ரீதியில் பார்த்தால், அந்த உடை கௌரவமான வகையிலும், உடலை ஒட்டியிருக்காத வகையிலும் அமைந்திருக்க வேண்டும். மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு என வடிவமைக்கப்பட்ட ஹிஜாபும் அணிந்திருக்க வேண்டும் என்று சவுதி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விளையாட்டுக்கான ஹிஜாப் என்பது, முகத்தை மறைக்காமல் தலைமுடியை மட்டும் மறைத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பாலைவன தேசமான சவுதி அரேபியாவிலிருந்து பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது என்பது மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.
கடந்த ஆறு வாரங்களாக இது தொடர்பில் திரைமறைவு நடவடிக்கைகளில் சவுதி மன்னர் அப்துல்லா ஈடுபட்டிருந்தார். சவுதி சமூகத்தில் ஆக்கபூர்வான வகையில் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் எனும் கருத்தை அவர் முன்னெடுத்து வந்தார்.
மன்னர் அப்துல்லா, பட்டத்து இளவரசர், வெளியுறவு அமைச்சர் மற்றும் நாட்டின் தலைமை மதகுரு ஆகியோருடன், பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவது குறித்து இரகசியமாக இந்த மாதம் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் எதிர்ப்புகள் இருந்த நிலையிலும் சர்ச்சைகுரிய ஒரு விஷயத்தில் சீர்திருத்தத்துக்கான ஒரு நடவடிக்கையை மன்னர் அப்துல்லா ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனினும் சவுதி அரேபியாவில் 1960 களில் தொலைக்காட்சி ஒளிபரப்பையும், பெண்களுக்கு கல்வி பயில்வதையும் அறிமுகம் செய்த மன்னர் ஃபைசல் படுகொலை செய்யப்பட்டதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்றைய நிலையில், சவுதியில் ஆண்களை விட பெண்களே கூடுதல் அளவில் பட்டதாரிகளாக உள்ளனர் என்பது யதார்த்தமாக உள்ளது.
Post a Comment